பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை

பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை

பேய், திகில், அமானுஷ்யம், திரில்லர் என்கிற மூடில் கதை வாசிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இந்த கதையை வாசிக்க வேண்டாம்.

நண்பர் யெஸ்.பாலபாரதி தன்னுடைய விடுபட்டவை வலைத்தளத்தில் பேய் வீடு என ஒரு சிறுகதையை பதித்திருக்கிறார். அதனை படித்தவுடன் எனக்குள் ஏதோ ஓர் உத்வேகம். அதே கதையை நான் மளமளவென எனது நடையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விட்டேன். இன்னொருத்தர் கதையை இப்படி உரிமை கொண்டாடுவது தவறு தான். என்றாலும் கதை என் மீது செலுத்திய தாக்கமே இதற்கு காரணம்.

இப்போது என் கதையை படிக்கும் போது பாலபாரதியின் கதைத்தலே சிறப்பாக இருக்கிறது என்றும், நான் தேவையில்லாமல் அதனை பாடுபடுத்திவிட்டேன் என்றும் தோன்றுகிறது. என்றாலும் எது சரி, எது தவறு, காரணம் என்ன போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கதையை பதிக்க அனுமதி அளித்த நண்பர் யெஸ்.பாலபாரதிக்கு நன்றி. இந்த கதையை படிப்பதற்கு முன் வாசகர்கள் அவரது பேய் வீடுகதையை படித்துவிடுதல் வாசிப்பனுபவத்திற்கு உகந்ததாக இருக்கும்.

**********

கடற்காற்றில் அனல் மிகுந்திருந்த ஒரு மதிய பொழுதில் எனக்கு பேய் பயம் தெளிந்தது.

ஊரில் கூடாரமடித்திருந்த நாடக குழுவை சேர்ந்த பட்டினத்துக்காரியை அந்த பங்களா வாசலில் பார்த்தேன். யாரும் சஞ்சாரிக்காத பாழடைந்த பேய் பங்களாவின் கோட்டை சுவர் இரும்பு கேட்டினை திறந்து அவள் வெளிப்பட்டாள். அவள் பார்வையில் ஒரு திருட்டுதனம். தூரத்தில் சைக்கிள் ஓட்டி வந்த என்னை பார்த்தவுடன் தனது பார்வையை திருப்பி கொண்டு அவசர அவசரமாய் ஊரை நோக்கி நடந்தாள். முதலில் எனக்கு குழப்பமாய் இருந்தது. நான் பங்களா வாசலுக்கு சைக்கிள் மிதித்து வந்த சேர்ந்த போது ஒரு மின்னல் போல தங்கரசு சித்தப்பா அதே திருட்டு பார்வையோடு பங்களாவிலிருந்து வெளிபடுவதை பார்த்தேன்.

“ஹே சங்கரா. எங்கடா?” அவரது குரலை அலட்சியப்படுத்தி சைக்கிளை வேக வேகமாய் ஊரை நோக்கி மிதித்தேன். அவரது முகத்தில் தோன்றிய அவமான குறி என் நினைவுகளில் அழிக்க முடியா தழும்பாய் மாறி போனது.

சைக்கிளை மிதிக்க மிதிக்க பலவிதமான உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. ஓர் அணும் பெண்ணும் தனிமையில் இருந்து வெளிபடுவதை புரிந்து கொள்ளும் வயது எனக்கு அப்போது தான் தொடங்கியிருந்தது. என்றாலும் சித்தப்பாவின் துரோகம் மன்னிக்க முடியாதது. கடற்கரை மண்ணில் சைக்கிளை மிதித்து ஓட்டுவது கஷ்டமாக இருந்தது. என்றாலும் கால்களை உறுதியாய் தள்ளி வேக வேகமாய் மிதித்தேன். இந்த துரோக கணத்திலிருந்து எவ்வளவு விரைவாக தள்ளி போய் விட முடியுமோ அவ்வளவு விரைவில் தள்ளி போக நினைத்தேன். ஆனால் இது வாழ்க்கை முழுவதும் துரத்தும் என அப்போது எனக்கு தெரியாது.

