முப்பது வருடங்களாக முடிவுறாத தேடல்

கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று
ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி.
அந்த வலியோடு தான்
தினமும் அந்த கிழவனின் தூக்கம் கலையும்.

எப்போதும் போல விழிப்பு வானத்தை பார்த்தபடி தான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகம் காட்டும் வானம்.
ஆனால் பெரும்பாலும் ஒரே மாதிரியான தின வாழ்க்கை தான் கிழவனுடையது.

முதல் காரியமாய் தொலைந்து போன அவனது நாணயத்தை தேட தொடங்குவான்.
‘நடைபாதை, புல்வெளி, புதர்
இவற்றை தாண்டி அந்த நாணயம் வேறு எங்கும் போய் இருக்காது.’
அங்குலம் அங்குலமாய் அந்த பகுதிகளை அலசி கொண்டிருப்பான்.
கற்களை மெல்ல புரட்டி பார்ப்பான், குழந்தையை தொடுவது போல.
தேடல் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் போதே வானம் இருட்ட தொடங்கி விடும்.
நிலா ஒளியும், தெரு விளக்குகளும், இருட்டும் கிழவனை குளிப்பாட்டும்.
ஆனாலும் தேடல் நடந்து கொண்டே இருக்கும்.

முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது எனினும்
கிழவன் எப்போதும் நாணயத்தை தேடி கொண்டே இருக்கிறான்
ஒருவித லயிப்போடு.