உலக நாடுகள் மூலம் இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சிகள் தொடங்கி விட்டன

ப.சிதம்பரம் ஏற்கெனவே கோட்டிட்டு காட்டினார். இப்போது இங்கிலாந்து தொடங்கி மற்ற உலக நாடுகளும் தங்களுடைய எண்ணத்தை வெளிபடுத்த தொடங்கி விட்டனர்.

நடராஜா. விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர். இங்கிலாந்தில் வசித்து வரும் இவரை அந்நாட்டு அரசாங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தது. இலங்கை மண்ணில் கால் வைத்தால் தனது உயிருக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என இவர் மன்றாடியும் பயனில்லை. இறுதி முயற்சியாக இவர் அங்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக இவரை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது.

தனக்கு நேர்ந்தது போல பல தமிழர்களுக்கு இந்த பலவந்தமான வழியனுப்பு விழா நடந்திருக்கிறது என நடராஜா குற்றம் சாட்டுகிறார். இந்த வருடம் ஜூலை மாதம் மட்டும் பனிரெண்டு தமிழர்கள் இப்படி நாடு கடத்தபட்டதாக மேற்கு லண்டனில் உள்ள தமிழ் அமைப்பை சார்ந்த நகுலேந்திரன் என்பவர் பிபிசியில் குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார்.

இலங்கையில் நடைபெறும் அரசு பயங்கரவாதத்தை கண்டிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திலே இப்படியான ரகசிய வேலைகள் இலங்கை அரசின் பழி வாங்குதலுக்கு சாதகமாக நடக்கிறது என்றால் இலங்கையின்  நேச நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என சொல்லவே வேண்டியதில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கையில் போர் ஓய்ந்து விட்டதென்றாலும் இன்னும் அங்கு நிலைமை சீராகவில்லை, எனவே அகதிகளை அங்கே உலக நாடுகள் திரும்ப அனுப்ப வேண்டாமென சொல்லி இருக்கிறது. இலங்கையில் உள்ள முகாம்களில் இன்னும் பல இளைஞர்கள் காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள். இச்சூழலில் பலவந்தமாக இலங்கைக்கு திரும்ப அனுப்பபடும் தமிழர்களின் கதி என்னவாகும் என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

புகைப்படம்: கொழும்பு விமான நிலையம். (நன்றி: bloomberg.com)