இருபது வருடங்கள் கழித்து ஒரு சந்திப்பு

இலையுதிர் காலம் போல நீ.
காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
கண்களில் குழப்பம்.
பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
சம்பந்தமில்லாத அழுகை.
புரியாத சிரிப்பு.
தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.

பொங்கிய பழைய நினைவுகள்
பழுப்பேறிய காகிதங்களாய்.
கனமாய் இருக்கிறது யதார்த்தம்.

அந்த நீண்ட பிரிவிற்கு பின்
நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.