மனிதர்கள் – காப்ரே நடன பெண்ணை மணந்தவன்

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணிபுரிந்த போது எனக்கு கல்யாண் என்னும் மனிதரின் அறிமுகம் கிடைத்தது. கல்யாணிற்கு 35 வயதிருக்கும். சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் அவ்வப்போது நடித்து கொண்டிருப்பவர். தவிர ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவிதமான வேலை செய்து பிழைத்து கொண்டிருப்பவர்.

சில வருடங்களுக்கு முன்பு கல்யாணிற்கு ஒரு பெண் மீது காதல் பிறந்தது. அது பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய ஒரு தமிழ் பெண்ணைப் பார்த்தவுடன் அவள் மீது காதல் பிறந்து விட்டது. அதற்குப் பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்தப் பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரைப் பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்தப் பெண்ணையே மணந்து கொண்டார்.

கல்யாணிற்குத் தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு தான், தன் மனைவி ஏற்கெனவே ஓர் ஆளுடன் வாழ்ந்து கொண்டிருந்த விவரம் தெரிய வந்தது. என்றாலும் திருமணத்திற்குப் பிறகு அது போல எதுவும் நேர கூடாது என மனைவியை எச்சரித்து அவளுடனே வாழ தொடங்கினார். திருமணத்திற்குப் பிறகு காப்ரே நடனம் ஆட மாட்டேன் என சொன்ன மனைவி திருமணத்திற்குப் பிறகும் நடனத்திற்குப் போவதை நிறுத்தவில்லை. தன் குடும்பத்திற்கு உள்ள இரண்டு லட்சம் ரூபாய் கடனை அடைத்துவிட்டு அந்தத் தொழிலில் இருந்து விலகி விடுவதாக சொன்னார். சினிமாவில் ஹீரோவாகி விட வேண்டுமென இருந்த கல்யாணிற்குப் பணத்தின் தேவை அப்போது தான் உறைக்க தொடங்கியது. தன் சினிமா கனவைத் தூக்கியெறிந்து விட்டு ஒரு ஹோட்டலில் வேலை செய்ய தொடங்கினார்.

கல்யாணின் மனைவிக்குச் சிகரெட், மது என பழக்கமிருந்தது. அத்துடன் அவ்வப்போது மற்ற ஆண்களுடன் அவருக்குத் தொடர்பிருப்பதாக செய்திகள் வர தொடங்கின. இதனால் தினமும் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவு தொடங்கியது. கல்யாணின் மாமியார் அவரை மோசமாக நடத்தியிருக்கிறார். ஒரு ஹோட்டல் முதலாளிக்கும் தன் மனைவிக்கும் உறவு நீடிப்பதை அறிந்து மனமொடிந்து கல்யாண் மனைவியைப் பிரிந்து தனியே சென்னைக்குத் திரும்பினார்.

கல்யாண் தன் மனைவியைப் பிரிந்து வந்ததைக் கேள்விப்பட்டு அவரது பெற்றோர் சந்தோஷப்பட்டார்கள். அவர்களது வற்புறுத்தலால் விவாகரத்தும் கோரி பெற்றார். என்றாலும் அவரால் தன் காதலை மறக்க முடியவில்லை. வாழ்க்கையின் மீது பிடிப்பில்லாமல் வாழ்ந்து வந்தார்.

வருடங்கள் உருண்டோடின. ஒரு நாள் கல்யாணிற்கு அவரது முன்னாள் மனைவியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இப்போது தான் அவருடைய உண்மையான அன்பினைப் புரிந்து கொண்டதாகவும் உடனே தன்னைப் பார்க்க வரும்படி அவரது முன்னாள் மனைவி அழுகையுடன் பேசினார். கல்யாண் மும்பைக்கு உடனே போனார். அங்கே அவரது மனைவி ஒரு குழந்தையுடன் இருந்தார். விவாகரத்திற்குப் பிறகு வேறொரு ஆணுடன் தனக்கு தொடர்பிருந்ததாகவும் அதன் மூலம் இந்தக் குழந்தை பிறந்ததாகவும் ஆனால் குழந்தை ஊனமாக பிறந்து விட்டதால் அந்த நபர் விலகி விட்டதாகவும் இப்போது பிழைக்க வழியின்றி இருப்பதாகவும் அந்த பெண் சொல்லியிருக்கிறார்.

