கணவனது சட்டை அணிந்திருக்கிறான்


அது பிரத்யேகமான வடிவமைப்பு அல்ல.
சந்தையில் எளிதாய் கிடைத்து விடுவதும் இல்லை.
ஆனாலும் அந்த சட்டையை ஓர் அன்னியன் அணிந்திருப்பது
ஆச்சரியம் தான்.

அவனிடமிருந்த வியர்வை வாசனை
என்னுடைய கணவனது போலவே இல்லை.
என்றாலும் அந்த உடலின் மெல்லசைவு கூட என்னை ஈர்க்கிறது.
கூட்டத்தினூடாக அவனை நோக்கி நகர்கின்றன
என்னுடைய அத்தனை உணர்வுகளும்.

ஓர் உதட்டுச்சுழிப்பில் என்னை உதாசீனப்படுத்துகிறான்.
அன்னியர்களாலான கடலலையில்
ஒவ்வொரு முறை அலை உயரும் போதும்
நான் கண்களால் இரங்குகிறேன்.

அலை தாழும் போது அவன்
ஒரு முத்தம் மட்டும் கொடுத்து விட்டு
அந்த சுவையை அங்கேயே துடைத்து எறிந்து விட்டு
பறந்து போன பிறகு
மிச்சமிருக்கிறது
அவன் அணிந்திருந்த எனது கணவனின் சட்டை.