மொட்டை மாடியில் உலாவுபவர்கள்
மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களை
சாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்
இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.
கிராமத்தில் தனது வீடு மட்டுமே காங்கிரீட் வீடு என்கிற
அகங்காரத்தின் காரணத்தினால்
தன் மொட்டை மாடியில் உலா வந்த சிறுவன் பாண்டி.
இளைஞன் ஆன பின் கல்லூரி ஹாஸ்டலிலே
மொட்டை மாடியில் தான் அரட்டை கச்சேரி
விடிய விடிய அரங்கேறும்.
திருமணத்திற்கு பிறகு
அறியா நகரத்தின் பற்கள் கொடுத்த காயத்தை போக்க
மனதை லேசாக்க மொட்டை மாடியில் அமர்ந்து
கண்ணுக்கெட்டிய தூரம் மனிதர்களும் கட்டிடங்களுமாய் தெரியும்
நகரத்தை பார்வையால் வெறித்திருப்பான்.
மனைவியின் மரணத்திற்கு பின்பு
மகனுக்கும் மருமகளுக்கும் கூடுதல் சுமையாய்
தன்னை கருதி வாழும் பாண்டிக்கு
இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனை.
அவர்கள் அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மொட்டை மாடியில் யாருக்கும் அனுமதியில்லை.
இறந்து போனான் விரைவில்.
சொர்ணம்மாளுக்கு மொட்டை மாடியில் தான்
தன் முதிய வயது ஒத்த தோழிகள் உண்டு.
மருமகளை பற்றி பேச பேச குறையாமல் இருக்கும் புகார்கள்.
பதினெட்டை தொடாத ஒரு சிறுமிக்கு
மொட்டை மாடியில் தன் எழிலை காட்டியபடி
மற்றவர் எல்லாரையும் பார்த்தபடி இருப்பது பிடித்திருக்கிறது.
அவளது அம்மா ஏன் திட்டுகிறாள் என்பது தான் புரியவில்லை.
காதலிக்கு காத்திருக்கும் கோட்டை அவனது மொட்டை மாடி.
காதலை பறிமாறும் நந்தவனம்
அவளது மாடி.
குடித்து விட்டு அடிக்கும் கணவனை பழி வாங்க
தன் கை குழந்தையுடன் விஜயா
சாவை நோக்கி கீழே குதித்ததும் இங்கிருந்து தான்.
இரவில் நகரத்து வெளிச்சம் விழுங்கிய நட்சத்திரங்கள் போக
சிலது இன்னும் பிரகாசிக்கும் போது
கள்ளதனங்கள் அரங்கேறும்.
மதிய வெயிலில் யாரும் நெருங்கா நேரத்தில்
துணிகளும்
வடகமும்
மொட்டை மாடிகளை அடுத்த நாடகங்களுக்கு தயார் செய்யும்.
நிறைய விசயங்களை நியாபகப்படுத்துகிறது இந்த கவிதை..
நன்றி கயல்விழி முத்துலெட்சுமி! என்னுள் தாக்கமேற்படுத்திய கருத்து/நிகழ்வு/எண்ணம் – இவற்றை கவிதையாய் கொடுக்க முயற்சித்து வருகிறேன். என் கவிதை அதே தாக்கத்தை வாசகரிடத்தில் ஏற்படுத்தவில்லையெனிலும் எங்கோ எதையோ தட்டி சென்று ஒரு பொறியை ஏற்படுத்துகிறது என்பதே நிறைவு தான்.