நாங்கள் சிறுவர்களாய் இருந்த போது எங்களுக்கு பேய் பயம் இருந்தது. எங்கள் கிராமத்தில் உள்ள பலருக்கு பேய் பயம் இருந்த காரணத்தினால் எங்களுக்கும் அது தொற்றியிருந்தது. என்றாலும் பேய் பயத்தினை எங்களுக்குள் அபரிதமாய் ஊட்டியது அந்த கடற்கரை ஓரமாய் இருக்கும் பேய் பங்களா தான்.

ஆட்கள் அதிகம் சஞ்சரிக்காத பகுதியில் கடலை பார்த்தவாறு அமைந்திருந்தது அந்த பங்களா. பாழடைந்த பங்களா. பேய் படத்தில் காட்டுவார்களே அந்த இலக்கணம் கொஞ்சமும் குறையாத பங்களா. செதிலாய் செதிலாய் தோல் உறிந்து கிடக்கும் சுண்ணாம்பு பூச்சு கடற்காற்று அரிப்பில் தனக்கான ஒரு திகில் நிறத்தை தன் மீது பூசி கொண்டிருந்தது. ஜன்னல், கதவுகள் தேக்கு மரத்தின் நுண்வாசனையை இழந்து கரும்பழப்பு நிறத்திற்கு மாறி விட்டன. அழகிய வேலைப்பாடுகள் கோயில் கதவுகளை போல அந்த பங்களாவின் மரசட்டங்களுக்கு உண்டு. முகப்பு கதவு நுணக்கமாய் பூ வேலைப்பாடுடன் அழகிய வரைகோடுகளை கொண்டிருந்தது. நுட்பமாய் பார்த்தால் அதனுள்ளே பாம்புகளின் உருவமும் நிர்வாண பெண்களும் உயிர்ப்புடன் இருப்பார்கள். பேய்களுக்கும் அழகிய பெண்களுக்கும் கருத்த பாம்புகளுக்கும் திகில் கதையில் முக்கியத்துவம் உண்டு என அறிவீர்கள் தானே. பங்களாவை அருகில் சென்று பார்க்கும் பாக்கியம் சிறுவர்களுக்கு கிடையாது. பெரிய கோட்டை சுவர்கள் பேய் பங்களாவை தனக்குள் சிறை வைத்திருந்தன. அமாவாசை இரவன்று கோட்டை சுவர்களை அந்த பேய் பங்களா வன்மம் கொண்டு தாக்கும். அடுத்த நாள் காலை கோட்டை இரும்பு கேட் பாதி திறந்து கிடப்பதை எல்லாரும் பார்ப்பார்கள்.

பேய் பங்களாவின் கோட்டை சுவர்களுக்கு உள்ளே புதிரான புதுவித மரங்கள் உண்டு. இளம் மஞ்சள் நிறத்தில் விகாரமான பூக்கள் எப்போதாவது அந்த மரங்களில் பூக்கும். வௌவால்களை முதன்முதலாக அந்த பங்களாவில் தான் பார்த்தேன். பேய்கள் நிரம்பிய அந்த பங்களாவின் அமானுஷ்யம் என் பால்ய காலத்து கற்பனைகளில் பிரதான அங்கம் வகித்தது.

“சண்டாளி நூறு வருஷமானாலும் புருஷனை மன்னிக்காம பேயாட்டம் போடறாளே,” என அங்கலாய்த்தாள் பாட்டி. நான் பேயை பற்றி அறிய தொடங்கிய வயதில் அவளோடு அந்த பங்களாவை ஒட்டி நடந்து போன போது தான் இந்த அங்கலாய்ப்பு. பெரிய கோட்டை சுவர்கள் வெளிறி கற்கள் உறுதியிழந்து இருக்க பாட்டி என் கை பிடித்து கடற்கரை மணலில் நடந்தாள். கோட்டையின் இரும்பு கேட் திறந்து கிடந்தது. இது தான் பாட்டியை சத்தமாய் பேச தூண்டியிருக்கும்.

பாட்டியின் பேச்சின் அர்த்தம் புரியாமல் திகைத்து நின்றிருந்த என்னை அவள் இழுத்து கொண்டு இன்னும் வேகமாய் நடக்க தொடங்கினாள். பிறகு அந்த பேய் பங்களாவின் கதையை அவள் தான் முதலில் எனக்கு சொன்னாள்.