கல்யாணிற்கு எப்போதுமே தன் மனைவி மீது அளவுக்கடந்த காதலுண்டு. மீண்டும் திருமணம் செய்து கொண்டு இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினார்கள். தன் மனைவியின் குழந்தையின் மீது முழுமையாக கவனமெடுத்து கொண்டு கல்யாண் வாழ தொடங்கினார். குடும்பத்தை நடத்த அவரது மனைவி மீண்டும் காப்ரே நடனம் ஆட வேண்டியிருந்தது.

வறுமையில் நன்றாக இருந்த கணவன் மனைவி உறவு கொஞ்சம் பணம் சேர தொடங்கியதும் பிரச்சனைகளைச் சந்திக்க தொடங்கியது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனது. அதோடு கல்யாணின் மாமியார் அவர்களுடன் வாழ வந்தார். கல்யாணின் மனைவி மீண்டும் தினமும் குடித்து விட்டு வர தொடங்கினார். அதோடு மனைவிக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வர தொடங்கின. மாமியாரின் தொல்லைகளையும் மனைவியின் அலட்சியத்தையும் தாங்க முடியாமல் கல்யாண் மீண்டும் மனமொடிந்து சென்னைக்குத் திரும்பினார்.

கல்யாண் என்னைப் பார்க்க வந்த போது பல நாள் தாடியுடன் ஒரு மன நோயாளி போல தோற்றத்தில் இருந்தார். தன் மனைவியுடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டுமென கல்யாண் என்னிடம் கேட்டார். அவரது கதையைக் கேட்ட பிறகு நான் அவரிடம் நீங்கள் இவ்வளவு கேவலமாக நடத்தபட்ட பிறகு மீண்டும் அந்தப் பெண்ணுடன் ஏன் சேர்ந்து வாழ ஆசைபடுகிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை என்னால் இன்று வரை மறக்கவே முடியவில்லை.

“என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் இதான் சார் சொல்றாங்க. அவங்க கேக்கறதை என்னால புரிஞ்சுக்கவே முடியல. ஒரு பொண்ணு வந்து அவ புருஷனை இன்னொரு பொண்ணு கவர்ந்துட்டு போயிட்டா அப்படின்னு புகார் சொன்னா எல்லாரும் அந்தப் புகார் சொன்ன பொண்ணுக்குச் சப்போர்ட் பண்ணி பேசுவாங்க, புருஷனோட சேர்ந்து வாழ உதவுவாங்க. என் மனைவியை இன்னொருத்தன் கவர்ந்திட்டு போயிட்டான்னு சொன்னா அவ கூட இனி நீ ஏன் வாழணும்னு கேட்கிறாங்க. அதென்ன ஆம்பிள்ளைன்னா ஒரு நியாயமா? என் பொண்டாட்டி மேல எனக்கு காதல் இருக்க கூடாதா?”

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
6 responses to “மனிதர்கள் – காப்ரே நடன பெண்ணை மணந்தவன்”
  1. நிஜமாகவே நெஞ்சை தொட்ட பதிவு. மிகச் சரியான வாதம்.பல பேர் புரியாமல் பேசுகிற விஷயத்தை மிகத் தெளிவாக அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  2. Thamizhmaangani Avatar
    Thamizhmaangani

    ரொம்ப கஷ்டமா போச்சு படித்தவுடன். அந்த பொண்ணு தன் கணவனின் அன்பு புரியாமல் நடந்து கொள்கிறாளே என்று அனுதாபம் படுவதா இல்ல கோபம் படுவதா என்று தெரியவில்லை. உங்க நண்பரை நினைத்தால் தான் பாவமா இருக்கு!எல்லாம் சரியாய் போய்விடும் என்று கடவுளை வேண்டுகிறேன்.!!

