இலங்கை புத்த துறவிகள் – வன்முறை எங்கே இருக்கிறது?
அமெரிக்காவிற்கு எதிரான போராட்டம்

அமெரிக்க பொருட்களை வாங்காதீர்கள் என கோஷமிட்டப்படி செல்கிறார்கள் புத்த துறவிகள். எதுவெல்லாம் அமெரிக்க பொருட்கள் என்று பட்டியலிடுகிற நோட்டீஸை மக்களுக்கு வினியோகிக்கிறார்கள். இன்று செய்திதாள்களில் அந்தப் புத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தினைப் புகைப்படங்களாய் பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அகிம்சையைப் போதிக்கிற புத்த மதத்தில் போர் குற்றம் செய்த அரசினை ஆதரிக்கிற புத்த துறவிகள் எப்படி உருவானார்கள்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான சபையில் இலங்கையினைப் போர் குற்றவாளியாக அமெரிக்கா சித்தரித்து விட்டது என்கிற கோபத்தில் புத்த துறவிகள் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டத்தினை நடத்துகிறார்கள் என்கின்றன செய்திகள். இல்லையில்லை, இந்தப் புகைப்படமே இலங்கை அரசின் யுக்தி தான் என்கிறார்கள் சிலர். அமெரிக்க வர்த்தகத்தின் மீது கண்ணிற்கு தெரியாத தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அரசு பணிந்து போகும் என்பதால் நடத்தப்படும் நாடகம் இது எனவும் சொல்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான துவேஷத்தை நூறு ஆண்டு காலமாய் வளர்த்ததில் புத்த துறவிகளுக்கு கணிசமான பங்குண்டு என்கிறார்கள் இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள். அரசாட்சியில் மட்டுமல்லாமல் சமூக அளவில் தங்களுக்கான அதிகாரத்தினைத் தக்க வைப்பதற்காக புத்த துறவிகள் இந்த ‘வெறுப்பு’ மறைமுக அரசியலைப் பல காலமாய் நடத்துகிறார்கள், அதில் வன்முறையை ஏவி விடுதலும் ஒன்று என்கிறார்கள்.

புத்த துறவிகளின் இந்தப் போராட்டத்தைப் பார்க்கும் போது போர் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது ராஜ பக்ஷே மட்டும் தானா என்கிற கேள்வி எழுகிறது. சமீபத்தில் இலங்கையில் நடந்த பொது தேர்தலில் ராஜ பக்ஷேவை மீண்டும் தேர்ந்தெடுத்த சிங்கள மக்களின் பெரும்பான்மையோர் இந்தப் போர் குற்றத்தினை ஆமோதித்து அல்லவா வோட்டினைக் குத்தியிருக்கிறார்கள். குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட பிறகு மீண்டும் நரேந்திர மோடி தேர்தலில் வென்றார். குஜராத்திய மத்திய வர்க்கத்தினர் மனதில் முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷம் கொட்டி கிடப்பது தான் மோடியின் வெற்றிக்குக் காரணம் என்றார்கள் அங்குள்ள அரசியலை அறிந்தவர்கள்.

சமூகத்தில் பெரும்பான்மையோனார் இப்படியான குற்றங்களை ஆமோதிப்பதை, மறைமுக காரணமாக விளங்குவதை எப்படிப் புரிந்து கொள்வது? இலங்கையில் தமிழ் வணிகர்களைக் கண்டாலே மனதினுள் கறுவி கொள்ளும் சிங்கள வணிகன், தனது பாதைக்குச் சற்றும் ஒவ்வாத தமிழனை வெறுப்பதோடு அந்த வெறுப்பை வைத்து தனது அரசியலை வென்று எடுக்கும் புத்த துறவி, பக்கத்து வீட்டு முஸ்லீம் குடும்பத்தினை என்றும் அசிங்கமாக பார்க்கும் குஜராத்திய மத்திய வர்க்க குடும்ப தலைவி, பள்ளிக்கூடத்தில் முஸ்லீம் மாணவனை வெறுக்கும் இந்து மாணவர்கள் இப்படி ‘வெறுப்பு’ பட்டியல் நீள்கிறது.

