நிலவில் முதல் காலடி

ஒரு கனவு மெய்ப்பட்ட சம்பவம் அது; நிலவினில் மனிதன் காலடி வைத்தான். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல கனவுகளையும் மாற்றி விட்ட தருணமது.அமெரிக்க ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின் ‘அப்போலோ’ திட்டங்கள் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டவை. ஆறு அப்போலோ பயணங்கள் (அப்போலோக்கள் 11, 12, 14, 15, 16 & 17) இந்தக் குறிக்கோளை அடைந்தன. அப்போலோ 11, 16 ஜூலை 1969 அன்று ஏவப்பட்டது. ஜூலை 20, 1969-இல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவினில் காலடி வைத்தார்.

பயணத்தைத் தொடங்கும்பொழுது ‘விண்வெளிக் குழு’ உயிரோடு திரும்பி வருவதற்கு 90 சதவீத வாய்ப்பும், நிலவினில் காலடி வைப்பதற்கு 50 சதவீத வாய்ப்பும் இருந்ததாகவே ஆர்ம்ஸ்ட்ராங் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போலோ திட்டத்தில் செயலாற்றிய எல்லாருக்கும் இவ் விஷயம் தெளிவாகத் தெரியும். அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்குப் பின் பேச வேண்டிய உரையையும் தயாராக வைத்திருந்தார். நிக்சனுக்கு உரையை எழுதித் தரும் வில்லியம் சபையர், ‘விதி, நிலவினில் அமைதியாக ஆராயப் போனவர்களை அமைதியாக உறங்க வைத்துவிட்டது,’ என்று எழுதியிருந்தார். நிக்சன் அதனை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லாமல் அறிவியல் வளர்ச்சி விண்ணை முட்டி நின்றது.

அப்போலோ 11 விண்வெளி குழு உறுப்பினர்களின் அனுபவங்கள் அவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தும் ஆற்றிய உரைகளிலிருந்தும் பங்கேற்ற பேட்டிகளிலிருந்தும் தொகுக்கப்பட்டு ஒரு சிறு விவரிப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ 11விண்வெளிக்குழு
நீல். ஏ. ஆர்ம்ஸ்ட்ராங், தலைவர்.
மைக்கேல் கொல்லின்ஸ், விண்கல விமானி.
எட்வின் இ. ஆல்டிரின், நிலவு விண்கல விமானி.

இடம் – கென்னடி விண்வெளி மையத்தின் 39ஏ விண்கலம் ஏவுதளம்.

நாள் – 16 ஜூலை 1969
நேரம் – காலை 9:00 மணி

ஆல்டிரின்
விண்கலம் ஏவப்பட வேண்டிய நாளன்று, காலை உணவு வேளையின்போது, ‘நாசா’வின் நிர்வாகி முனைவர் தாமஸ் பைன் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். எங்களது பாதுகாப்பே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என அவர் அதில் குறிப்பிட்டார். அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நிகழக் கூடுமாயின் பயணத்தைப் பாதியில் விட்டுத் திரும்பி வந்து விட வேண்டும். அப்படிப் பாதியில் திரும்பி விட்டால், அப்போலோ 11 விண்வெளிக் குழுவுக்கு அடுத்த நிலவுப் பயணத்தில் கட்டாயம் வாய்ப்பளிக்கப்படும் என்று உறுதி கூறினார். அது எங்களுக்கு ஆச்சரியமாகயிருந்தது. ஏவப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஆர்ம்ஸ்ட்ராங், கொல்லின்ஸ் இருவரும் விண்வெளி உடையை அணிந்து கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக ஓர் ஓரத்தில் நின்றிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலைகளிலும், கடற்கரையிலும் மக்கள் கூடியிருந்தனர். நான் நின்
றிருந்த கட்டிடத்திற்கு அருகே ‘சேட்டன் V’ ராக்கெட் பிரம்மாண்டமாய் நின்றிருந்தது. அதன் தலையில் ‘அப்போலோ 11’ அமர்ந்திருந்தது. இந்தக் காத்திருத்தலை, இந்தக் கணங்களை என்றும் மறக்கக்கூடாது என நினைத்துக் கொண்டேன்.

ஆர்ம்ஸ்ட்ராங்
வெற்றிகரமாய் எங்கள் பயணம் தொடங்கியது. சேட்டன் எங்களுக்கு ஓர் அருமையான பயணத்தை உருவாக்கியது, நிலவை நெருங்கும் வரை.

ஆல்டிரின்
பிளோரிடா கடற்கரையில் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, எங்கள் ராக்கெட் ஏவப்பட்ட கணத்தில் செவி கிழியுமளவுச் சத்தம் உண்டாகியது. ஆனால் எங்களுக்கோ எங்கோ தூரத்தில் அந்தச் சத்தம் கேட்டது. ஒரு நிமிடத்தில் நாங்கள் ஒலியை விட வேகமாய் பயணித்துக் கொண்டிருந்தோம்.

