பிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை

நேற்று காலை பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. நேற்றைய மாலை நாளிதழ்களும் இன்றைய காலை நாளிதழ்களும் தேர்வு முடிவுகளையும் அதில் முதலிடம் வகித்தவர்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதி பிரசுரித்து இருக்கிறார்கள். புத்திசாலி பள்ளிக்கூடங்கள் தங்களது சந்தை மதிப்பை உயர்த்தி கொள்ள இந்த சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்க்கின்றன. மாவட்ட அளவில் தங்களது மாணவர் ஒருவர் எதாவது ஒரு பாடத்தில் முதலிடம் பெறுவதை நேரடி விளம்பரமாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ பத்திரிக்கைகளில் பிரசுரிக்க அவை ஆர்வமாய் ஓடி வருகின்றன. இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ்.

எனக்கு தெரிந்து மகனின் தேர்விற்காக இரண்டு மாதம் மூன்று மாதம் தனது அலுவலகத்தில் விடுப்பு எடுத்த தாய்மார்கள் எல்லாம் உண்டு. பிளஸ் டூ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை தனது மகன் பெறவில்லை என்று நேற்று முழுவதும் வீட்டில் சமைக்காமலே சோகமாய் அமர்ந்திருந்த குடும்பங்களும் உண்டு.

இப்போது வரை இரண்டு தற்கொலைகள். இன்னும் எவ்வளவு நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் மன இறுக்கத்தில் மூழ்கியிருப்பார்கள் என நினைக்கும் போது மனம் பதறுகிறது.

பிளஸ் டூ தேர்வுகள் தான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம் என மத்திய வர்க்கம் தீர்மானமாய் நம்புகிறது. எல்லாருமே டாக்டர்களாகவும் என்ஜீனியர்களாகவும் மட்டுமே ஜீவிக்க முடியுமென்கிற மத்திய வர்க்க அபத்தம் இது.

ஒரு தேர்வு ஒருவரது வாழ்க்கையை தீர்மானிக்கும் என சிலர் நினைக்குமளவு நமது கல்வி முறை ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது? முதல் காரணம் கல்வி முறையை தீர்மானிக்க இங்கு சரியான கல்வியாளர்கள் கிடையாது. வாத்தியார்களை சொல்லவில்லை. கல்வி முறைகளை பற்றி ஆராய்ந்து அறிந்தவர்களை பற்றி சொல்கிறேன். அப்படிபட்டவர்கள் எண்ணிக்கையில் குறைவு. இருக்கும் சிலருக்கும் ஒழங்கான வாய்ப்பு கிடைக்கிறதா என தெரியாது. ஜால்ரா அடிப்பவர்கள் தான் இங்கு கல்வி முறையை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள். ஜால்ராக்களுக்கு மாணவர்கள் பற்றியும் கல்வி முறை பற்றியும் அக்கறை இருக்குமா?

பத்தாம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு கோர்ஸ்களை தேர்ந்தெடுக்கும் வசதி உண்டு. ஆனால் எல்லாரும் கணிதம்-உயிரியல் பாடத்திட்டத்திற்கு தான் ஓடுகிறார்கள். வருடத்திற்கு வருடம் மற்ற பாடத்திட்டங்களை தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை குறைந்தபடி இருக்கிறது. இதை இன்னும் மோசமாக்கும் வகையில் கடந்த ஆண்டு 2009-இல் ஜனவரி ஆறாம் தேதி அரசாங்கம் lithographic printing, training for medical lab assistants போன்ற அதிக பாப்புலர் இல்லாத கோர்ஸ்களை மூட போவதாக அறிவித்து விட்டது. எல்லாருமே டாக்டர்களாகவும் என்ஜீனியர்களாகவும் மட்டுமே ஜீவிக்க முடியுமென்கிற மத்திய வர்க்க அபத்தத்தினுள் அரசாங்கமும் இருக்கிறது என்பதை உணர்த்தும் சம்பவங்கள் இவை.

ஒரு பக்கம் மத்திய வர்க்கத்தின் நிலைப்பாட்டை காசாக மாற்ற ஒவ்வொரு ஊரிலும் கல்வி தந்தைகள் (முன்னாள் சாராய வியாபாரிகள்?) பெரிய பெரிய வலையை விரித்து காத்திருக்கிறார்கள். இன்னொரு புறம் இதற்கு எதிலும் சம்பந்தமில்லாத மார்க் குறைவாக வாங்கிய மாணவர்கள். இந்த 1200 மார்க் ஒருவனது திறமையை நிரூபிக்கிறதா? நன்றாய் மனப்பாடம் செய்யும் திறன் இருந்தால் நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்கிற நிலை தான் இன்றும். வருடம் வருடம் மாநிலத்தில் முதலிடம் வாங்கியவர்களும் மாவட்டத்தில் முதலிடம் வாங்கியவர்களும் பிறகு எங்கு காணாமல் போகிறார்கள்?

