சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்தானம்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு. 1999ம் ஆண்டு மகரவிளக்கை பார்க்க கூடிய பெருங்கூட்டத்தில் நெரிசல் உண்டாகி விபத்தில் 53 பக்தர்கள் பரிதாபமாய் இறந்து போனார்கள்.
சபரிமலை மகரவிளக்கை பற்றி பல காலமாகவே முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பியபடி இருக்கிறார்கள். தானாக உருவாகுவதாக அல்லது கடவுளின் அருளால் உருவாகுவதாக பக்தர்கள் நம்பும் இந்த ஓளி உண்மையில் மனிதர்களால் உருவாக்கபட்டதே என பல ஆண்டுகளாக பலர் சொல்லியும் அதை பக்தர்கள் நம்பவில்லை. மகரவிளக்கினை காண வரும் கூட்டம் குறையவுமில்லை. பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதன்மூலம் தனது வருமானத்தை உயர்த்தி கொள்ள சபரிமலை தேவஸ்தானம் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மகர விளக்கு சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி வைத்திருக்கிறது. இந்த ஒளி தானாக உருவாகுவதில்லை, மனிதர்களால் தான் உருவாக்கபடுகிறது என வெளிபடையாக அறிவித்திருக்கிறார் கேரள தேவஸ்தான அமைச்சர் ஜி. சுதாகரன்.சபரிமலை பூசாரி ராகுல் ஈஸ்வர் ஒரு பேட்டியில், “மகரவிளக்கு பற்றிய சர்ச்சை தெளிவான பக்தர்கள் மனதில் என்றும் இருந்ததில்லை. அறியாமையில் இருக்கும் பக்தர்கள் தான் இதை இவ்வளவு காலமாக நம்பி கொண்டிருந்தார்கள். மகரவிளக்கும் மகர ஜோதியும் வேறு வேறு. மகர ஜோதி என்பது ஒரு புனிதமான நட்சத்திரம். மகர விளக்கு பொன்னம்பல மேடு என்னுமிடத்தில் இருக்கும் தீபத்தில் இருந்து உருவாக்கபடும் ஒளி,” என உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார். இதை தொடரந்து மகரவிளக்கினை உருவாக்குவதில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

மகர ஜோதியினை பற்றிய உண்மை வெளியானதற்கு பிறகு கட்டமைக்கபட்ட புனிதங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் குறையுமா?

சபரிமலை சர்ச்சைகள்

சமீப காலமாக ஐயப்பன் கோயிலை பற்றிய சர்ச்சைகள் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன. 14 வயதிற்கும் அறுபது வயதிற்கும் உட்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலில் அனுமதிக்கபட மாட்டார்கள் என்கிற பழக்கத்தை பற்றி பெண்ணுரிமைவாதிகள் கேள்வி எழுப்பியதோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்கள். நடிகை ஒருவர் அந்த கோயிலுக்கு சென்று கர்ப்பகிரகத்தை தரிசித்ததாக ஒரு பேட்டியில் சொல்லி அதிர்ச்சி அலையை எழுப்பினார். பிறகு சம்பந்தபட்ட நடிகையும் இன்னொரு பிரபல ஜோதிடரும் சேர்ந்து செய்த சதியே இந்த வீண் புரளி என செய்திகள் கிளப்பப்பட்டன. கோயில் நிர்வாகத்தின் தலைமை தந்திரி ஒருவர் விபச்சாரிகளுடன் இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் விளங்கியது. சமீபத்தில் அந்த கோயில் ஊழியர்கள் உள்ளாடை அணிய அனுதிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் ஒரு கொடிய பழக்கம் அழிக்கபட்டது.

கோயில்களில் நடக்கும் வியாபாரம்

குல சாமிகளுக்கும் பழைய கோயில்களுக்கும் இன்று பக்தர்கள் கூட்டம் குறைந்துவிட்டது. திருப்பதிக்கும் பழனிக்கும் பயணிப்பது போக்குவரத்து வசதிகளால் மிக எளிதாகி விட்டதனால் இன்று புகழ் பெற்ற கோயில் தலங்கள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பக்தி டூரிஸம் என அழைக்கப்படும் இந்த புதிய மாற்றத்தினை ஒவ்வொரு கோயிலும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முனைந்திருக்கிறது.

அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வசதிகளை மேம்படுத்துவது, பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டங்கள் என தேவஸ்தானங்கள் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் போல திட்டமிட வேண்டியதிருக்கிறது.

சமீபத்தில் ஒரு நாள் ஆந்திராவில் உள்ள காளஹத்தி கோயிலுக்கு சென்றிருந்தேன். திருப்பதியிலிருந்து இந்த கோயில் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. அதோடு தோஷம் உள்ளவர்களுக்கு அதனை நீக்க உதவும் தலமெனவும் புகழ் பெற்று விட்டதனால் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. பத்தடி நடந்து போய் சேர வேண்டிய கர்ப்பகிரகத்தினை போய் சேர ஒரு மணி நேரத்திற்கு கோயிலை சுற்றி ஒரு கியூ. 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுத்து ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் பத்தடி தூரத்தை பத்தடியில் கடக்கிறார்கள். இவர்கள் கர்ப்பகிரகத்தில் நிமிட கணக்கில் நிற்கலாம். ஆனால் மணிக்கணக்காய் காத்து கிடந்தவர்கள் கர்ப்பகிரகத்தில் சில வினாடிகளுக்கு மேல் நின்றால் பூசாரிகள் துரத்துகிறார்கள். அதோடு கர்ப்பகிரகத்திற்கு முன்னால் நான் வந்த போது, பஸ் கண்டெக்டர் கையில் ரூபாய் நோட்டுக்களை மடித்து மடித்து வைத்திருப்பாரே அதே பாணியில் ஒரு பூசாரி ரூபாய் நோட்டுக்களை பிடித்தபடி மந்திரங்களை ஃபாஸ்ட் பார்வர்ட்டில் சொல்லியபடி பணத்தை கேட்டார். அதாவது கர்ப்பக்கிரகத்தை தரிசிக்க கிடைக்கும் ஒரு சில வினாடிகளில் இந்த பூசாரியையும் சமாளிக்க வேண்டும். பாவம் தான் ஏழை பக்தர்கள்.

கோயிலுக்கு வெளியே செருப்பினை விட்டு செல்வதற்கு இலவசமாகவே வசதி இருக்கிறது. ஆனால் அந்த இடத்தை அடைவதற்கு முன் பதினைந்து கடைகளை கடக்க வேண்டும். வழியில் நின்றபடி, ‘செருப்பு போட்டுட்டு கோயிலுக்கு போக கூடாது,’ என அச்சுறுத்தும் குரலில் சொல்லும் பலர் தங்கள் கடைகளில் செருப்பினை வைக்கும்படி ஏமாற்றுகிறார்கள். இப்படி பல வியாபார தந்திரங்கள். பல பிரபல கோயில்களில் இது போன்ற அனுபவங்கள் தினசரி கிடைக்கின்றன. கோயில் வாசலில் அமர்ந்திருந்த போது பையிலிருந்த வாழைப்பழங்களை குரங்குகள் தூக்கி கொண்டு ஓடின. அவரவர் வயிறு அவரவருக்கு. ம்கூம்.