நமது வாழ்க்கைமுறையில் இருந்து வித்தியாசப்பட்ட மனிதர்களை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தினை நம் சமூகத்தில் முக்கியமாக நம் குழந்தைகள் மத்தியில் உண்டாக்க வேண்டும். காலம் காலமாக நம் சமூகத்தில் இருக்கும் பகை உணர்வினையும் ‘மேல் * கீழ்’ ‘நாம் * அவர்கள்’ போன்ற ஆபத்தான எண்ணவோட்டங்களைக் களைந்து எறிய வேண்டும். இதற்கு கல்வி தான் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும். இந்த ‘வெறுப்பு’ இலங்கையில் உள்ள புத்த துறவிகள் பற்றியது மட்டுமல்ல. இன்றும் தமிழக கிராமங்களில், பள்ளிக்கூடத்திற்குப் போகும் மகனிடம், “அந்தச் சாதி பையனோட பழகாத,” என்று சொல்லியனுப்பும் தாய்மார்களைப் பற்றிய விஷயமாகவும் பார்க்க வேண்டும்.


Comments
5 responses to “இலங்கை புத்த துறவிகள் – வன்முறை எங்கே இருக்கிறது?”
 1. உண்மை Avatar
  உண்மை

  இவர்கள் வி.புலிகளின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் இல்லையா? பிரபாகரன் செத்ததும் அவன் செய்தது எல்லாம் நல்லவைகள். அப்படியே புனிதப்பயணி மாதிரி பேசறீங்க சார்1

  1.  எந்த இடத்திலும் விடுதலைபுலிகள் பற்றி நான் சொல்லவே இல்லையே! நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதைப் பற்றி அக்கறைப்படாத மக்களைப் பற்றி தானே சொல்கிறேன். அவர்கள் பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும் குற்றங்களைக் கண்டும் காணாமல் இருப்பது எப்படி சரியாகும்? அந்தக்குற்றத்தனை ஆமோதிப்பது (அல்லது ஆதரிப்பது) எப்படி சரியாகும்? இதிலே புனிதப்பயணிக்கான பாவனை எங்கே இருக்கிறது? எனக்கு புரியவில்லை.

 2. தயாராம் Avatar
  தயாராம்

  குஜராத்திய மத்திய வர்க்கத்தினர் மனதில் முஸ்லீம்களுக்கு எதிரான துவே ஷம் கொட்டி கிடப்பது தான் மோடியின் வெற்றிக்குக் காரணம் என்றார்கள் அங்குள்ள அரசியலை அறிந்தவர்கள்.
  இப்படி நியாயம் கதைக்கும் தாங்களா இலங்கைவிடயத்தில் வேறு மாதிரி எழுதுகிறீர்கள் ?
  புலிகளின் கொலை வெறியால் பாதிக்க பட்ட இலங்கை மக்கள் போராட்டத்தினை நடத்துகிறார்கள் நண்பர்.

  1.  தயாராம், நீங்கள் சொல்வது போல அவர்கள் வி.புலிகளால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்க கூடும். சரி! இப்போது அவர்கள் போராடுவது புலிகளுக்கு எதிராகவா? இல்லையே! நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கானோர் சித்ரவதை செய்யப்பட்டார்கள். ஆம்னிஸ்டி போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கையில் இன்னும் மனித உரிமை மீறல் தொடர்கின்றன என்கின்றன. ஓகே! இந்த போர் குற்றங்கள் குறித்தான விசாரணை வேண்டும் என அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இவர்கள் அந்தத் தீர்மானத்திற்கு எதிராக போராடுகிறார்கள். போர் குற்றங்கள் நடக்கவில்லை என சொல்வதற்கு இவர்களுக்கு இனி சாட்சியங்களே கிடையாது.

 3. இரவி Avatar
  இரவி

   எந்த சமயம் தான் அன்பைப் போதிக்கவில்லை? எந்த நாட்டில் தான் வன்முறை இல்லை? மதமும் அரசியலும் பிண்ணின் பிணைந்தது என்பது நீங்கள் அறியாததா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.