தமிழ் வலைப்பதிவுலகம்

கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில் தங்கள் வலைப்பதிவினை கை கழுவி போனாலும் நிறைய பேர் தங்களது வலைப்பதிவை சீரியஸான விஷயமாக எடுத்து கொண்டு அவ்வபோதாவது எழுத தான் செய்கிறார்கள்.

எழுதுவது என்றால் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்று இதை வகைப்படுத்தி விட முடிவதில்லை. குமுதம், ஆனந்த விகடன் மற்றும் அதன் பிரதி பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் இருக்கும் சரக்கினை விட இன்றைய தமிழ்கூறு வலைப்பதிவுலகம் ஆபாரமான சரக்குகளை பதித்தபடி அதுவும் ரியல் டைமில் பதித்தபடி இருக்கிறது. என்ன வேண்டும் சொல்லுங்கள், சினிமா விமர்சனங்களா? கவர்ச்சி படங்களா? புரணிக்கதைகளா? இலக்கிய கூட்டத்தில் நடக்கும் சைடு லைன் செய்திகளா? கட் அண்ட் பேஸ்ட் செய்திகள் மற்றும் கொஞ்சம் கருத்துகளா? பிரபல பத்திரிக்கைகள் கொடுக்கிற விஷயங்களை விட அதிகபடியான விஷயங்கள் இங்கு கொட்டுகின்றன. சில வலைப்பதிவுகள் சிற்றிதழ்களை விட கூடுதல் தகுதியுடன் மிளிரவும் தவறுவதில்லை. கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், தன் வாழ்வில் நடப்பதை சுவாரஸ்யமாக சொல்ல தெரிந்தவர், குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றி தொடர்ந்து கதைத்து வருபவர் என தமிழ் வலைப்பதிவுலகில் வெரைட்டி கூடியபடி இருக்கிறது. Excel பற்றி ஒரு பிரத்யேக வலைப்பதிவு கூட கண்டேன். பெரும்பாலான அரட்டைகள் டிவிட்டருக்கும் பேஸ்புக்கிற்கும் இடம் பெயர்ந்து விட்டன. இதனால் தானோ என்னவோ இன்று தமிழில் வலைப்பதிவினை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே போகிறது.

பின்னிரவு நேரத்தில் எனது கூகுள் ரீடரை திறந்து தமிழ்கூறு வலைப்பதிவுலகம் இன்று என்ன பிளாக்கி இருக்கிறது என மேயும் போது அதன் வெரைட்டி பல சமயம் சுவாரஸ்யமாகவும் சில சமயம் வெறுமையையும் ஏற்படுத்தி விடுகிறது.

பல பேர் சமூகத்தை பற்றி நிறைய கவலைப்படுகிறார்கள். அக்கிரமத்திற்கு அட்வைஸ் செய்கிறார்கள். சில பேர் தங்கள் அஜண்டாவை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதற்கான போஸ்டர், அட்வர்ட்டைஸ்மெண்ட்கள் தான் அவர்களது வலைப்பதிவுகள். நல்ல வேளை இந்த SEO, Google ranking போன்ற விஷயங்கள் இன்னும் தமிழ் வலைப்பதிவுலகத்தினை ஆக்கிரமிக்கவில்லை. அப்புறம் அந்த பார்முலா எழுத்துகள் வேறு கொட்ட தொடங்கி விடும். அதே போல paid reviewகளும் இன்னும் பரவலாகவில்லை.

எனக்கு மனித மனதின் விசித்தரம் தான் கூகுள் ரீடரில் மேயும் போது முகத்தில் சட்டென அறைகிறது. முக்கியமாக மனித மனதின் ஆணவம் தாம் இதற்கு காரணம். இதை மனித மனதின் கம்பீரம் என்று கூட சொல்லலாம். எந்த வார்த்தைகளால் சொன்னாலும் ஓர் அப்பாவி தமிழ் மனதிற்கு இது பயமுறுத்தும் விஷயமாக இருப்பதும் உண்மை. பெரிய பத்திரிக்கைகளில் இதே வகையான எழுத்துகளை படிக்கும் போது இந்த பட்டவர்த்தனம் கண்களில் இருந்து ஒளித்து வைக்கபட்டிருந்தது. ஆனால் நம்மை போன்றவர்கள் அதை எழுதும் போது அந்த ஒளித்து வைத்தல் அல்லது அந்த பத்திரிக்கை பிராண்ட் தன்மை இல்லாது போவதால் எழுத்திற்கு பின்னால் இருக்கும் மனிதினை வாசிக்கும் துணிச்சல்
வருகிறது. ஆனால் மனதின் நேர்மையை பற்றி கேள்வி கேட்கவே முடியாது. மனதில் இருப்பது கீபோர்டு வரை வருவதற்குள் பல சென்சார் கமிட்டிகளை தாண்டி பல சுய தீர்மானங்களால் வடிகட்டபட்டு தானே ஆக வேண்டும். இந்த வடிகட்டல், சென்சார் இதையெல்லாம் தாண்டிய சிறிதளவாவது நேர்மையான எழுத்துகள் எனக்கு சமீப காலமாய் பிடித்தமானவைகளாக இருக்கின்றன. சிற்றிதழ் ஆட்கள் சிலர் இப்படியாக தான் இருக்கிறார்கள். அப்புறம் மொக்கை போடுகிறேன் பேர்வழி என உண்மைகளை உடைத்து பேசும் ஆட்களும் இதே வகையறா தான். இப்படியான விசித்திரங்கள் நிரம்பியிருப்பதால் தான் தமிழ் வலைப்பதிவுலகம் தற்போது இது வரை கிடைக்காத வாசிப்பனுவத்தை கொடுக்கின்றன. அந்த அனுபவம் இதற்கு முன்பு வேறு எங்கும் கிடைத்ததில்லை. இதற்கு முன்பிருந்த வெள்ளை தாளினை மேயும் கண்கள் கொடுத்த வாசிப்பனுபவங்களை எல்லாம் தூள்தூளாக்கி வேறொரு கட்டத்திற்கு மனதினை தயார் செய்கின்றது.