எனக்கு தமிழ்மணம் கொடுத்த பதக்கம்

 என்னுடைய பதிவு ஒன்று ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் உள்ள 16 பிரிவுகளில் உள்ள ஒரு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றதாகவும் அதனால் அந்த தளம் எனக்கு ஒரு பதக்கம் கொடுத்ததாகவும் அந்த பதக்கத்தை நான் என் வலைப்பதிவின் முகப்பில் மாட்டி வைத்திருப்பேன் என சில மாதங்களுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் நான் சிரித்திருக்கக் கூடும். எனக்கு விருது கிடைக்க போவுதா? நல்ல கதை! என்கிற மாதிரியான தன்னடக்கம் அல்ல. நான் ஒரு பரிசு பதக்கத்தை ஷோ கேஷில் வைக்க மாட்டேன் என்கிற மாதிரியான திமிர் தான்.

ஆனால் இன்று அது தான் நடந்தது. பதக்கத்தை கொடுத்தவுடன் முதல் ஆளாய் ஓடி போய் அதை வாங்கி வந்து முகப்பில் எல்லாரும் பார்க்கிற மாதிரி வைத்த பிறகு தான் இதிலே என்ன தவறு இருக்கிறது என எண்ணம் ஓடியது. பரிசு வாங்குவதற்கு துள்ளும் மனமும், வாங்கிய பரிசினை நண்பர்களுக்கு காட்டுகிற குதூகலமும் இன்றும் என்னிடம் இருப்பது, ‘நல்ல வேளை இன்னும் மனுசனா தான் இருக்கோம்,’ என்பதை உறுதி செய்தது.

என் மனைவி தான் சொல்வாள், “நீ ரொம்ப தான் வேஷம் போடுற. ஆனா சராசரிகளை விட சராசரி நீ,” என்று. சராசரியாக தான் இருக்க வேண்டும் என்பது தான் இன்று எனது விருப்பமாக இருக்கிறது. இல்லையெனில் பித்து பிடித்து ரோட்டில் திரிய வேண்டியது தான். இது பொதுவாக சொன்ன கருத்து அல்ல. எனக்கு தனிப்பட்ட வகையில் நானே சொல்லி கொண்ட கருத்து. இதற்கு மேல் இதை பற்றி பட்டியலிட்டால் அப்புறம் எனது வெளி வேஷம் கலைந்து விடும் என்பதால், ஸ்டாப்!

தமிழ்மணம் எனும் பிரபல தமிழ் வலைப்பதிவு திரட்டி 2009-ம் ஆண்டிற்காக நடத்திய சிறந்த இடுகைக்களுக்கான போட்டி கடந்த இரண்டு மாதமாக இரண்டு கட்டமாக நடந்து நேற்றோடு முடிவிற்கு வந்திருக்கிறது. ஏறத்தாழ பதினாறு பிரிவுகளில் வாக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இரண்டு இடுகைகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் ‘தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி தொடர்பான கட்டுரைகள்’ என்கிற பிரிவில் என்னுடைய தலித்தை கொளுத்தினார்கள் என்கிற பதிவு இரண்டாவது இடத்தை பெற்று இருக்கிறது.

பதக்கம் எனக்கு பிடித்து இருக்கிறது என்பதினை மீண்டும் சொல்லி கொள்கிறேன். இதோடு புக்லேண்ட்ஸ் புத்தக கடையில் 500 ரூபாயிற்கு புத்தகங்கள் வாங்கி கொள்ள ஒரு கூப்பன் அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள். என்ன புத்தகங்கள் வாங்குவது என்பதை இப்போதே சிந்திக்க தொடங்கி விட்டேன். நல்ல புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.