புது வருடப் பிறப்பு – எதற்கு இந்த பரபரப்பு?

 சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அருகே மென்சனில் தங்கியிருந்த நாட்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மெரீனா கடற்கரையில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

“ஹேப்பி நியூ இயர்,” என்பது ஓர் இனிய கீதம் போல இளைஞர்களின் மூச்சுக்காற்றின் வெப்பத்தோடும் மது வாடையோடும் கடற்கரையை நிரப்பியிருக்கும். கடற்கரையை ஒட்டிய சாலையில் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் குடிக்கார இளைஞர்களால் பரபரத்து கொண்டிருக்கும். நிறைய போலீசார் குவிந்திருப்பார்கள். ஆனால் அந்த கூட்டத்தை கட்டுபடுத்த அவர்களை போல பத்து மடங்கு எண்ணிக்கை அதிகம் தேவை. ஆக அன்றிரவு அங்கே போலீசார் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருப்பார்கள்.

யார் யாரை பார்த்தாலும் “ஹேப்பி நியூ இயர்” என கைக் குலுக்கி கொள்வார்கள். அன்றைய இரவு பெண்களை அங்கே பார்க்க முடியாது. ஒரு முறை அந்தக் கூட்டத்தில் ஒரு வெளிநாட்டு பெண்மணி மாட்டி கொண்டார். நூறு பேரிடமாவது கை குலுக்கி விட்டு தான் அவரால் அங்கிருந்து தப்ப முடிந்தது.

பனிரெண்டு மணி அடித்ததும் இந்தியா பாகிஸ்தானை கிரிக்கெட்டில் வீழ்த்தியது போல ஒரே கரகோஷமும் ஆர்ப்பரிப்பும் எழும். மிருகங்களின் சந்தோஷம் போல இயற்கையோடு மனிதர்கள் இணையும் தருணம் அது.

சாரை சாரையாக நடந்து வீட்டிற்கு திரும்பும் கூட்டத்தில் நகையணிந்த வாலிபர்களை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்து சந்திற்குள் இழுத்து சென்று கொள்ளையடிக்க ஒரு கூட்டம் பாரதியார் சாலையில் காத்திருக்கும். அடுத்த நாள் காலை புத்தாண்டு முதல் சூரிய உதயத்தின் போது என்றுமில்லாத குப்பைகள் கடற்கரையில் மிகுந்திருக்கும்.

புத்தாண்டு முதல் நாள் போன்கள் வாழ்த்துகளை சொல்லும் எஸ்.எம்.எஸ்களால் நிரம்பி வழியும்.

“ஹலோ ஹேப்பி நியூ இயர்.”

“ஸாரி ராங் நம்பர்.”

“பரவாயில்லை. ஹேப்பி நியூர் இயர்.”

எதற்கு இந்த பரபரப்பு? புத்தாண்டு தினம் ஏன் இப்படி தமிழகத்தில் மாறி போனது. கோயில்களை புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் திறந்து வைக்க வேண்டிய அளவு தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கான காரணம் என்ன? தனது தனித்தன்மையை மறந்து அதனை இழந்து கொண்டிருக்கும் ஓர் இனம் காணாமல் போன தனது பண்டிக்கை காலங்களை இப்படியாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பிறப்பு என வேறு ரூபங்களில் கொண்டாடி திருப்தி பட்டு கொள்கிறது என்றே தோன்றுகிறது.

இந்த கொண்டாட்டத்தில் புத்திசாலிகளாக இருப்பவர்கள் சிலர் தான். அதில் ஒரு பகுதியினர் செல்போன் கம்பெனிகாரர்கள். மற்ற நாட்களில் இலவச எஸ்எம்எஸ் என்றெல்லாம் விளம்பரப்படுத்தியவர்கள் இப்போது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அனுப்பப்படும் அனைத்து எஸ்எம்எஸ்களுக்கும் ஐம்பது பைசா கட்டணம் என அறிவித்து இருக்கிறார்கள். அதாவது உங்கள் சேவை திட்டத்தின்படி எஸ்எம்எஸ்ஸின் வழக்கமான பில் ஐம்பது பைசாவிற்கு குறைவாக இருந்தால் மட்டுமே இது செல்லுபடியாகும். ஐம்பது பைசாவிற்கு மேல் கட்டணம் என்று நிலையில் இருப்பவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

புத்தாண்டு பிறப்பு என்பது நமது கடந்த ஆண்டை ஒரு முறை அலசி பார்த்து நமது தவறுகளை திருத்தி கொள்ளவும் வருகிற ஆண்டை திட்டமிட்டு கொள்ளவும் கிடைக்கிற வாய்ப்பு என்று என்னை நானே சமாதானப்படுத்தி கொள்ள நினைக்கிறேன். ஆனால் அப்படி எதுவும் உருப்படியாக நடந்ததே இல்லை என்பதால் அதுவும் வெற்று வார்த்தைகளாகவே தெரிகிறது. Resolutionகள் போட்டு போட்டு நிறைய பேப்பர்கள் ஏற்கெனவே வீணாகி விட்டதால் இந்த ஆண்டு புத்தாண்டு பிறப்பு தினம் என்பது வெறுமனே ரெஸ்ட் எடுக்க மட்டுமே. அது கூட எனது வேலை அனுமதித்தால் தான். அப்புறம் நான் சொல்ல மறந்து விட்டேன், “ஹேப்பி நியூ இயர்.”  கோவித்து கொள்ளும் உணர்வாளர்களுக்கு, “இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.”