நூறு வருடங்களுக்கு முன்பு இந்த பங்களாவை ஒரு வடக்கதியக்காரர் விலை கொடுத்து வாங்கினாராம். அவரை மராட்டியகாரர் என்றும், காஷ்மீர் முஸ்லீம் என்றும் பலர் பலவிதமாய் சொல்வார்கள். வயதிலே பழுத்திருந்த அந்த நபருக்கு இளமையாக ஒரு மனைவி. அழகிலே அவளை போல் வேறு பெண்ணை பார்த்ததில்லை என்பார்கள். அவ்வளவு பெரிய பங்களாவில் கணவன் மனைவி மற்றும் ஒரு கூன் விழுந்த வேலைக்காரி இவர்கள் மூவர் தாம். இந்த மூவரும் பங்களாவை விட்டு வெளியே வருவதே அரிது. கிராமத்தில் உள்ளவர்களிடம் பேசுவதே கிடையாதாம்.

ஒரு நாள் மதியம், கடற்கரையில் கதை பேசி அமர்ந்திருந்த சில இளைஞர்கள் அந்த அழகிய இளம் மனைவி உடலெல்லாம் தீ பற்றி எரிய கடலை நோக்கி ஓடுவதை பார்த்தார்கள். கடலுக்கு கொஞ்சம் முன்னாலே அவள் சுருண்டு விழுந்து விட்டாள். கடல் அலை அவளை நனைத்த போது அவளது உயிர் பிரிந்திருந்தது. அவள் தற்கொலை செய்து கொண்டதாய் அழுதார் அந்த முதியவர். ஆனால் தினமும் பங்களாவில் கணவனும் மனைவியும் சண்டையிடும் சத்தத்தை கேட்டிருந்த கிராமத்தவர்கள் அந்த முதியவர் தான் தன் மனைவியை கொன்று விட்டதாய் பேசி கொண்டார்கள்.

மனைவி இறந்த பிறகு அந்த முதியவரையோ கூன் விழுந்த வேலைக்காரியையோ யாரும் பார்க்கவில்லை. இருவரும் ஊரை விட்டு போய் விட்டதாக நினைத்து கொண்டிருந்தார்கள். சில வருடங்கள் கழித்து யாரோ எழுப்பிய சந்தேகத்தின் பேரில் பங்களாவில் நுழைந்து பார்த்த போது வீட்டின் மாடி அறையில் அந்த முதியவரின் பிணத்தையும் சமையலறையில் அந்த கிழவியின் பிணத்தையும் எலும்பு குவியல்களாக பார்த்தார்கள். பிணத்தின் நாற்றம் கூட இல்லை. காளான் புற்றிலிருந்து எலும்புகளை காப்பாற்றி சுடுகாட்டில் எரித்தார்களாம்.

பாட்டி சொன்ன கதையை அதற்கு பிறகு பல வடிவங்களில் பல விதமாய் கிராமத்தவர் பல பேரிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் மற்ற கதைகளிடமிருந்து வேறுப்பட்டவை.

தங்கரசு சித்தப்பா தான் அந்த பங்களா பற்றிய கதைகளை அடுத்தடுத்து புதுபுது விதங்களில் எங்களுக்கு சொல்ல தொடங்கினார். பெரிய மீசையும் தழும்புகள் நிறைந்த முகமுமாய் இருக்கும் தங்கரசு சித்தப்பா மிகவும் அன்பானவர்.

“எந்த வேலயும் செய்யாம அடுத்தவன் காசுல சாப்பிடுறது எப்படின்னு இவன்கிட்ட தான் கத்துக்கணும்,” என அப்பா எல்லாரிடமும் புகார் சொல்வார். தங்கரசு சித்தப்பாவிற்கு சென்னை பட்டினத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்ததாம். ஆனால் ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து ஓடி வந்து விட்டார். அவ்வபோது வெளியூர்களுக்கு சென்று வேலை செய்வது பிறகு மாதக்கணக்கில் கிராமத்திலே வெட்டியாய் இருப்பது என்பது தான் சித்தப்பாவின் வாழ்க்கை. அதோடு குடியும் பீடி பழக்கமும் வேறு.

