Tag: கவிதை

  • சாலையை கடந்து வீட்டிற்குள் நுழைந்து
    கதவை அடைத்து உள்ளறைக்குள் ஜன்னலை சாத்தி
    கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் என்னை
    பல கண்களாய்
    அவன் கவனித்தபடி இருக்கிறான்.

    கண்களை மூடி
    கற்பனையில்
    வீட்டிற்கு வெளியில் ஓடி
    அந்த இரகசிய செய்தியை அறிவிக்கிறேன் நான்.

    தூரத்தில் ஆரவாரம் கேட்டது.


  • இருளின் ஊடாக குருதி மழையில்
    நனைந்து கிடக்கிறோம்
    நாங்கள் இருவரும்.
    அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
    அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.
    செந்நீரின் சுவைக்காக ஏங்கி கிடக்கிறேன்
    நான்.

    நிலவை இழந்த வானத்தில்
    அவ்வபோது மின்னி மறைகிறது
    ஒற்றை வெள்ளை கோடு.
    கோட்டானின் கதைத்தலும்
    வௌவால்களின் இறைச்சலும் தூரத்தில்.

    பிணங்களின் கனவுகள்
    மேகங்களாய் மேலெழுந்து
    பாழடைந்த மாளிகையின் சுவர்களில் அப்பி
    சிதைவுகளில் கொஞ்சம் தப்பி போகிறது.

    ஜன்னல், கதவுகளில் மரச்சட்டங்கள்
    சடசடவென உடைகின்றன.
    இறக்கைகளை அடித்தபடி
    யாரோ பறந்து போகிறார்கள்
    கீழ்வானத்தை நோக்கி.

    அவள் கண்களில் காதல் பொங்க
    என்னை பார்க்கிறாள்.

    பின்னிரவு பனியில் உறைய தொடங்குகிறோம்.

    பிறகு
    ஞாயிறு எங்களை மனிதர்களாக மாற்றியது.


  • சருகுகள் கூட இல்லாது போன நிலப்பரப்பில்
    பட்டு போன மரம் போல
    அதன் காய்ந்த பட்டை போல
    அவன் கிடக்கிறான்.

    கேள்விகுறி போல கிடக்கிறது
    அவன் உடல்.
    முதுமையும் காயங்களும் உடலெங்கும்.

    ஆரவாரமான கூட்டம் கடந்து போகும்
    அதே சாலையில் தான்
    அவனும் கிடக்கிறான்.

    கூட்டத்தின் ஒலி
    அவனை தொடும் போதெல்லாம்
    புரண்டு படுக்கிறான்
    தன் கிழிசல்களோடு.

    கறுப்பு வெள்ளை புகைப்படமாய் எடுத்தால்
    மனதை கலைத்து போடும் சித்திரம்.

    அவனை என் கவிதையாய் எழுத
    வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன்.
    அவனுடைய பார்வை எத்தனை கூர்மையானது என்பதை
    இன்னும் நான் அறியவில்லை.


  • நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
    கலைந்த தலைமுடி.
    தாடி.
    இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
    சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.
    குப்பையில் எறிவதற்கு முன்
    கவனமாய் காகிதங்களை
    மடித்து மடித்து வைக்கிறான்
    தினந்தோறும்.

    சாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,
    பழைய பில்கள்,
    என்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,
    மற்றும்
    அவனுடைய கிறுக்கல் பக்கங்கள்.

    காகிதங்களில் இருந்து உதிர்கின்றன
    ஒவ்வொரு எழுத்தாய்.


  • வானத்தை போர்த்தி இருக்கிறது இருள்.
    நகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம்.
    பிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள்.
    முழுச் சுற்று போகாத சக்கரங்கள்.

    ஒருவரது தலையில் இருந்து ஊற்றுகிறது வியர்வை.
    இன்னொரு காரில் புலம்பியபடி இருக்கிறாள் ஓர் இளம்பெண்.
    பைக்கில் கண்களை மூடியபடி காத்திருக்கிறான் ஒரு வழுக்கை இளைஞன்.

