என்னுள் எங்கோ

அவ்வபோது பார்க்கும் காட்சி தான்.
ஆனால் இன்று
வேகமாய் நகரும் மேகங்களை பார்க்கும் போது
வானமே இடிந்து கீழே விழுவது போல
பிம்பம் உருவாகிறது.

என் சிறு வயதில் பார்த்த
ரயில் நிலையத்தருகே கூடி
சிறிது நேரம் அரட்டையடித்து திரும்பும்
முதியவர் கூட்டம் பற்றி அவ்வபோது நினைப்பதுண்டு.
சில சமயம் அதை மேற்கோளாக காட்டி எல்லாம் பேசியதுண்டு.
ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்
உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு
சமீபத்தில் தான் தோன்றியது.

தினமும் போகும் பாதை தான்.
ஒரு நாள் வேறு திசையில் இருந்து வரும்போது
அது முற்றிலும் அன்னியமானதொரு சாலையாக மாறுகிறது.

தினசரி புழங்கும் இடங்களில் கூட
திடீரென ஒரு நாள் முளைக்கின்றன
பெரிய கட்டிடங்கள்.

என்னுள் எங்கோ
திடீர் விழிப்பு
திடீரென நிகழ்ந்து
பிறகு கரைந்து போய் விடுகிறது.