சிறுவர்களாகிய எங்களை பொறுத்த வரை சித்தப்பா பல பட்டினங்களை பார்த்தவர். அதனால் அவரிடம் எப்போதுமே சுவாரஸ்யமான விஷயங்கள் சொல்வதற்கு இருந்தன. சென்னையில் இருந்த வெள்ளைக்காரன் கோட்டை, திருச்சியில் இருந்த மலைக்கோயில், மதுரை மீனாட்சி கோயில் இப்படி உலகை வரைப்படமாக்கி எங்களுக்கு விரிவுப்படுத்தினார். அதோடு சித்தப்பாவிற்கு சுவாரஸ்யமாக கதை சொல்லும் திறன் வாய்த்திருந்தது.

தங்கரசு சித்தப்பாவின் கதைகள் அனைத்தும் பேய் கதைகளே. பேய் பங்களா பற்றிய கதைகளே அதிகம். மனைவியை கொன்ற கணவனின் கதை தான் மைய திரி. கூன் விழுந்த வேலைக்கார கிழவி கதையின் வில்லி. ஒரே கதையை சித்தப்பா பல நாட்கள் வேறு வேறு மாதிரி சொன்னாலும் சிறுவர்களாகிய எங்களுக்கு அலுப்பதே இல்லை. ஊர் புழுதி அடங்கி வீட்டு திண்ணையில் விளையாட்டு களைப்போடு சிறுவர்கள் நாங்கள் அமர்ந்து அவரிடம் கதை கேட்கும் போது அவரே பேய் போல லாந்தர் வெளிச்சத்தில் தெரிவார். அம்மாக்களின் திட்டுகளை மீறி, சிறுவர்கள் பயப்படுவதை மீறி ஒவ்வொரு இரவும் அந்த பங்களாவை பற்றிய தங்கரசு சித்தப்பாவின் கதைகள் எங்களது கற்பனை உலகை விரிவுபடுத்தி கொண்டிருந்தன.

மனைவி மீது சந்தேகப்படும் முதியவரும், சந்தேகத்தை ஊதி பெரிதாக்கும் கூன் விழுந்த கிழவியும், அழுகையுடனே எப்போதும் இருக்கும் அழகிய கதாநாயகியும் என பேய் கதையின் மாந்தர்கள் எங்கள் எல்லார் கண்ணிலும் குடியிருந்தார்கள். இருளில் தனியே நடக்கும் போது எங்காவது ஒளிந்திருந்து பயமுறுத்தினார்கள். ஆனால் அந்த பயம் எங்களுக்கு தேவையாக இருந்தது. தங்கரசு சித்தப்பா ஒரே கதையையே பல மாதிரி சொல்லி கொண்டிருந்தாலும் அவரது கதையை கேட்காத இரவுகளில் எதையோ இழந்தவர்களாய் இருந்தோம்.

நூறு வருடங்களுக்கு முன்பு பேய் பங்களா பாழ் அடையாமல் இருந்த காலகட்டம். மழைக்காலம். ராட்சஷ வேகத்தில் காற்று சுழன்று கொண்டிருந்தது. இடியும் மின்னலும் நிறைந்திருந்த ஓரிரவு. மழை இரு நாட்களாய் பொத்து கொண்டு ஊற்றி கொண்டே இருக்கிறது. பங்களாவின் மாடியில் அமர்ந்திருந்தார் அந்த முதியவர். அவரது மேஜையின் மீது பெரிய புத்தகமொன்று இருந்தது. அதனை பல வருடங்களாய் வாசித்து கொண்டிருக்கிறார். மேஜைக்கு அருகே ஒரு ஜன்னலிருந்தது. மழைநீர் வராமல் தடுக்க அதனை இழுத்து இழுத்து மூட முயற்சித்தும் முடியாததால் ஜன்னல் திறந்து கிடந்தது. மழைநீர் ஜன்னல் வழியாய் அறையை நனைத்து கொண்டிருந்தது.

