அவனுள் அவனாகி

தன்னுள் சோகத்தினை

உருட்டி கொண்டே இருந்தான்.

உருண்டு திரண்டு கடினமாகி

பந்தாய் வடிவமெடுத்து நின்றது அது.

 

ஆளற்ற மலைப்பிரதேசங்களில்

அலைந்து

சதை இறுகி

எலும்புகள் துருத்தி

கல்லும் மண்ணுமாய் மாறி போனான்.

 

தன்னில் இருந்து விலகி பார்க்க முயன்றான்.

சருகும் கல்லும் தூசியும் வானமும் நான் தான் என

இயைந்து வாழ விழைந்தான்.

 

பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது

அவனது சோகம்.

விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது.

தன்னுள் நுழைந்து தேடும் போது

தேடுபவனாய் மாறி போயிற்று.

 

மழை ஓய்ந்த தினமொன்றில்

ஓடையில் கால்கள் கிடக்க

வானத்தில் பேசும் நட்சத்திரங்களை

இமை கொட்டாமல் பார்த்தபடி

அவனது உயிர் பிரியும் வரை

வழி எதுவும் கிடைத்திருக்கவில்லை.