Year: 2010

  • இருளின் ஊடாக குருதி மழையில்
    நனைந்து கிடக்கிறோம்
    நாங்கள் இருவரும்.
    அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
    அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.
    செந்நீரின் சுவைக்காக ஏங்கி கிடக்கிறேன்
    நான்.

    நிலவை இழந்த வானத்தில்
    அவ்வபோது மின்னி மறைகிறது
    ஒற்றை வெள்ளை கோடு.
    கோட்டானின் கதைத்தலும்
    வௌவால்களின் இறைச்சலும் தூரத்தில்.

    பிணங்களின் கனவுகள்
    மேகங்களாய் மேலெழுந்து
    பாழடைந்த மாளிகையின் சுவர்களில் அப்பி
    சிதைவுகளில் கொஞ்சம் தப்பி போகிறது.

    ஜன்னல், கதவுகளில் மரச்சட்டங்கள்
    சடசடவென உடைகின்றன.
    இறக்கைகளை அடித்தபடி
    யாரோ பறந்து போகிறார்கள்
    கீழ்வானத்தை நோக்கி.

    அவள் கண்களில் காதல் பொங்க
    என்னை பார்க்கிறாள்.

    பின்னிரவு பனியில் உறைய தொடங்குகிறோம்.

    பிறகு
    ஞாயிறு எங்களை மனிதர்களாக மாற்றியது.


  • சருகுகள் கூட இல்லாது போன நிலப்பரப்பில்
    பட்டு போன மரம் போல
    அதன் காய்ந்த பட்டை போல
    அவன் கிடக்கிறான்.

    கேள்விகுறி போல கிடக்கிறது
    அவன் உடல்.
    முதுமையும் காயங்களும் உடலெங்கும்.

    ஆரவாரமான கூட்டம் கடந்து போகும்
    அதே சாலையில் தான்
    அவனும் கிடக்கிறான்.

    கூட்டத்தின் ஒலி
    அவனை தொடும் போதெல்லாம்
    புரண்டு படுக்கிறான்
    தன் கிழிசல்களோடு.

    கறுப்பு வெள்ளை புகைப்படமாய் எடுத்தால்
    மனதை கலைத்து போடும் சித்திரம்.

    அவனை என் கவிதையாய் எழுத
    வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன்.
    அவனுடைய பார்வை எத்தனை கூர்மையானது என்பதை
    இன்னும் நான் அறியவில்லை.


  • நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
    கலைந்த தலைமுடி.
    தாடி.
    இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
    சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.
    குப்பையில் எறிவதற்கு முன்
    கவனமாய் காகிதங்களை
    மடித்து மடித்து வைக்கிறான்
    தினந்தோறும்.

    சாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,
    பழைய பில்கள்,
    என்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,
    மற்றும்
    அவனுடைய கிறுக்கல் பக்கங்கள்.

    காகிதங்களில் இருந்து உதிர்கின்றன
    ஒவ்வொரு எழுத்தாய்.


  • எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேலே மதுக்கடையை சுற்றி கும்பலாய் ஆட்கள் குழுமி இருப்பார்கள். தெரு விளக்கு வேறு பல சமயங்களில் எரியாது. அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். அவள் அந்தக் கடையை தாண்டி தெருவிறகுள் நுழையும் போதும் வெளியேறும் போது சட்டென பேச்சரவம் குறைந்து அனைவரது கண்களும் அவள் மேல் தான் இருக்கும். தெருவிற்குள்ளோ அனைத்து பெண்மணிகளுக்கும் அவள் தான் பேசு பொருள்.

    அவள் பேரு ரேகா. கோபத்தை எப்போதும் முகத்தில் சுமந்து இருக்கவில்லை என்றால் மிக அழகானவளாய் இருந்திருப்பாள். ரொம்ப திமிரானவள் என்று எல்லாரும் அவளை சொல்வார்கள். அதற்காகவே அவள் இன்னும் திமிருடன் திரிய தொடங்கினாள். என்றும் அவள் வெட்கப்பட்டோ பயப்பட்டோ பார்த்ததே இல்லை. பார்வையில் படும் யாரையும் கண்டுகொள்ளவே மாட்டாள். ஆளற்ற சாலையில் செல்பவள் போல பதட்டமில்லாமல் நடந்து போவாள்.… …மேலும் வாசிக்க


  • வானத்தை போர்த்தி இருக்கிறது இருள்.
    நகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம்.
    பிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள்.
    முழுச் சுற்று போகாத சக்கரங்கள்.

    ஒருவரது தலையில் இருந்து ஊற்றுகிறது வியர்வை.
    இன்னொரு காரில் புலம்பியபடி இருக்கிறாள் ஓர் இளம்பெண்.
    பைக்கில் கண்களை மூடியபடி காத்திருக்கிறான் ஒரு வழுக்கை இளைஞன்.

    காத்திருத்தலின் வேதனையோடு கதறுகின்றன அவ்வபோது ஹாரன் சத்தம்.
    நடைபாதையில் தனது பேரனோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் ஒரு கிழவி.
    வாகனங்களுக்கு இடையே பாதையை உருவாக்கி கொண்டு சாலையை கடக்கிறாள் ஒருத்தி.

    வானத்தை பார்த்தேன்.
    ஒளிக்கற்றையை இழுத்தபடி கீழ் இறங்குகிறது ஓர் எரிகல்.