    காத்திருத்தலின் வேதனையோடு கதறுகின்றன அவ்வபோது ஹாரன் சத்தம்.
    நடைபாதையில் தனது பேரனோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் ஒரு கிழவி.
    வாகனங்களுக்கு இடையே பாதையை உருவாக்கி கொண்டு சாலையை கடக்கிறாள் ஒருத்தி.

    வானத்தை பார்த்தேன்.
    ஒளிக்கற்றையை இழுத்தபடி கீழ் இறங்குகிறது ஓர் எரிகல்.


  • என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது.
    நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது.
    அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
    உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு.
    அவனது நடை நிதானமாக மாறுவது இன்னும் பயமுறுத்துகிறது.

    இரத்த வாடையுடன் சுற்றும் அவனிடம் இருந்து நான் எங்கு ஓடினாலும் தப்ப முடியாது.
    நான் கடக்கும் அனைத்து தெருக்களிலும் அவனது தடம் இருக்கிறது.
    கனவுகளிலும் மிருக கர்ஜனையுடன் துரத்துகிறான்.

    பயத்தையும் வலியையும் பல முறை கற்பனையில் உண்டு முடித்த பிறகு
    அது எப்போது நிகழும் என்று
    நானும் காத்திருக்கிறேன்
    ஒவ்வொரு நிழல் தோன்றும் போதும்.


  • இருண்ட குகை.
    மலையே சர்ப்பமாய் எங்களை சுற்றி நிற்கிறது.

    கருமேகங்கள்.
    இதோ உருளைகள் மீண்டும் உட்செல்கின்றன.
    இது வரை இந்த சங்கிலி பிணைப்புகள் ஓய்ந்து பார்த்ததில்லை.

    வயிற்றில் அமிலம்.
    கண்களில் எரிநீர்.
    வெறும் உமிழ்நீர் தாகத்தை போக்குமா?
    செவித்திறன் இன்னும் இருக்கிறதா?
    நீண்ட அமைதியும் நீண்ட சத்தமும் ஏறத்தாழ ஓன்று தான்.

    இன்றைய பொழுதின் முதல் பெட்டி வெளி வர வேண்டும்.
    நேரம் கடந்து விட்டது.
    காத்திருத்தலின் வலியும் தவிப்பும் பயமும் வெறுமையும்
    நாங்கள் யார் என்பதை மறக்க செய்கிறது.

    நாங்களும் இயங்கி கொண்டிருக்கிறோம்
    அதனோடு.


  • அவன் கைதான மறுநாள்.
    சூரியன்.
    நெற்றியில் வியர்வை.
    பாதையில் செருப்பற்ற கால்களை துன்புறுத்தும் முட்கள்.
    நாவினில் தாகம்.
    நிழல் கூட சுருங்கி கொண்டு விட்டது.
    சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
    தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    பாலை நிலத்தில் ஒற்றை ஆளாய் என்னை தூரத்திலே பார்த்திருக்கக்கூடும்.
    ஆட்டத்தை நிறுத்தி விட்டு சேர்ந்து நிற்கிறார்கள்.
    என்னால் மரணத்தை காற்றில் உணர முடிகிறது.
    எல்லா திசைகளிலும் அவர்களது பார்வை அலைபாய்கிறது.
    என் கையில் இருந்து ஊற்றிய உதிரத்தை வேட்டியில் துடைத்து விட்டு ஓடுகிறேன்
    கொடூரமாய் ஓலமிட்டபடி அவர்களை நோக்கி.


  • எப்படி துரத்தினாலும் அடுத்த நாள் காலை
    மீண்டும் கூரையில் தோன்றும் குரங்குகளை போல
    கறை படிந்து தான் போகிறது
    எனது சட்டையில்.

    நண்பன் இறந்து போன நாளில்
    அவனுடைய சடலத்தை தூக்க தயங்கிய கணத்தில்
    கறையின் நிறம் மாறி போனது.


  • அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் சுகம்.
    வேலைகளை ஏவலாம்.
    கோபத்தைக் கொட்டலாம்.
    அடிக்க கூட செய்யலாம்.
    வல்லுறவு கொள்ளலாம்.
    நம் காலில் விழுந்து அவர்களை அழ வைக்கலாம்.

    “மன்னித்து விட்டேன் இந்த முறை பிழைத்து கொள்,” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
    அதற்குப் பதில் அவர்களை கொன்று விடலாம்.