மனிதர்கள் – அதீத மோகம்

செய்யும் காரியத்தில் மோகம். சாப்பிட்டால் சாப்பிட்டு கொண்டே இருத்தல். இல்லாவிட்டால் செய்யும் வேலையில் மோகம். உணவு உறக்கமின்றி வேலையிலே இருத்தல். சினிமாக்கள் பார்க்க தொடங்கி விட்டால் அப்படியே சினிமாக்களிலே லயித்திருத்தல். இப்படியாக ஒரு காரியத்திலே அதீத மோகத்தில் திளைத்திருப்பது பலருக்கு நடப்பது தான். இந்த அதீத மோகம் ஓர் எல்லையை தாண்டினால் மனநோயாகி விடுகிறது என்கிறார்கள். அதில் ஒரு வகை மனவியாதியின் பெயர் Obsessive Compulsive disorder. தமிழில் இதைக் கட்டுப்படுத்தவியலா பிளவுபட்ட மனநோய் என்கிறார்கள்.

இன்னொரு எளிதான விளக்கம், கைகளைக் கழவினால் கழுவி கொண்டே இருப்பதான ஒரு மன வியாதியைப் பல பேர் கேட்டு இருக்கக்கூடும். பூட்டு போட்ட பிறகு பூட்டு சரியாக போடப்பட்டிருக்கிறதா என சரி பார்த்து கொண்டே இருப்பது. பூட்டிய பிறகு ஒரு முறையோ இரு முறையோ அல்லது மூன்று முறை இழுத்து பார்ப்பது கூட மன பிரச்சனை அல்ல. ஆனால் நடு இரவு தூக்கத்தில் இருந்து எழுந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து பூட்டை இழுத்து பார்த்தால் மனப் பிரச்சனை இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம்.

OCD (Obsessive Compulsive disorder) பிரச்சனையின் உச்சத்தில் இருக்கும் ஒரு இளைஞனை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவனது பெயர் மைக்கேல். அவனை இளைஞன் என்று அழைக்க கூடிய தோற்றமல்ல. கல்லூரியில் முதலாமாண்டு படித்து கொண்டிருந்தான். ஒடிசலாய் ஒரு பள்ளிக்கூடத்து மாணவன் போல தோற்றம். ஆனால் கண்களில் ஒரு மெச்சூரிட்டி இருந்தது. நன்றாக படிக்க கூடிய பையன் தான். பாவம் இப்போது இந்தப் பிரச்சனை காரணமாய் படிப்பு கெட்டு விட்டது.

வேலையாய் கிளம்பும் போது எதிரில் பூனை வந்தால் போகிற காரியம் நிறைவேறாது என நினைப்பது போல அவனுடைய மனம் எல்லாவற்றிற்கும் ஓரு பட்டியல் வைத்து இருந்தது. சாலையில் நடக்கும் போது எதிர்படும் பேருந்துகளின் எண்களை கணக்கெடுத்து கொண்டே போவான். அதன் முடிவில் அன்றைய தினம் எப்படி இருக்கும் என அவனால் யூகிக்க முடிவதாய் அவனாய் நினைத்து கொள்வான். புதிதாய் அறிமுகமாகும் பெண் சிகப்பு நிற உடை அணிந்து இருந்தால் அவளால் ஆபத்து. பச்சை நிற உடை அணிந்து இருந்தால் கட்டாயம் நல்லவளாய் இருப்பாள். ஒரு வீட்டினுள் நுழையும் போது வாசலில் கிடக்கும் செருப்புகளில் எவ்வளவு செருப்புகள் ஜோடிகளாய் இருக்கின்றன, எவ்வளவு ஜோடி மாறி கிடக்கின்றன என்பதை எண்ணி பார்த்தால் அந்த வீட்டின் தன்மையை அறிந்து கொள்ள முடியுமென நம்பினான். இப்படி ஒரு நீளமான பட்டியல். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்க போகும் வரை அவனது மனதில் இந்த பட்டியல்களும் அதற்கான கணக்கெடுப்புகளும் நிரம்பி கிடக்கின்றன. இதன் காரணமாய் அவனது சிந்தனை வேறு எதிலும் லயிப்பதில்லை. எந்த எளிதான காரியத்தையும் செய்ய இயலாதவனாய் மாறி போனான்.

அவனோடு சில நிமிடங்கள் பேசிய போதே அவன் அறிவாளியாய் தெரிந்தான். தனக்கு இந்த நோய் இருப்பது பற்றியும் இந்த நோயின் முழு தன்மை பற்றியும் இணையத்தில் முழுமையாய் படித்து தேறியிருப்பது பற்றியும் சொன்னான்.

அவனுடைய பெற்றோர்கள் அவனை ஒரு நல்ல மனோத்தத்துவ நிபுணரிடம் காட்டியிருந்தார்கள். அவர் இதற்கான பிரத்யேகமான மருந்துகளை அவனுக்கு கொடுத்து கொண்டிருந்தார்.

பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது அவன் கெமிஸ்டரி பாடத்திற்காக ஒரு டீச்சரிடம் டியூசனுக்கு போயிருக்கிறான். டீச்சர் என்று சொன்னால் அது ஓர் இளம் பெண் தான். அந்த பெண்ணின் வீட்டில் தான் டீயூசன் கிளாஸ் நடந்து இருக்கிறது. அந்த பெண் இவன் மீது அதிக அக்கறை காட்டி இருக்கும் போல. அப்புறம் இவன் பிரச்சனைக்குரியவன் என புரிந்ததும் சற்றே விலகி இருக்கும் போல. அந்த பெண் தன்னை காமவயப்படுத்த திட்டமிட்டதாகவும் தான் சற்று தயங்கியதும் தன்னை பழிவாங்க வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும் என்னிடம் சொன்னான் மைக்கேல்.

அந்த பெண்ணை மறந்து விடுப்பா என நான் சொன்னாலும் மைக்கேல் அந்தப் பெண்ணை பற்றி தான் பேசி கொண்டு இருந்தான். ஏன் என்னை தனியாய் வர சொல்லி விட்டு பிறகு எனக்கு முன்னால் கிழிந்த நைட்டி போட்டு கொண்டு அவள் உலவ வேண்டும். என்னை பரிசோதித்து பார்த்து இருக்கிறாள் என்கிற ரீதியில் அவனது பேச்சு இருந்தது.

மற்றொரு சமயம் அவனை அறைக்கு வெளியில் அமர்த்தி விட்டு அவனது மருத்துவரோடு தனியாய் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த OCD பிரச்சனை இருப்பவர்களில் சிலருக்கு அதீத காம உணர்வுகள் இருக்குமென சொன்னார். அப்படியானால் அவன் தானாக பேசவில்லை. அவனாக இப்படியான கதாபாத்திரமாக மாறவில்லை. இந்த மனச்சிக்கல் தான் அவனை இப்படியாக மாற்றியிருக்கிறது. அப்படி என்றால் இது அவனில்லை, அந்த மனச்சிக்கல் தான். இல்லையென்றால் இந்த மனச்சிக்கலே அவன் தானா? பல கேள்விகளைக் கேட்க நினைத்தும் மருத்துவரிடம் எதுவும் கேட்காமல் கிளம்பி விட்டேன்.

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.