வணிகமாகி போன நமது கல்வி முறையில் அதிக பாப்புலர் ஆகாத பாடங்களை/துறைகளை விரும்பும் மாணவர்களுக்கு மதிப்பில்லை. அவர்களை நசுக்கி வாழ்கிறது நம் சமூகம்.

ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. ஒரு பாடத்தில் தேறவே முடியாத ஒரு மாணவன் வேறு ஒரு துறையில் நன்றாக பிரகாசிக்க கூடும். எல்லாரையும் ஓட்ட பந்தயத்திற்கும் தயாராக்கும் குதிரைகள் போல் நினைப்பது அபத்தம். இந்த சிந்தனை எதிர்காலத்தில் நமது சமூகத்தையே திறனற்ற ஒன்றாக மாற்றி விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

இந்தியாவில் இயந்திரம் போல சொன்னதை செய்யும் பெரும் இளைஞர் கூட்டம் இருக்கிறது. அதனால் தான் ஐ.டி துறை இங்கு காலடி எடுத்து வைத்தது. ஒரிஜினல் ஐடியா என்று இந்தியாவில் இருந்து எத்தனை பேர் பிரபலமாகி இருக்கிறார்கள். மிக மிக குறைவு.

நாட்டின் முக்கிய துறைகளை கரையான் போல் அரித்து கொண்டிருக்கும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் ஒரு புறம். மத்திய வர்க்கத்தின் அபத்தம் இன்னொரு புறம். இவற்றை எல்லாம் சாதகமாக்கி கொண்டு வணிகத்தில் புரளும் கல்வி தந்தைகள் (முன்னாள் சாராய வியாபாரிகள்?) மற்றொரு புறம். பெரும் சுமையோடு திரிகிறார்கள் மாணவர்கள்.

நேற்று பிளஸ் டூ தேர்வை பற்றியே தனது எல்லா பக்கங்களிலும் செய்தி வெளியிட்டிருந்த ஒரு மாலை நாளிதழின் கடைசி பக்கத்தில் ஒரு முழுப்பக்க விளம்பரம் வெளியாகி இருந்தது. “ஒரு முறை தோத்தா வாழ்க்கை முடிஞ்சிடாது…” என்று தொடங்கும் அந்த விளம்பரம் வேந்தன் டூடோரியல் வெளியிட்ட விளம்பரம். ஐ லைக் இட்.


Comments
5 responses to “பிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை”
 1. பிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை…

  இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்ப…

 2. […] This post was mentioned on Twitter by antonyanbarasu, Sai Ram. Sai Ram said: Blog update: பிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை http://tinyurl.com/38oygyj […]

 3. jeyaprakash Avatar
  jeyaprakash

  neengal kondirukkum samuthaya akkaraikku mikka nandri

 4. தங்களுடைய சமூக சிந்தனை சிறப்பாக உள்ளது. புதிய கோணத்தில் சிந்திக்கிறீர்கள். நிச்சயமாக ஒரு நாள் மக்கள் திருந்துவார்கள்.

  நானும் எனது மகனை சட்டம் படிக்க வைத்துக் கொண்டுள்ளேன்.
  அவன் +2-ல் வாங்கிய மதிப்பெண் 1111/2006 அப்பொழுது இது மிகச் சிறந்த மதிப்பெண். அவனுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டிலும் இடம் கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. தமிழ்நாட்டுக்கு சிறந்த வழக்கறிஞர்கள் தேவை என்று நான் உணர்ந்ததால், சட்டம் படிக்க அவனை சம்மதிக்க வைத்தேன். அவனும் எனது எதிபார்ப்பை பூர்த்தி செய்வான் என்று நம்புகிறேன்.

  //வணிகமாகி போன நமது கல்வி முறையில் அதிக பாப்புலர் ஆகாத பாடங்களை/துறைகளை விரும்பும் மாணவர்களுக்கு மதிப்பில்லை. அவர்களை நசுக்கி வாழ்கிறது நம் சமூகம்.//

  மேற்கண்ட உங்களின் வரிகள்தான் என்னை உங்களுக்கு பின்னுட்டமிடத் தூண்டியது. அந்த வரிகள் நிஜம். நாங்கள் பட்ட , படுகிற அவமானங்களைச் சொல்ல இடமில்லை. http://amaithiappa.blogspot.com/2010/05/blog-post.html இதையும் ஒருமுறை படித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
  நன்றி.

 5. @ நன்றி ஜெயபிரகாஷ். தொடர்ந்து இப்படி கமெண்ட் எழுதுங்கள். 🙂

  @ அமைதி அப்பா – உங்களுடைய விரிவான பின்னூட்டத்தை படித்து சந்தோஷப்பட்டேன். உங்களுடைய பதிவினை கட்டாயம் வாசித்து கருத்து சொல்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.