“காலம் மாறிடுச்சு, இப்ப சாதியெல்லாம் யார் சார் பாக்குறாங்க?” மத்திய வர்க்கத்தினர் உரையாடல்களில் தவறாமல் யாராவது ஒருவர் இப்படி சொல்வதுண்டு. நகரங்ளிலும் தொடர்ந்து தலைவிரித்தாடும் சாதி வெறி, கிராமத்தில் இன்னும் தொடரும் அடக்குமுறை அவலம் என சாதி மனோநிலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினாலும் அது பெரிதாக விவாதங்களுக்கு வந்து சேர்வதில்லை.
“இப்போ அங்காங்கே நடக்கிறதை வைச்சு சாதி வெறி சாதி வெறின்னு சொல்லாதீங்க சார். இண்டர்நெட், செல்போன் காலத்துல அடுத்த தலைமுறையில சாதி உணர்வெல்லாம் சுத்தமா இருக்காது சார்.” இதுவும் அந்த உரையாடலின் போது சொல்லப்படுவது தான். அடுத்த தலைமுறையில் சாதி உணர்வு குறைந்து இருக்குமா? இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடும் போது நிறைய அதிர்ச்சி தகவல்கள் தான் கிடைக்கின்றன.
தலித் மாணவர்களைத் தாக்கும் சக மாணவர்கள்
இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த மாதம் மதுரையருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் ஒரு பதினெழு வயது தலித் மாணவன், கிராமத்தில் தலித் மக்கள் உலவ தடை விதிக்கப்பட்ட ஓர் இடத்தில் (?) உட்கார்ந்து இருந்த காரணத்தினால் கடுமையாக தாக்கப்பட்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது ஆகியிருக்கிறார்கள். கைதானவர்களில் ஒருவன் பதினெழு வயதேயான பள்ளிக்கூட மாணவன்.
இந்த மாதம் நடந்த இன்னொரு சம்பவத்தில் தலித் மாணவர்கள் அம்பேத்கர் வாழ்த்து பாடல்களைப் பாடியதால் கோபமுற்ற சாதி இந்து மாணவர்கள் அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தவர்களை பஸ்ஸில் வைத்தே அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள். இதிலும் கைதானவர்களில் இருவர் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள்.
மாணவர்களிடையே சாதி உணர்வு அதிகரிக்கிறது
மதுரையில் எவிடென்ஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் கதிர் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில் சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தலித் மாணவர்களைத் தாக்கும் போக்கு அதிகரிக்கிறது என சொல்லி இருக்கிறார்.
பொதுவாக இந்த வகை தாக்குதல்கள் உள்ளூரிலே பஞ்சாய்த்து செய்யப்பட்டு பெரும்பாலும் தலித் மக்களுக்கு விரோதமாக முடிவெடுக்கப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். மீறி வெளியுலகுக்குத் தெரியும் சம்பவங்களே அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன என்றால் மறைக்கப்பட்டவை வெளியில் வந்தால் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை.
பள்ளிக்கூடமும் கல்வியும்
ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் தீண்டாமை ஒழிப்பு வாசகங்கள் முதல் பக்கத்தில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனால் அதைத் தவிர சாதி ஒழிப்பு பற்றி விரிவான கல்வி பள்ளியில் இருப்பதில்லை. இன்றும் சாதி உணர்வு எப்படி எல்லாம் தலைவிரித்தாடுகிறது என்கிற உண்மைகளைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அதை வகுப்புகளில் விவாதிக்க வேண்டும் என்கிறார்கள் மாற்று கல்வியை முன்வைப்பவர்கள். ஆசிரியர்கள் மத்தியில் சாதி உணர்வு இருப்பதை எப்படி தவிர்ப்பது என்று அடுத்த கேள்வி எழுகிறது.
சாதி உணர்விற்கு எதிரான பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் தேவைப்படும் நேரமிது. ஆனால் உரையாடல்களில், “காலம் மாறிடுச்சு, இப்ப எல்லாம் யார் சார் சாதியைப் பாக்குறாங்க,” என்று தான் பேசுகிறார்கள்.
பிரச்சனைக்கான தீர்வு முதலில் அந்தப் பிரச்சனை உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்பு கொள்வதிலே தொடங்குகிறது.
Leave a Reply