பயத்தின் நிழல் படிந்த கணம்

பைக்கின் உறுமல் ஒலியை காற்றில் மிதக்க விட்டு
அவன் என்னிடமிருந்து விடை பெற்று சென்று
சில கணங்கள் தாம் கடந்திருக்கும்.

கத்தியை கூர் தீட்டுவது போல ஒரு சத்தம்.
அவன் சென்ற திசையில்
யாரோ பைக்கிலிருந்து தூக்கியெறியபடுவதை பார்த்தேன்.
அதற்கு பிறகு நான் திரும்பவே இல்லை.
எதிர் திசையில் நடந்து கொண்டே இருந்தேன்.

முதிர் மாலை நேரத்து இருள்.
யார் என தெளிவில்லை.
அவனாக இருக்குமோ?

துப்பட்டாவை இழுத்து போர்த்தி
வீட்டை நோக்கி நடந்தேன்.
ஏற்கெனவே தாமதமாகி விட்டது.
தந்தை திட்டுவார்.

விபத்தின் தாக்கம் ஓர் அலை போல என்னை கடந்து சென்றது.
சிலர் அந்த பக்கம் ஓடினார்கள்.
சிலர் வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தார்கள்.

அவனாக இருக்காது.
வேறு யாரோ.
யாரோ ஒரு குடிகாரன்.

அவனாக இருந்தால் அவனுக்கு இப்போது உதவி தேவைபடும் அல்லவா?
அவனுக்கு விபத்து நேர்ந்ததை நான் பார்த்தேன் என யாருக்குமே தெரியாது.
அவனுக்கே தெரியாது.

இயந்திரங்களின் பிடியில் சிக்கிய பிரதான வீதிக்கு வந்த போது
அந்த விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை.

இருள் தெரு விளக்குகளின் வெளிச்சத்திற்கு போர்வையாகி கொண்டிருந்தது.
தந்தையிடம் என்ன பொய் சொல்வது?
தோழியின் பெயரை பல முறை சொல்லியாகி விட்டது.

அம்மா உள்ளே நுழையும் போதே மோப்பம் பிடிப்பாள்.
இன்று திருட்டுதனமாய் கன்னி கழிந்து வீடு வருகிறேன்.

அங்கிளிடம் குட்டி பொண்ணு என அப்பா என்னை சொல்லி கொண்டிருந்தது
நான்கு நாட்களுக்கு முன் இருக்குமா?

உடலில் இன்னும் அவனது கை விரல் மேய்ந்து கொண்டிருப்பதாய் தவிப்பிருந்தது.
இன்று அவனது பிடி உறுதியாக இருந்தது.
கன்னம் என்னையறியாமல் சிவந்திருக்குமென தோன்றியது.

அவன் இறந்திருப்பானா?
அவனில்லை. வேறு ஒரு குடிக்காரன்.

போன் செய்தால் தெரிந்து விடும்.
இப்போது அதற்கு நேரமில்லை.
வீட்டிற்கு போனபிறகு போன் செய்தால்
தந்தை கோபித்து கொள்வார்.
வீண் சந்தேகம் ஊட்டும்படியாக ஏன் நடந்து கொள்ள வேண்டும்.

உடையில் எதாவது தடயம் இருக்கிறதா?
அம்மாவின் கண்கள் ஆபத்தானவை.
உள்ளே நுழைந்தவுடன் நேராக பாத் ரூமிற்குள் ஓடி விட வேண்டும்.

குளியலறையில் சுடுதண்ணீரில் குளித்தபடி
இன்று நடந்ததை அசை போட வேண்டும்.

ஆனால் அவன் என் காதலன் இல்லை.

எங்கள் வீதியில் தந்தையின் நிழல் நீண்டு தெரிகிறது.