  • நேற்று காலை பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. நேற்றைய மாலை நாளிதழ்களும் இன்றைய காலை நாளிதழ்களும் தேர்வு முடிவுகளையும் அதில் முதலிடம் வகித்தவர்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதி பிரசுரித்து இருக்கிறார்கள். புத்திசாலி பள்ளிக்கூடங்கள் தங்களது சந்தை மதிப்பை உயர்த்தி கொள்ள இந்த சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்க்கின்றன. மாவட்ட அளவில் தங்களது மாணவர் ஒருவர் எதாவது ஒரு பாடத்தில் முதலிடம் பெறுவதை நேரடி விளம்பரமாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ பத்திரிக்கைகளில் பிரசுரிக்க அவை ஆர்வமாய் ஓடி வருகின்றன. இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ்.

    எனக்கு தெரிந்து மகனின் தேர்விற்காக இரண்டு மாதம் மூன்று மாதம் தனது அலுவலகத்தில் விடுப்பு எடுத்த தாய்மார்கள் எல்லாம் உண்டு.… …மேலும் வாசிக்க


  • இந்த வலைப்பதிவினை தொடங்கி 12 மணி நேரத்தில் ஹேக்கிங் (hacking) நடந்தது. இப்போது முழுமையாய் துடைத்து எறிந்து விட்டு புதிய மென்பொருளில் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது.

    ஏறத்தாழ பதினொரு வருடங்களுக்கு முன் பிரவுசிங் சென்டர்கள் முதன்முதலாய் சென்னையில் முளைக்க தொடங்கிய நேரம். இணையத்தின் மீது ஒருவித பித்து போல பிரவுசிங் சென்டர்களுக்கு போய் கொண்டிருப்பேன். யாகூ தான் அப்போது பிரபலமான தளம். மின்னஞ்சல், குரூப், சாட் என பிரவுசிங் என்பது யாகூவில் தான் பெரும்பாலும் இருக்கும். யாகூவில் அப்போது geocities என்றொரு பகுதி இருந்தது. அதாவது இணையத்தில் இலவசமாய் உங்களுக்கென்று ஓரிடம். இப்போது blogspot போல என வைத்து கொள்ளுங்களேன். முதலில் நமது ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் நமக்கு இணையத்தில் இலவசமாய் இடம் கொடுப்பார்கள். அதாவது எனக்கு கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் என்றால் பாரீஸ் என்கிற இடத்தில் (yahoo.com/geocities/paris/0968 என்பது போல) இடம் கொடுப்பார்கள். (இதைப் பற்றி எழுத்தாளர் அம்பை கூட எதோ ஒரு கதையில் குறிப்பிட்டு இருப்பதாக ஞாபகம்.)… …மேலும் வாசிக்க


  • என்னுடைய புது வலைப்பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஒரு வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவு அது. இப்போது எனக்கென்று இணையத்தில் சொந்த வீடு கட்டி இங்கு குடி புகுந்திருக்கிறேன். என்னுடைய பழைய பிளாக்கர் பதிவுகள் அனைத்தும் இப்போது இங்கேயே வாசிக்க கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமை கவிதைகள் வாசித்து வந்த நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இது அப்படியே அந்த வலைப்பதிவு தான். முகவரி மட்டும் மாறியிருக்கிறது. முன்னர் மாதத்திற்கு மூன்று நான்கு பதிவுகள் போடுவேன். இப்போது வாரத்திற்கு மூன்று பதிவாவது போட வேண்டுமென திட்டம். பார்க்கலாம் எப்படி போகிறதென…

    நன்றி!


  • என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது.
    நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது.
    அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
    உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு.
    அவனது நடை நிதானமாக மாறுவது இன்னும் பயமுறுத்துகிறது.

    இரத்த வாடையுடன் சுற்றும் அவனிடம் இருந்து நான் எங்கு ஓடினாலும் தப்ப முடியாது.
    நான் கடக்கும் அனைத்து தெருக்களிலும் அவனது தடம் இருக்கிறது.
    கனவுகளிலும் மிருக கர்ஜனையுடன் துரத்துகிறான்.

    பயத்தையும் வலியையும் பல முறை கற்பனையில் உண்டு முடித்த பிறகு
    அது எப்போது நிகழும் என்று
    நானும் காத்திருக்கிறேன்
    ஒவ்வொரு நிழல் தோன்றும் போதும்.


  • சசிதரூர் கொச்சி அணியின் மூலமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆதாயம் தேடி கொண்டாரா? லலித் மோடி தன்னுடைய மருமகனுக்கு சாதகமாக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா? ஐபிஎல்லில் கலந்து கொள்ளும்  சில அணிகள் பொய்யாக நஷ்ட கணக்கு காட்டினார்களா? ஊடகங்களில் ஐபிஎல் பற்றி புது புது தகவல்கள் சூடாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

    வர்த்தம் விளையாட்டு துறைக்குள் நுழைந்தவுடன் அதன் பின்னே அழையா விருந்தாளிகளாக நுழைந்து விட்டன ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும். வர்த்தகரீதியாக ஐபிஎல் மிக பெரிய பணத்தை சம்பாதித்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதற்கான முறையான வரி கட்டபடவில்லை என குற்றச்சாட்டு வைக்கபடுகிறது.

    இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அது இன்று நம் அரசாங்கம் லாபம் கொழிக்கும் தொழில்கள் வளர வேண்டும் என்றும் நிறைய புது பணக்காரர்கள் உருவாக வேண்டும் எனவும் முன் மொழிகிறது. காரணம் இப்படியாக தனிநபர்களின் வளர்ச்சியில் அரசிற்கு நிறைய வரிகள் கிடைக்கும், நாட்டில் பண நடமாட்டம் அதிகரிக்கும் என்பது தான்.… …மேலும் வாசிக்க