ஒரு மின்னல். ஜன்னல் கம்பியில் ஒரு கருநாகம் சுற்றியிருப்பதை பார்த்தார் முதியவர். அவரது இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. பிறகு சுதாரித்து எழுந்து விளக்கினை அந்த பக்கம் திருப்பினார். நாகத்தை காணவில்லை. யாரோ கதவருகே நடந்து செல்லும் சத்தம். கொலுசு சத்தம். கட்டாயமாக கிழவி கிடையாது. இறந்து போன தன் மனைவியின் காலடி ஓசையது. இரவுகளில் ஒவ்வொரு ஜன்னல் கதவாய் அவள் சாத்தி செல்வாள். இப்போது சரியாக அதே சமயம் தான். ஒரு வேளை கனவா என முதியவர் குழம்பினார். மீண்டும் ஒரு மின்னல். ஜன்னல் கம்பியில் கருநாகம் அவரை முறைத்தவாறு படமெடுத்து நின்றது. மின்னல் மறைந்த போது விளக்கினை தவறவிட்டார். அவரால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கதவருகே மனைவி அலுப்பாய் நடந்து செல்லும் காலடி சத்தம். இதயம் கனத்தது. தோள்பட்டை வலித்தது. கருநாகம் சீறும் சத்தம் இருட்டில் கேட்ட போது மனைவியின் விசும்பல் ஒலியும் கேட்டது. அவரால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. உடைந்த மரக்கிளை போல சரிந்து விழுந்தார்.

முதியவர் இறந்த அதே சமயம் கீழே சமையலறையில் அந்த கூன் விழுந்த மூதாட்டி இறந்து போன தன் வீட்டு எஜமானியை நேருக்கு நேராய் பார்த்தாள். ஜஸ் கட்டியில் உறைந்து கிடப்பது போல காற்றில் தோன்றியது எஜமானியின் உருவம். இன்னும் அழகாய் இருந்தாள். முகத்தில் ஒரு சோகம் எப்போதும் போலவே. கனவில் சஞ்சரிப்பது போல கிழவி தன் கைகளை உயர்த்தி அந்த உருவத்தை தொட எத்தனித்தாள். சட்டென எஜமானி கண் விழித்தாள். வைரம் போல மிளிர்ந்த கண்ணில் குரோதம் கொப்பளித்தது. அழகிய உதடுகள் பிரிந்த போது பாம்பு போல இரு நாக்குகள் சீறின. கிழவி பயத்தில் நெஞ்சடைத்து செத்து போனாள்.

இரு உயிர்களை பலி கொண்ட பின்னும் வன்மம் அடங்காத அந்த கருநாகம் அந்த பங்களாவை நூறு வருடங்களாய் சுற்றி கொண்டே இருக்கிறது.

சைக்கிளை ஓட்ட பழகிய போது எனக்கு பெரிதாய் ஒன்றை சாதித்த திருப்தியிருந்தது. என் வயது பசங்க இன்னும் சைக்கிளை மிதிக்க தெரியாமல் இருக்கும் போது பெரியவர்களை போல நான் சைக்கிள் சீட்டில் அமர்ந்து பெடல் மிதித்தவாறு கிராமத்து வீதியில் உலா வந்தேன். சிறு வயதிலிருந்தே கூட பழகியிருந்த மூக்கில் சளியோடு திரியும் சிறுமிகள் திடீரென அழகிகளாய் மாறியதும் இந்த காலகட்டத்தில் தான். அதிலே ஒருத்தியை டபுள்ஸ் வைத்து சைக்கிளில் பவனி வந்த போது அவளது அம்மா அவள் தலையில் நங்கென குட்டி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

“அடுத்த வருஷம் ஹாஸ்டல்ல உன்னை தங்க வைச்சு படிக்க வைக்க போறேன்,” என அப்பா சொல்லி கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் எங்களூருக்கு அந்த நாடக கோஷ்டி வந்து கூடாரமடித்தது. ஊர் திருவிழா தொடங்க போகும் சமயம். ஊரே களை கட்டியது. ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர் கூட்டம். நானும் நண்பர்களும் ஊருக்கு புதுசாய் வந்திருக்கும் சிறுமிகளின் அழகை பற்றி கடற்கரையில் அமர்ந்து இரகசிய குரலில் பேசி கொள்வோம்.