  3. அருப்புக்கோட்டை பாஸ்கர் Avatar
    அருப்புக்கோட்டை பாஸ்கர்

    சார் ,இது கதை யா அல்லது நிகழ்ந்த நிகழ்வா ?அருவை பாஸ்கர்

  4. மங்களூர் சிவா Avatar
    மங்களூர் சிவா

    /ஒரு பொண்ணு வந்து அவ புருஷனை இன்னொரு பொண்ணு கவர்ந்துட்டு போயிட்டான்னு புகார் சொன்னா எல்லாரும் அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணி பேசுவாங்க, புருஷனோட சேர்ந்து வாழ உதவுவாங்க. என் மனைவியை இன்னொருத்தன் கவர்ந்திட்டு போயிட்டான்னு சொன்னா அவ கூட இனி நீ ஏன் வாழணும்னு கேட்கிறாங்க. அதென்ன ஆம்பிள்ளைன்னா ஒரு நியாயமா? என் பொண்டாட்டி மேல எனக்கு காதல் இருக்க கூடாதா?”/இங்க அந்த பொண்ணை எவனும் கவர்ந்துகிட்டு போகலை.இது முதல் தடவையும் இல்லை. அந்த பெண்ணின் கேரக்டர் சரியில்லை கதைப்படி.உங்க நண்பரை நினைத்தால் தான் பாவமா இருக்கு!இது கதைதானே??

  5. Sai Ram Avatar
    Sai Ram

    என் பதிவினை படித்து மறுமொழி எழுதியதற்கு Rapp, thamizhmaangani, aruvai baskar மற்றும் மங்களூர் சிவா ஆகியோருக்கு நன்றி.மங்களூர் சிவாவிற்கு, புருஷன் கேரக்டர் சரியில்லை, பல பெண்களுடன் தொடுப்பிருக்கு என ஒரு பெண் போய் புகாரிட்டால் புருஷனை உதைத்து நல்ல வார்த்தை சொல்லி மீண்டும் மனைவியுடன் வாழ அனுப்பி வைப்பார்கள். அது போன்ற அர்த்தத்தில் அந்த வசனம் எழுதபட்டிருக்கிறது.மனிதர்கள் என்கிற பெயரில் நான் எழுதும் பதிவுகள் நிஜமும் கற்பனையும் கலந்தவை. இந்த பதிவு நூற்றுக்கு நூறு உண்மை. பெயர் மட்டும் மாற்றபட்டிருக்கிறது.

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    கடைசி வரிகள் கொஞ்சம் இடிக்குது. ஒரு ஆண் வேறொரு பெண்ணோட போனா மன்னிச்சு ஏத்துக்கிற பெண்களைப் பார்த்திருக்கேன். ஆனா, ஒரு ஆண் திரும்பத் திரும்பத் தவறும் போது, வேறு வேறு பெண்களோடு போய்க் கொண்டே இருக்கும் போது பெண்களும் கூட பொறுமை காப்பதில்லை. அதையும் மீறி சேர்ந்து வாழத் துடித்தால் அது காதலால் தானா என்பதும் கேள்விக்குரியது. ஆண் நல்லவனோ கெட்டவனோ அவனோடு சேர்ந்து வாழ்வது பெண்ணுக்கு அழகு என்று சமூகம் கற்பிக்கிறது. கற்பிதங்கள் போக சேர்ந்து வாழ வேண்டிய பொருளாதாரத் தேவைகளும் இருக்கலாம். ஆணுக்கு, இந்தத் தேவைகள் இல்லாததால் தான் “அத்துவிட வேண்டியது தான” என்று பேச்சுகள் வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.