சுனாமி பீதி

சுனாமி பீதி – புகைப்படங்கள்

இன்று மதியம் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது ஓர் இளைஞர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசரம் அவசரமாக வெளியே வருவதைப் பார்த்தேன்.

“பில்டிங்கே ஆடுது,” என்று அந்த இளைஞர் மொத்தமாய் தெருவைப் பார்த்து சொன்னபோது அவர் குடிபோதையில் இருக்கிறாரா என்று மனதில் தோன்றியது. ஆனால் அதே சமயம் பல கட்டிடங்களில் இருந்து பலர் வெளியே அவசர அவசரமாய் வருவதைப் பார்த்தவுடன் சின்ன அளவிலான நிலநடுக்கம் வந்திருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் சென்னையே பரபரப்பானது.

இந்தோனிசியாவில் 8.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் இந்திய கிழக்கு கடற்கரை முழுவதும் சின்ன அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும், சுனாமி வரக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவந்தன.

மெரீனா கடற்கரைக்கு போன போது அங்கு காவல்துறையினர் கடற்கரை மணலில் இருந்தவர்களையெல்லாம் அவசர அவசரமாய் வெளியேற்றி கொண்டிருந்தனர். அலுவலகத்தில் இருந்தும் பள்ளிகளிலும் இருந்தும் மக்கள்கூட்டம் வேக வேகமாய் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்து நிறுத்தங்களில் பெருங்கூட்டம். சாலைகள் எல்லாம் நிரம்பி வழிய தொடங்கின. எல்லாரும் சொந்த பந்தங்களுக்கு போன் போட்டு பேச ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் பெரும்பாலான செல்போன் இணைப்புகள் செயல்படவில்லை.

மெரீனா கடற்கரையோரம் நிறைய பிரஸ் வண்டிகள் சுற்றி கொண்டு இருந்தன. ஆங்காங்கே மைக்கோடு நியூஸ் சேனல் ஆட்கள் சுற்றி கொண்டு இருந்தார்கள். இதைத் தாண்டி கடற்கரையை ஒட்டிய சாலையோரம் நடைப்பாதையில் நிறைய பேர் நின்று கொண்டு கடலை உற்று பார்த்தபடி நின்றிருந்தனர். ஏதேனும் ஓர் அலை கொஞ்சம் உயரமாக வருவது போல தெரிந்தாலும் சலசலப்பு கூடியது. காவல்துறையினர் மைக்கெல்லாம் பிடித்தப்படி கூட்டத்தை விரட்ட படாதபாடு பட்டனர்.

“சீக்கிரம் போங்க,” என்று ஒரு மனைவி பயத்துடன் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த கணவரிடம் பயத்துடன் சொல்லி கொண்டிருந்தார். கணவரோ கடற்கரையோரம் திரண்டிருந்த கூட்டத்தையும் கடலையும் வேடிக்கை பார்த்தவாறு மெதுவாக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தார்.

பட்டினம்பாக்கம் பக்கம் நிலைமை மோசமாக இருந்தது. 2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

பெசன்ட் நகரில் பெரிதாய் கூட்டமில்லை. கடற்கரையை ஒட்டிய சாலைகளைக் கூட மூடிவிட்டார்கள். நாற்பது ஐம்பது பேர் சாலைகளில் இருந்து விலகி தூரத்தில் தெரிந்த கடலை உற்று பார்த்தபடி நின்று இருந்தனர். பெரும்பாலானோர் அந்தக் கூட்டத்தைப் பார்த்து கிண்டலாய் சிரித்தபடி கடந்து போனார்கள். அப்படிப் போனவர்களில் பலர் சில நிமிடங்களில் அவர்களே திரும்பி வந்து கூட்டத்தோடு நின்று கொண்டார்கள்.

இரண்டாவது முறை சென்னையில் சின்ன நிலநடுக்கம் வந்தது. சாலையிலும் தெருவிலும் கூட்டம் கூட்டமாய் குடும்பம் குடும்பமாய் நிறைய பேர் திரள தொடங்கினார்கள்.

நிறைய சிரமப்பட்டவர்கள் காவல்துறையினர் தான். பெண் போலீசார் கடற்கரையில் ஆங்காங்கே இருந்தவர்களையெல்லாம் சல்லடை போட்டு கண்டுபிடித்து வெளியே விரட்டினார்கள். ஓர் ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டி கடற்கரை சாலையில் சுனாமி அறிவிப்பினைச் சொல்லியபடி இருந்தார்கள்.

“ஐந்தரை மணிக்கு சுனாமி வர இருப்பதால் மக்கள் யாரும் கடற்கரை பக்கம் தயவு செய்து போக வேண்டாம்,” என்பதை அந்தக் காலத்து சினிமா தியேட்டர் விளம்பரம் பாணியில் சொல்லி கொண்டிருந்தது ஓலிபெருக்கி குரல்.

ஒரு கணவனும் மனைவியும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த தங்களது தள்ளுவண்டியைக் கடற்கரை மணலில் இருந்து கஷ்டப்பட்டு சாலைக்குத் தள்ளி கொண்டு வந்தார்கள். சாலைக்கு இந்தப் புறம் பெரும் கூட்டமும் அந்தப் புறம் ஆள் நடமாட்டமே இல்லாத சூழலில் அவர்கள் இருவர் மட்டும் பல நிமிடங்கள் இன்ச் பை இன்ச்சாக தள்ளு வண்டியை தள்ள கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக தங்களது வண்டியைச் சாலைக்கு கொண்டு வந்து இந்தப் பக்கம் வந்தவுடன் கொஞ்ச நேரம் தங்களை அசுவாசபடுத்தி கொண்டு பிறகு கூடியிருந்த கூட்டத்தில் தங்களுடைய வியாபாரத்தினை ஆரம்பித்தார்கள்.

பி.கு: நல்ல வேளை சுனாமி வரவில்லை.

ஒருபுறம் காலி கடற்கரை மறுபுறம் வேடிக்கை பார்க்க நிற்கும் கூட்டம். இடம்: பெசன்ட் நகர் கடற்கரை

சுனாமி அபாய அறிவிப்பு வெளியான பின்பு கடற்கரையில் அதிகரிக்கும் கூட்டம். இடம்: பெசன்ட் நகர் கடற்கரை

சுனாமி அறிவிப்பிற்குப் பின் காலியான பெசன்ட் நகர் கடற்கரை

மெரீனா கடற்கரையில் சுனாமி அறிவிப்பிற்குப் பின் கடலைப் பார்க்கும்படி நிற்கும் கூட்டம்

சுனாமி அறிவிப்பிற்குப் பின் மெரீனா கடற்கரை

சுனாமி அறிவிப்பிற்குப் பிறகு கடற்கரைக்குப் போகும் பாதையை அடைத்து விட்டார்கள். இடம்: மெரீனா கடற்கரை.