ஒரு வருடமாகி விட்டது!

ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று.

தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது.

வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.

இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான். இந்த வலையுலகத்தை அறிமுகம் செய்தவர் பாலபாரதி. தொடங்கிய சில நாட்களிலே ஓடி வந்து ஊக்கமளித்து இன்றும் தெம்பு தருபவர் ரவி. தவிர நிறைய நண்பர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

ஒரு வருடம் கடந்த இந்த வலைப்பதிவால் என்ன லாபம் என கேட்டால் எனக்கு தெளிவாக தெரியவில்லை. முதலில் ஓர் எழுத்து பயிற்சி. இந்த வலைப்பதிவு இல்லையெனில் 34 கவிதைகளை எழுதியிருக்கவே மாட்டேன். வாரத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் கவிதைகளை பதிக்க வேண்டும் என்கிற சுய விதிமுறையை அவ்வபோது நான் மீறி இருந்தாலும் 34 கவிதைகளை எழுதியதே எனக்கு பெரிய காரியம். அடுத்து கட்டாயபடுத்தி எழுதுவதெல்லாம் கவிதையா என்கிற கேள்வியை எழுப்பினால் இந்த 34-இல் ஒரு கவிதையாவது தேறி இருக்காதா என்றே யோசிக்கிறேன்.

கதையாடல் என்கிற பெயரில் நான் போட்டு கொண்டிருக்கும் புனைவும் இல்லாத, கட்டுரையும் அல்லாத இரண்டும் கலந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வகையறா பதிவுகளை தொடர்ந்து எழுத முடியவில்லையெனினும் அவ்வபோதாவது முயற்சி செய்வேன்.

வலைப்பதிவில் அவ்வபோது எழுதவில்லையெனில் அது உயிர்ப்புடன் இருக்காது என அறிவேன். அதற்காக தொடர்ந்து எதையாவது எழுதி கொண்டே இருந்தால் தரமிருக்காது என்றும் தெரியும்.

அடுத்த ஆண்டு இந்த சமயம் இந்த வலைப்பதிவு தொடங்கி இரண்டு வருடமாகி விட்டது என நான் எழுதும் போது இந்த வலைப்பதிவின் முகமும் தரமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அடுத்த முயற்சி.

அனைவருக்கும் நன்றி.

– சாய் ராம்