பிச்சை போடாதே

இந்த வாரம் உயிர்மை குழுமத்தின் இணைய இதழான உயிரோசையில் என்னுடைய ‘பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!’ என்கிற கட்டுரை வெளிவந்து இருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிய தொடங்கி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாகியும், எனது கட்டுரை வேறொரு ஊடகத்தில் பதிக்கபட்டிருப்பதை பார்க்கும் போது இன்றைக்கும் என் மனம் சந்தோஷத்தில் பொங்குவதை என்ன என்று சொல்ல! கட்டுரையை மீண்டும் படித்த போது அதன் நீட்சியாக சில எண்ணங்கள் தோன்றின. அதை பதிவு செய்ய தான் இந்த தொடர்ச்சி.

இந்திய அரசாங்கத்தின் பதினொன்றாவது திட்ட அறிக்கை ஒரு முக்கியமான இலக்கினை வரைந்திருக்கிறது. நாட்டின் அடித்தட்டு மக்களுக்கும், விளிம்புநிலை மனிதர்களுக்கும் வளர்ச்சியின் பங்கு சரியான அளவு கொண்டு சேர்க்கபட வேண்டும் என்பது தான் அந்த இலக்கு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது சாதாரண காரியமாக இருக்க போவதில்லை. பெரும்பாலும் பேப்பர் திட்டங்களாக மலர்ந்து விடுமோ என்பது தான் இப்போதைய அச்சம்.

வளர்ச்சியின் பங்கினை கொடுப்பது என்பது எப்படி? இயேசு கிருஸ்து உன்னிடம் இரண்டு ரொட்டி இருந்தால் ஒன்றினை இல்லாதவனிடம் கொடு என்றார். தீவிர கிருஸ்துவ பெண் ஒருத்தி விடாமல் என்னிடம் பிரச்சாரம் செய்த போது உன்னிடம் இருக்கும் சூடிதார்களை ஏழை பெண்களுடன் பங்கிட்டு கொள் என்று சொன்னதும் வாயடைத்து போனாள். பங்கிடுதல் என்றால் தானமிடுதலோ பிச்சையோ அல்ல. அது அதிகார பகிர்வில் இருந்து தான் தொடங்கும்.

விளிம்பு நிலைக்கு அதிகார பகிர்வு முடியுமா? அதிகாரம் என்பது இன்று இந்தியாவில் இறுக்கமாகி கொண்டிருக்கிறது. அதிகார பரவலாக்கம் நடக்க வேண்டிய காலகட்டத்தில் ஓரிடத்தில் அதிகார குவிப்பு என்பது கன ஜோராக நடக்கிறது. இன்னும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே அதிகாரம் வழங்கபடாத சூழல். இந்நிலையில் அதிகாரத்தின் கோபுரத்தில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் அந்த இடத்திற்கு நெருங்கவே சிரமப்படும் நிலையில் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் அதிகாரத்தை நினைத்து பார்க்கவே முடியாது. இந்த இறுக்கமான அதிகார கட்டமைப்பு இன்னும் சில காலத்திற்கு உடைபட வாய்ப்பில்லை. அதனால் பதினொன்றாவது திட்ட அறிக்கையின் இலக்கு வெறுமனே ‘இலவசங்கள், தானங்கள், பிச்சைகள்’ என்கிற அளவில் பேப்பர் திட்டங்களாக மாறி போய் விடும் என்று தோன்றுகிறது.

நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பண்ணையார்கள் கூலியாட்களுக்கு தானமளிப்பது போல அரசியல்வாதிகள் மேடையில் நின்று போட்டோ பிளாஷ்களுக்கு இடையே தானமளிக்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகிறது.

  • அரசியல் அதிகார பரவாலக்கத்திற்கான சாத்தியபாடுகளை உருவாக்குதலே இப்போது முதன்மையானது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதற்கு உரிய அதிகாரம் உடனடியாக வழங்கபட வேண்டும். (படிக்க: மாநில சுயாட்சி நமக்கு தேவையா? & வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?)
  • இலவசங்களை தானங்களை நம்பி ஏமாறுபவர்களுக்கு அவர்களுக்கான உரிமைகளை பற்றி விழிப்புணர்வு உருவாக்கபட வேண்டும்.
  • அதிகாரத்தினை நோக்கிய பயணம் முட்களினால் அல்ல, பங்கிடுதலால் சாத்தியமாக வேண்டும்.

படம்: ‘300’ ஆங்கில திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி.