எதற்காக பதிவிட வேண்டும்? அவசியமா?

இதற்கு முன் பதித்த தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற இடுகையின் தொடர்ச்சியாக இதனை வாசிக்கவும். 🙂

தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற என் இடுகையை படித்து நிறைய பேர் என்னை இமெயிலிலும் போனிலும் நேரிலும் தொடர்பு கொண்டு நீங்கள் எப்படி வலைப்பதிவுகளின் தரத்தினை உயர்த்தி பேசுனீர்கள் என்று தங்கள் ஆச்சரியத்தினை தெரிவித்தார்கள். (இப்படியாக பொய் சொல்ல விரும்பவில்லை.) உண்மையில் அதற்கு கருத்து சொன்ன ஒரே ஆள் நமது ரவிசங்கர் தாம்.

 

தமிழ் வலைப்பதிவுகளின் தரம் பற்றி இங்கு நான் பேச வரவில்லை. தரம் என்று ஒன்று உண்டு என்றும் அது உலகம் முழுக்க ஒரே அளவுகோளினை கொண்டது என்றும் நான் நம்புவதை விட்டு பல காலமாகிறது. ஆனால் நான் சொல்ல வருவது வலைப்பதிவுகள் ஏற்படுத்தும் புது வகையான வாசிப்பனுபவம் பற்றியது. இது எதன் காரணமாய் ஏற்படுகிறது என யோசித்தால் வலைப்பதிவுகளில் உள்ள ‘நான்‘ தான் இதன் காரணியாக இருக்கும் என நினைக்கிறேன்.

வலைப்பதிவர்கள் தனி மனித தேடல் கொண்டவர்களாய், தன்னுள்ளே தேடுபவர்களாய் இருக்கிறார்கள். அதோடு அவர்களது எழுத்து அவர்களால் மட்டுமே தணிக்கை செய்யபடுகிறது. (உள் மனதின் தணிக்கை வேறு எந்த சர்வதிகார சென்சார் மீடியாவை விட கடுமையானது.) என்றாலும் வலைப்பதிவில் எழுதபடுவதை மற்ற ஊடகங்களில் உள்ளது போல வேறொரு கை எடிட் செய்வதில்லை. எழுதி முடித்தவுடனே பதித்து விட முடிகிறது. இதன் காரணமாய் மனித மனத்தின் யதார்த்தம் வேறு எங்கும் வெளியில் தெரிவதை விட வலைப்பதிவுகளில் அதிகமாய் தெரிகிறது. மனித மனதை நாம் rawஆக இவ்வளவு அருகில் இருந்து பார்த்தில்லை என்பதே நமக்கு ஏற்படும் அதிர்ச்சிக்கு காரணம். இவ்வளவு rawஆக எழுதுவதற்கு காரணமென்ன? அப்படி எதற்கு வலைப்பதிவிட வேண்டும்? அவசியமா?

மனிதனுக்கு வலைப்பதிவு என்பது மற்றொரு வகையான communication தானே! இது மற்றொரு கேள்வியை கொண்டு வருகிறது. எதற்காக மனிதன் மற்ற மனிதனிடம்/மனிதர்களிடம் தொடர்பு கொள்ள அல்லது எண்ணங்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறான்.

எத்தனை முறை நமது வலைப்பதிவினை பார்த்து நாமே அட எதற்காக இதை எல்லாம் எழுதி குவித்தோம் என சலித்து கொள்கிறோம். அடுத்து சில தினங்களிலே சலிப்பினை மறந்து மீண்டும் எழுதி பதிக்கிறோம் இல்லையா. ஏன் அப்படி என்ன ஆர்வம்? நமது எழுத்துகளை பகிர்ந்து கொள்ள?

சமூகத்திற்கு என்னாலான பங்களிப்பு! ஓகே!
ஜஸ்ட் டைம் பாஸ், மச்சி! ம், ஓகே!
வேறு எங்கு கொட்ட, அதனால் இங்கு கொட்டுகிறேன்…

…ம் பொறுங்கள், அந்த கடைசி பாயிண்ட் திரும்ப படியுங்கள். அப்படியானால் அதனால் தான் இது வரை கொட்டபடாத விஷயங்கள் முதல் முறையாக கொட்டபடும் போது புது வகையான அதிர்ச்சியை கொடுக்கின்றனவா? யோசியுங்கள்! யோசியுங்கள்!