ஆதி மொழி

மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல
புயல் கிளம்பியது போல
போலீஸ்காரர்கள் ஓடி வரவும்
சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க
பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள்.

போர்களமாய் சாலை பரபரப்பானது.
ஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க,
லத்தி உடலில் விழும் சத்தமும்,
வலியில் சிலர் கத்துவதும்,
பீதியுற்ற பார்வைகளும் அங்கு நிறைந்திருக்கின்றன.

சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அவன் எழுந்திருக்க முயலும் போது
அது கவிழ்ந்தது.
கால் சுளுக்கி கொண்டது.
அவன் எழுந்திருக்க முயலும் போதே ஒல்லியாய் இருந்த ஒரு போலீஸ்காரன்
உயர்த்தபட்ட லத்தியுடன் ஓடி வந்தான்.
சர்வமும் ஒடுங்கி கைகளை தலைக்கு மேலே வைத்து அவன் சுருண்டான்.

பணிதலை கண்ட லத்தி சந்தோஷமாய் கீழே இறங்கும் போது
மிருகத்தனமான அலறலுடன் குறுக்கே வந்தாள் அந்த ரிக்ஷாக்காரனின் மனைவி.

கலைந்த தலைமுடி,
விரித்த கைகள்,
திறந்த மார்புகள்,
மிருகத்தனமான அலறல்,
பார்வையில் தாங்க முடியா வீரியம்.

விழுந்து கிடந்த கணவனுக்கு
கேடயமாக தன் உடலை பரப்பி
இனம் புரியா மிருக அலறலுடன் நிற்கும் அந்த மனைவியை கண்டு
லத்தி திகைத்தது,
பயந்தது,
குழம்பியது,
வெட்கமுற்றது,
பின்வாங்கியது.