அவன் கைதான மறுநாள்

அவன் கைதான மறுநாள்.
சூரியன்.
நெற்றியில் வியர்வை.
பாதையில் செருப்பற்ற கால்களை துன்புறுத்தும் முட்கள்.
நாவினில் தாகம்.
நிழல் கூட சுருங்கி கொண்டு விட்டது.
சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலை நிலத்தில் ஒற்றை ஆளாய் என்னை தூரத்திலே பார்த்திருக்கக்கூடும்.
ஆட்டத்தை நிறுத்தி விட்டு சேர்ந்து நிற்கிறார்கள்.
என்னால் மரணத்தை காற்றில் உணர முடிகிறது.
எல்லா திசைகளிலும் அவர்களது பார்வை அலைபாய்கிறது.
என் கையில் இருந்து ஊற்றிய உதிரத்தை வேட்டியில் துடைத்து விட்டு ஓடுகிறேன்
கொடூரமாய் ஓலமிட்டபடி அவர்களை நோக்கி.