வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?

டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதிகளும் அந்த தகவல்களை சொல்லும்படி கூகுள் நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்கள். இப்போது டாக்ஸிக் ரைட்டரின் வலைப்பதிவு ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். வலைப்பதிவு அழிக்கபட்டது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் இதே போன்று ஒரு வழக்கு நடந்தது. ஒரு வலைப்பதிவர் தனது ஊர் முனசிபல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அந்த அரசியல்வாதிகள், சம்பந்தபட்ட வலைப்பதிவர் மீது தங்களது ஊர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்கள். இஸ்ரேல் நீதிமன்றம் அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனத்தார் தெரிவிக்க வேண்டுமென கேட்டது. கூகுள் நிறுவனம் சார்பாக ஆஜரான வக்கீல்கள் வலைப்பதிவர் சம்பந்தமான தகவல்களை கொடுப்பது கருத்துரிமைக்கு எதிரானது என முதலில் வாதிட்டார்கள். இஸ்ரேல் நீதிபதி இந்த பிரச்சனையில் கிரிமினல் நடத்தை இருப்பதாக சந்தேகபடுவதாக சொன்னவுடன் கூகுள் மறுபேச்சு பேசாமல் தன் வலைப்பதிவரின் IP நம்பரை கொடுத்தது மட்டுமல்ல, அந்த வலைப்பதிவினை அழித்தும் விட்டது. இப்போது அந்த வலைப்பதிவின் முகவரியில் வேறு யாரும் பதிவு தொடங்க முடியாது என கூகுள் அறிவித்து இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மகாராஸ்டிரா அரசியல் தலைவர் பால் தாக்கரேயினை கொல்வதாக இணையத்தில் கருத்து சொன்ன ஓர் ஆர்குட் உறுப்பினரை கேரளாவில் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தார்கள். அதோடு பால் தாக்கரேக்கு எதிராக ஆர்குட்டில் ஏற்படுத்தபட்டு இருக்கும் குழுக்களில் உள்ள உறுப்பினர்களை கண்காணிக்கவும் காவல்துறையினரால் முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றன. கருத்தளவில் எனக்கு பால் தாக்கரேயின் மீது கோபம் இருந்து நான் என்றோ ஒரு நாள் பால் தாக்கரேயினை விமர்சிக்கும் குழுவில் உறுப்பினராகி பிறகு அதனை மறந்து விட்டால் கூட இன்று நான் காவல்துறையினரால் கைது செய்யபடும் ஆபத்து இருக்கிறது.

கடந்த ஆண்டு எகிப்தில் 22 வயது மாணவர் அப்துல் கரீம் தனது வலைப்பதிவில் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், எகிப்திய ஜனாதிபதியை பற்றி தவறான கருத்துகளை சொன்னதற்காகவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டார் என்பதை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். எகிப்தில் அப்துல் மோனம் மகமூத் என்கிற வலைப்பதிவரும் தன் வலைப்பதிவில் எழுதிய விஷயத்திற்காக 46 நாட்கள் சிறையில் இருந்தார். சீனாவில் அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதும் வலைப்பதிவர்களின் பக்கங்களை தடை செய்து விட்டார்கள் என கேள்விபட்டிருக்கிறோம். சவுதி அரேபியாவில் தனது உண்மையான பெயரை வெளிப்படையாக சொல்லி வலைப்பதிவு நடத்திய ஃபகுத் அல் ஃபர்கான் கடந்த ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் பத்தாம் நாள் கைது செய்யபட்டார்.

இங்கிலாந்தில் வாழும் 31 வயது பால் ரே என்பவர் லயன் ஹார்ட் என்னும் புனை பெயரில் வலைப்பதிவு எழுதி கொண்டு வந்தார். போதை பொருள் கள்ள வணிகம், இஸ்லாமிய அடிப்படைவாதம், காவல்துறை ஊழல் பற்றி அவரது வலைப்பதிவில் கருத்துகள் எழுதினார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இவரது எழுத்துகளினால் உண்டான பரபரப்பை அடுத்து இவருக்கு எதிராக இங்கிலாந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிருபிக்கபட்டால் அவருக்கு ஏழு வருடம் வரை தண்டனை கிடைக்கலாம். தற்போது அவர் அமெரிக்காவிற்கு குடி பெயர முடிவெடுத்திருக்கிறார்.

இப்போது எழும் கேளவி இது தான்? அரசியல்வாதிகளையோ பெரும் நிறுவனங்களையோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு பாதுகாப்பு உண்டா? நம்மூர் பெருந்தலைகளுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் கிடையாது என்பதை பத்திரிக்கையாளர்கள் அறிவார்கள். அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட அமைச்சரை பற்றி, அவரது லஞ்ச லாவண்யத்தை பற்றி தக்க ஆதாரங்களுடன் ஒரு தமிழ் பதிவர் தனது வலைப்பதிவில் எழுதினார் என்றால் அவருக்கு பாதுகாப்பு உண்டா என்பது ஒரு பெரும் கேள்விக்குறி. கூகுள் போன்ற பெரும் இணைய நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கங்களிடம் மோதி தங்களது வியாபார வளத்தை கெடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.

தமிழகத்தில் வலைப்பதிவர்களை கைது செய்வதும் அல்லது அவர்கள் மீது மானநஷ்ட வழக்குகளை போடுவதும் வருங்காலத்தில் நடப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும். தீவிரவாதிகள் என்னும் முத்திரை விழுந்து விட்டால் கேள்விகளே கேட்க முடியாது. முக்கியமாக விடுதலை புலிகள், நக்ஸ்லைட்கள், சிமி இயக்கத்தை பற்றி தொட்டும் தொடாமல் எழுதினாலே வலைப்பதிவர் மீது வட்டம் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நீதி மன்றத்தில் நின்று ஜெயிப்பதல்ல விஷயம். காவல் நிலையம், நீதிமன்றம் என்று இழுத்தடிக்க படுவதே தண்டனை தான்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தாங்கள் எழுதுவது குறித்து முதலில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடும் விமர்சனங்களை எழுதுபவர்கள் ஆதாரபூர்வமாய் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க யாராவது முனையும் பட்சத்தில் அதனை எப்படி எதிர்கொள்வது என தயாராய் இருக்க வேண்டும்.

மான நஷ்ட ஈடு வழக்கு
பேசப்படும் வார்த்தைகள், எழுதபடும் வார்த்தைகள், சைகையால் பரிமாறப்பட்ட தகவல் அல்லது தெளிவாய் புலப்படும் கருத்து பரிமாற்றம் – இவற்றின் மூலம் ஒரு நபருக்கு பாதிப்பு உண்டாக்கும் என தெரிந்தும் அவரது பெயருக்கு மாசு உண்டாக்குவது மான நஷ்ட ஈடு வழக்கிற்கு கீழ் வரும். எனினும் இதில் விதிவிலக்கு உண்டு.

  • பொது நன்மைக்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
  • அரசு ஊழியர் தனது கடமையில் இருந்து தவறியதை பற்றிய உண்மைகளை வெளியிடுவது.
  • பொதுவில் விவாதிக்கபடும் விஷயத்திற்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
  • நீதிமன்றத்தால் ஊர்ஜிதமாக்கபட்ட விஷயங்களை வெளியிடுவது.
  • பொது மக்களின் கருத்துகளை பெறுவதற்காக செய்யபடும் பொது காரியங்களை பற்றிய கருத்துகள்.
  • சட்டப்படி ஒருவரது நடத்தை விமர்சிக்கும் உரிமை இருக்கும் பட்சத்தில் தவறில்லை.
  • தனது பாதுகாப்பிற்கோ அல்லது நலனிற்காக மற்றொருவரின் உண்மைகளை வெளியிடுவது.
  • ஆபத்தினை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க செய்யபடும் சமூக நலனுக்கான காரியம்.

நான் வழக்கறிஞரோ சட்ட நிபுணரோ அல்ல. மேற்கோள் காட்டபட்டிருப்பது எனது புரிதலினால் எழுதியிருக்கும் சிறு விளக்கமே தவிர இந்த சட்டத்தை பற்றி முழுமையான விளக்கம் அல்ல. ஒருவரின் பெயருக்கு களங்கம் கற்பித்தது நிருபிக்கபட்டால் இரண்டு வருட சிறைதண்டனை கூட கிடைக்கலாம்.

தமிழ் வலைப்பதிவர்கள் மீது வழக்குகள், நடவடிக்கைகள் எடுக்கபட்டு பிறகு வலைப்பதிவுகளிலும் ஊடகங்களிலும் கண்டன குரல்களும் எழுந்து, அவற்றிற்கு பிறகு அரசு அதிகார வட்டங்களில் வலைப்பதிவருக்கான கருத்துரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வரை காத்திருந்தால், அதற்குள் சிலரது தலைகள் உருண்டிருக்கும். வருவதற்கு முன்பே தேவை விழிப்புணர்வு.

நன்றி:

கருத்து படம்: http://najialali.hanaa.net/

படம்: கைது செய்யபட்ட எகிப்து மாணவர் அப்துல் கரீம்