மனிதர்கள் – பணமில்லாதவன் சாகட்டும்

என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் முற்றிலுமாய் தளர்ந்து விட்டார்.

அன்று காலை அவரது தந்தை வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்தவுடன், நண்பர் தன் தந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து போயிருக்கிறார். நம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் முதலில் உயிரைக் காப்பாற்றுவோமென தான் நினைப்போம். பணத்தைப் பற்றி கவலைப்பட அப்போது தோன்றாது.

மருத்துவமனையில் நண்பரின் தந்தை சேர்க்கப்பட்ட இரண்டாவது நாள் தாம் நண்பருக்குத் தனது தவறு புரிந்தது. சூடு வைக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் போல ஒரு நாளைக்குச் சில ஆயிரங்கள் பில் தொகையாக உயர தொடங்கியது. தினமும் சில ஆயிரங்கள் என்பது விரைவிலே லட்சங்களில் போய் முடியலாம். நண்பரின் கையில் பணம் இல்லை.

நண்பரின் தந்தை உடல்நிலை மிக மோசமாகி கொண்டிருந்தது. வெண்டிலேட்டரில் தான் அவரது சுவாசம் காப்பாற்றப்பட்டு வந்தது. பில் தொகை அதிகமாகி கொண்டிருந்தாலும், மருத்துவர்களால் நண்பரின் தந்தையைக் காப்பாற்ற முடியுமென உறுதி அளிக்க இயலவில்லை. எப்படியிருந்தாலும் விரைவில் இறக்க போகிறார் என்பது அவர்கள் பேச்சில் புரிந்தது.

நோய்வாய்பட்டவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என நண்பர்கள் எல்லாரும் யோசனை சொன்னோம். கையில் பணமே இல்லாமல் ஒருவர் எப்படி பில் தொகையைச் செட்டில் செய்ய இயலும்?

அரசு மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலே வெண்டிலேட்டர் இருந்தன. அதற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இரண்டு மூன்று நாட்கள் அரசு மருத்துவமனை டீன் வரை பேசியும் வெண்டிலேட்டர் கிடைக்கும் என உறுதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தால் கூட வெண்டிலேட்டர் கிடைப்பது உத்தரவாதமல்ல. வெண்டிலேட்டர் இல்லாவிட்டால் நண்பரின் தந்தை உயிர் உடனே பிரிய கூடும் என்கிற ஆபத்து இருந்தது.

ஒரு வலுவான சிபாரிசை பிடித்து நண்பரின் தந்தையை அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றினோம். அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த அடுத்த கணமே யதார்த்தம் எங்களைச் சுட்டது. சிபாரிசு வேலை செய்யவில்லை. பொது வார்டில் அவரைப் போட்டார்கள். கையால் காற்றினை பம்ப் செய்ய ஒரு கருவி இருந்தது. அதனை ஒருவர் மாற்றி ஒருவர் பம்ப் செய்து கொண்டிருந்தோம். முப்பது படுக்கைகள் கொண்ட வார்டில் ஐம்பது நோயாளிகள் இருந்தார்கள். அட்மிட் செய்யும் போதே, ‘இவர் உயிருக்கு உத்திரவாதம் தர முடியாது,’ என சொல்லி விட்டார்கள்.

நண்பர் சத்தமாக அழ தொடங்கி விட்டார். எங்கள் எல்லாருக்கும் ஒரு கொலை செய்த குற்ற உணர்வு ஏற்பட்டது. மீண்டும் அங்கே பிடி, இங்கே பிடி என தொங்கி பல மணி நேரங்கள் கழித்து வெண்டிலேட்டர் வசதியைப் பெற்றோம். அதற்கான ஸ்பெஷல் வார்டு அந்த தனியார் மருத்துவமனையை விட பல மடங்கு உயர்வான வசதிகளுடன் இருந்தது. ஆனால் அரியதாய் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் இலவச வசதி.

பத்து நாட்கள் கழித்து நண்பரின் தந்தை இறந்து விட்டார். ஒரு வேளை நண்பர் கோடீஸ்வரராக இருந்து அமெரிக்கா வரை செலவழித்து இருந்தால் அவர் தன் தந்தையின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும். அல்லது சில லட்சங்கள் வைத்திருந்தால், தந்தையை அந்தத் தனியார் மருத்துவமனையிலே இறக்கும் வரை வைத்து இருந்திருக்க முடியும்.

பலமான சிபாரிசுகள் வைத்திருப்பவர்களுக்கே வெண்டிலேட்டர் போன்ற வசதிகள் கிடைக்காது என்கிற நிலை இருந்தால், அரசு மருத்துவமனையில் சேரும் ஏழை ஜனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால் மரணம் தான் தீர்வு போலும். இரண்டாவது மாடியில் உயிரை காக்க உபகரணங்கள் இருந்தும், கீழ் தளத்தில் எவ்வளவு ஆயிரம் பேர் இது வரை இறந்து போயிருப்பார்கள் என எண்ணிய போது உடல் நடுங்கியது.

நன்றி:

ஓவியம்: Zeng Fanzhi

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.