கொல்லின்ஸ்
உருள்தல், ஆடுதல், அதிர்தல் எல்லாம் நடந்தன. வலதும் இடதும் விழுந்து எழுந்தோம். எங்கள் கலம் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது; அதிர்ச்சியில் ஒரு பெண் சிறிய சந்தினுள் பெரிய காரை ஓட்டிச் செல்வது போல் அது சென்று கொண்டிருந்தது.

ஆல்டிரின்
பதினோரு நிமிடத்தில் எங்களால் பூமியைப் பார்க்க முடிந்தது. இங்கிருந்து எந்த நாட்டின் எல்லைகளும் எங்களுக்குப் புலப்படவில்லை.

சேட்டன் கழண்டு கொள்ள அப்போலோ நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. விண்கலம் ஏவப்பட்டு பதினான்கு மணி நேரம் கழித்து, மூன்று விண்வெளி வீரர்களும் தூங்கத் தொடங்கினார்கள். இரண்டாவது மற்றும் மூன்றாம் நாள் கலத்தைத் தயார்ப்படுத்துவதில் கழிந்தது.
கொல்லின்ஸ்
நான்காவது நாளன்று, நாங்கள் நிலவைக் கண்டோம். ஒரு நாள் முழுவதும் நாங்கள் நிலவைப் பார்க்காமலிருந்து விட்டு இப்பொழுது பார்க்கிறோம். என் வாழ்வு முழுவதும் நான் அறிந்திருந்த நிலவல்ல அது. எங்கள் ஜன்னல் வழியாக முழு நிலவையும் காண முடியாத அளவு அது பெரியதாகயிருந்தது.

ஆல்டிரின்
இப்பொழுது கொல்லின்சை விண்கலத்திலே விட்டு விட்டு, நானும் நீலும் ‘ஈகிள்’ விண்கலத்தில் நிலவுக்குப் போக வேண்டும். எல்லாம் திட்டமிட்டபடியே நடந்து வருகின்றது.

ஈகிள் விண்கலம் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கையும் எட்வின் ஆல்டிரினையும் சுமந்தபடி நிலவை நோக்கிப் பயணித்தது. நிலவுக்கு அருகே சென்றபோது, அபாய விளக்கு எரியத் தொடங்கியது. கணனியை அளவுக்கதிகமான வேலைகளில் ஈடுபடுத்தியதால் பணி பாரம் தாங்காமல் அபாய விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. ஏதேனும் சில பணிகளைக் கைவிட வேண்டிய நிலை. அப்படிச் செய்தால் நிலவை மறந்து, திரும்பவும் வீட்டுக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான்.
ஆல்டிரின்
பூமியிலிருந்து கணனிப் பொறுப்பாளர் ஸ்டீவ் பெல்ஸ் எங்களைத் தொடர்ந்து முன்னேறச் சொன்னார். மேலும் இரண்டு அபாய விளக்குகள் எரியத் தொடங்கின. ஆனால் எதுவும் நிகழவில்லை. பின்னர் எங்கள் மூவருக்கும் அமெரிக்க அதிபர் மெடல்கள் அளித்த போது, ஸ்டீவ் – க்கு மட்டும் நான்காவதாக ஒரு மெடல் கொடுக்கப்பட்டது. அவரில்லையென்றால் இந்தப் பயணம் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்காது.இன்றைக்கு இருக்கின்ற கணனி முன்னேற்றங்கள் அன்றைக்கு (1969-இல்) இல்லை.விண்கலத்தை நிலவி
னில் இறக்குவது சுலபமானதாய் இல்லை. சிறிய தவறு கூட மரண வாசலைத் திறந்து விட்டு விடும். ஆனால் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், விண்கலத்தின் எரிபொருள் மேலும் முப்பது வினாடிகளே தாங்குமென்ற சூழ்நிலையிலும் திறமையாகக் கலத்தை நிலவினில் இறக்கினார். சில மணி நேர ஓய்வுக்குப் பின்னர் விண்வெளி வீரர்கள் இருவரும் கதவைத் திறந்து நிலவினில் கால் பதிக்கக் கிளம்பினார்கள்.

ஆர்ம்ஸ்ட்ராங்
பல நிபுணர்கள், ‘நிலவினுள் நுழையும்போது, புதுச் சுற்றுச்சூழல் காரணமாய் மனிதர்களின் அனுபவம் கடினமானதாய் இருக்குமெனக் கணித்திருந்தார்கள். ஆனால் எங்களுக்கு நிலவு நிம்மதியான இடமாகத் தெரிந்தது.

ஆல்டிரின்
ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து நான் ஏணி வழியாகக் கீழே இறங்கினேன். வெளியே எல்லா சுற்றுலாப் பயணிகளையும் போல், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நான் நிலவில் இறங்கிக் கால் பதிப்பதைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
சாய்ராம்
படங்கள் – நாசா 

ஜூலை 20 – 39 வருடங்களுக்கு முன்பு நிலவில் மனிதன் முதல் காலடி வைத்த நாள் இன்று. எட்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஆறாம்திணை இணைய இதழில் இந்த கட்டுரையை நான் எழுதியிருந்தேன். சில நாட்கள் கழித்து இந்த கட்டுரை ஆனந்த விகடனில் மறுபதிப்பு செய்யபட்டது.