இப்போ தூங்கு, காலையில் எல்லாமே மாறியிருக்கும்

இப்போ தூங்கு, காலையில் எல்லாமே மாறியிருக்கும்

பாழடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
சேதங்களுக்கு இடையே
உடைந்த கால்களாலான கட்டிலில்
படுத்திருக்கிறாள் சிறுமி ஒருத்தி.

கையில் ரத்தக்கறையோடு
தந்தை அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்.

காகங்களின் கரைச்சலில்
மறைந்து போயிருக்கின்றன
தூரத்து ஒலி.
சாம்பலை அள்ளி தெளிக்கிறது
திடீர் காற்று.
சாம்பலின் துகள்பட்டு
நிறம் மாற யத்தனிக்கிறது
பாட்டரி பெட்டியில் இருக்கும் குடிநீர்.

குந்தி அமர்ந்திருப்பவன்
கால்களை வலியோடு தடவி கொள்கிறான்.

வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் மேகங்களோடு
கலந்து கொண்டிருக்கும்
சிறுமி புன்னகைக்கிறாள்.
இரவு நெருங்கி கொண்டிருக்கிறது.

நன்றி
தலைப்பு: சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம்