“இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது”

மண் புழுதி தெருவில் பறக்க
அந்த அக்காவை
அவர்கள் இழுத்து சென்ற காட்சியை
அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக.

முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும்
அந்த மண் புழுதி
இன்னும் மறையவே இல்லை.
அதோடு, “இனி நம்ம சாதி பொம்பளைங்க
சாதி மாறி ஆசை வைக்க கூடாது,” என
அந்த பெண்ணின் மாமன்
சாராய வாடையோடு கர்ஜித்ததும்;
பெருங்குரலெடுத்து அந்த பெண்ணின் தாயார்
மண்டியிட்டு அழுததும்;
அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
கண்டெடுக்கபட்ட
கருகி போன அந்த அக்காவின் உடலும்
அவளை துரத்துகின்றன
ஒவ்வொரு முறையும்
அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.