ஆயிரம் முட்களாய் குளிர்

ஆயிரம் முட்களாய் குளிர்.
சுருண்டு கிடக்கும் கிழவியிடமிருந்து
பிளாட்பார்ம் எங்கும் பரவுகிறது நடுக்கம்.
அவளது தனிமையை அவ்வபோது தின்று போகின்றன
சாலை பெருவாகனங்கள்.
கருவிழிக்குள் எறும்புகள் பாதை அமைக்கும் வரை காத்திருக்கிறது இருள்.

பிறகு ஒரு இரவு
குளிரையும் இருளையும் மாண்டவளுக்காக அங்கே படையல் போட்டு
உட்கார்ந்திருக்கிறாள் மற்றொரு பிளாட்பார்ம் கிழவி.