3 லட்சம் தமிழ் மக்கள் கம்பி வேலிகளுக்கு இடையே சிறைபட்டு இருக்கிறார்கள்

 

கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது.

வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது. இவர்கள் ஏற்கெனவே போர் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள். தற்போது முகாம் பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டின் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் இவர்களை தாக்க தொடங்கியிருக்கின்றன.

அடிப்படை வசதிகள் அற்ற இந்த முகாம்கள் அரசின் மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தபடி இருக்கின்றன. இந்த முகாம்களில் உள்ள நிலையை கண்டறிய யாருக்கும் அனுமதி இல்லை. வெகு சில சர்வதேச உதவிக்குழுக்கள் நுழையும் போது கூட கடுமையான விதிமுறைகள் அவர்களுக்கு விதிக்கபட்டன. செல்போன்கள், கேமிராக்கள், வண்டிகள் எதுவும் எடுத்து வரக்கூடாது என சொல்லபட்டது.

வவுனியா முகாமில் பட்டினி காரணமாய் முப்பதற்கு மேற்பட்டோர் இறந்ததாய் சொல்லபடுகிறது. முகாம்களில் உள்ள பலர் தங்களது குடும்பத்தை பிரிந்து நாற்பது முகாம்களிலும் சிறைபட்டு இருக்கிறார்கள். பலருக்கு தங்களது குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்கிற விவரம் கூட தெரியாது. குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் கடுமையான மன உளைச்சலுடன் தொற்று நோயிற்கு பயந்து மக்கள் வாழும் இந்த முகாம்களை நவீன ஹிட்லர் நாஜி முகாம்கள் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க போகிறது.

இந்த முகாம்களில் உள்ள மக்களின் எதிர்காலம் என்ன? இந்த மக்களோடு கலந்து இருக்கும் விடுதலைப்புலிகளை இனம் கண்டு கைது செய்த பிறகு இங்குள்ள மக்கள் அவர்களது நிலபரப்பிற்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என சொல்கிறது இலங்கை அரசு. அப்படியானால் முகாம்களில் கொடூரமான சித்ரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பஞ்சமிருக்காது. ஏறகெனவே முகாம்களில் பலர் இலங்கை படையினரால் அழைத்து செல்லபட்டு பிறகு நிரந்தரமாக காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகின்றன. இச்சூழலில் இந்த முகாம்களில் உள்ள மக்களை விடுதலை செய்ய பல வருடங்களாகும் என அஞ்சுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

விடுதலைபுலிகளை கைது செய்வதற்காக எடுக்கபட்ட நடவடிக்கை என அரசு காரணம் சொன்னாலும் பல மனித உரிமை அமைப்புகள் இது தமிழ் மக்களுக்கு எதிரான இனவிரோத பழி வாங்கல் நடவடிக்கை என குற்றம் சாட்டுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன், கொழும்பு நகரில் உள்ள ஓர் அமைப்பு இந்த முகாம்கள் சட்டத்திற்கு விரோதமானது என இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. The Center for Policy Alternatives என்கிற அந்த அமைப்பு இந்த வழக்கில் இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்ஷே உட்பட பல உயர் அதிகாரிகள் விசாரிக்கபட வேண்டுமென கோரியிருக்கிறது. ஓர் இனத்திற்கு எதிராக ஓர் இனம் எடுக்கும் விரோத/ஒழிப்பு நடவடிக்கையே இந்த முகாம்கள் என தனது மனுவில் அந்த அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது. வழக்கு எப்படி கையாளப்படும் என்பதை இனி பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே போர் குற்றங்களுக்காக ஜக்கிய நாடுகள் சபை விசாரணை நடைபெறாமல் போய்விட்டது. இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது மனசாட்சிகளை பூட்டி வைத்து விட்டு இந்த விசாரணை நடைபெறக்கூடாது என வாக்களித்தனர். இலங்கை அதிபர் ராஜ பக்ஷே போர் குற்றங்களை கண்டறிவதற்காக அமைத்து இருந்த ஒரு கண் துடைப்பு கமிட்டியும் எந்த விசாரணையும் நடத்தாமல் மூடப்பட்டு விட்டது.

நடப்பு காலகட்டம் தமிழ் வரலாற்றில் இரத்த கறை தொய்ந்த பக்கங்களில் எழுதபட்டு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அரசு பயங்கரவாதம் மற்றொரு பக்கம் அதை விட கொடூரமான மற்றவர்களின் மௌனம்.

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதல்ல உலக தமிழர்களின் இன்றைய கவலை. மிச்சமிருப்பவர்களாவது உயிருடன் தப்புவார்களா என்பதே அவர்களது அச்சம்.