ஒரு பைத்தியக்காரன் என்னை பின்தொடர்கிறான்

முதலில் அது யதேச்சையானது என நினைத்தேன்.
நான் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் இருப்பதை பார்த்தேன்.

நீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற சட்டையும்
வெண் கண்ணாடியுமாய்
அவன் அழகானவனாய் இருந்தான்.

முகத்தில் சிறிது தாடி.
விரல்களுக்கிடையே சிகரெட்.
புன்னகைக்கும் போது கனிவும்
எப்போதும் யோசனையுமாய் இருந்தான்.

தினமும் என் முதுகில்
அவனது பார்வையை உணர்ந்தவாறே
எனது நாட்களை கடத்த தொடங்கினேன்.

என்றாவது ஒரு நாள் அவன் கைகளால்
எனக்கு மரணம் சம்பவிக்கும் என கற்பனை செய்ய தொடங்கினேன்.
அந்த தருணங்களை கற்பனை செய்து
என்னை நானே தயார் செய்து கொண்டே இருந்தேன்.

ஒவ்வொரு நாளும்
அவன் கண்களில் கோபம் அதிகரித்தபடி இருந்தது.
என்னை கொல்வதற்கு முன்
கோபத்திற்கான காரணமாவது அவன் சொல்வானா?