நாடக கோஷ்டியில் இருந்த பட்டினத்துகாரியின் அழகை பற்றி சின்னசாமி அலுக்காமல் பேசி கொண்டே இருந்தான். பெண்களை நாங்கள் வித்தியாசமாய் பார்க்க தொடங்கிய அந்த நாட்களில் தான் நான் பேய் பங்களாவின் வாசலில் தங்கரசு சித்தப்பாவையும் பட்டினத்துகாரியையும் பார்த்தேன். அன்று வரை எனக்கு அந்த பங்களாவில் பேய் இருக்கிறது என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

தங்கரசு சித்தப்பாவை அன்று பார்த்த பிறகு எனக்கு பேய் பயம் சுத்தமாக மறைந்து போனது. அதற்கு பிறகு அவரது கதையை கேட்க நான் என்றும் போனதில்லை. அவரும் கதை சொல்வதை நிறுத்தி விட்டார். வேறு ஊருக்கு வேலை கிடைத்து போனவர் அதிசயமாக அந்த வேலையிலே நிலைத்து விட்டார். தூரத்து உறவினர் பெண் ஒருத்தியை அவருக்கு மணமுடித்தார்கள். அவருக்கு அப்போது முப்பது வயதிற்கு மேலாகியிருந்தது. அந்த பெண்ணிற்கு பதினாறு வயது தான்.

சில வருடங்கள் கழித்து நான் வெளியூர் ஹாஸ்டலில் படித்து கொண்டிருந்த போது என்னை பார்க்க வந்த தந்தை என் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ வெறித்தவாறு சித்தப்பாவின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவரத்தை சொன்னார்.

கல்லூரி காலகட்டத்தில் நான் திராவிட கட்சிக்காரனாய் இருந்தேன். ஊர் ஊராய் கூட்டம் போடுவோம். ஒரு முறை எங்கள் பக்கத்து ஊரில் கூட்டம் போட்டு கலையும் போது என் தந்தையும் கூட்டத்தில் இருப்பதை பார்த்தேன்.

“உன்னை இதுக்காகவா படிக்க வைச்சேன்,” என கண்ணீர் ததும்ப பேசி விட்டு அகன்றார்.

வறுமை பேயை விட கொடூரமானது என்பதை சென்னை வந்த பிறகு அறிந்தேன். திருவல்லிகேணி மென்சனில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் உண்டு உயிர் வாழ்ந்த போது மதிய நேரத்து அனலில் என்றோ செத்து போன அந்த பங்களா எஜமானி என்னுடைய பசி மயக்கத்தில் யாருமில்லா அறையில் காட்சி தருவாள்.

பாம்புகளிடமிருந்து தப்பிக்க நான் கொள்கைகளை மறந்து வேலைக்கு சேர்ந்தேன். கொள்கைகள் பொய் தான் என நிருபிக்க காதல் புரிந்தேன். காதலியை மணமுடித்த மூன்றாவது வருடம் தாய் இறப்பிற்கு பிறகு தந்தை எங்களை ஏற்று கொண்டார்.

ஊரில் மனைவியுடன் சைக்கிளில் போவது முதலில் வெட்கமாய் இருந்தது. பலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. விடுமுறை காலத்தில் ஒரு நாள் மனைவியை சைக்கிளில் வைத்து ஓட்டி வந்த போது அந்த பேய் பங்களாவை பார்த்தேன். பல நினைவுகளை எனக்கு அது தந்தாலும் அதனுள் எதோ ஒன்று குறைவதை உணர்ந்தேன்.

என் மனைவியிடம் இந்த பங்களாவை பற்றி கதை கதையாய் பேச வேண்டுமென தோன்றியது. சித்தப்பாவை இங்கே பார்த்த போது தான் நான் வயதிற்கு வந்தேன் என விளக்க வேண்டுமென சிந்தனைகள் எழுந்தன. எனக்கு என் மனைவிக்கும் இருக்கும் வயது வித்தியாசம் சட்டென பாம்பு சீண்டலாய் உறைத்தது. அமைதியாய் பார்வையை தாழ்த்தி கொண்டு சைக்கிளை மிதிக்க தொடங்கினேன். கடற்கரை மணலில் சைக்கிளை ஓட்டுவது சிரமமாய் இருந்தது. ஆனாலும் கால்களில் உறுதியை கொடுத்து மிதித்தேன்.

“வெயில் இப்படி சுடுது. பாலைவனம் மாதிரி. எப்படி தான் மனுஷங்க இந்த கிராமத்துல வாழ்றாங்களோ,” என அலுத்து கொண்டாள் மனைவி.