என் கண்களை உற்று பார்த்து நீ பேசியது... சுவரேறிய பல்லி என்னைப் பார்த்த போது ஏன் நினைவிற்கு வந்தது? மின்விசிறியின் நிழல் சுவரில் தடுமாறுவதைப் பார்க்கும் போது படபடக்கும் உன் இமைகள் ஏன் நினைவிற்கு வந்தது? எது எதுவோ எதை எதையோ இழுத்து வந்து போடுகிறது. என் மனம் உன் நினைவுகளை மட்டும் கோர்த்து கோர்த்து அர்த்தம் கற்பிக்க முயன்று தோற்று போகிறது. கலைந்த சேற்றில் ஓர் ஓவியம் பாவித்து கொண்டு கலைந்த மேகங்களை ஒரு சித்திரமாக மனத்திரையில் தீட்டி கொண்டு சுவற்றில் அடித்த சிறுநீரின் தடமோன்று தீட்டிய கதை வாசித்து மறந்து போன உன் முகத்தை மறக்காத உன் நினைவுகளை பற்றி கொண்டு மட்டும் வாழ்கிறது ஒரு மனம்.
Category: கவிதைகள்
-
-
ஓர் அரக்கன்
ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள்.
சிலர் ஆயதங்களோடு அவன் திரும்பி வர காத்திருக்கிறார்கள்.
சிலர் இடத்தைக் காலி செய்து விட்டார்கள்.அவன் வந்து சென்ற தடங்களில்
நடந்தபடி இருக்கிறேன்.
அவன் விட்டு சென்ற அழிவுகளில்
சிதறி கிடக்கும் பொருட்களில்
மீட்பிற்கான அறிகுறிகள் எதுவுமில்லை.நாட்கள் செல்ல செல்ல
அவனது தொல்லைக் குறையுமென நினைத்திருந்தேன்.
மாறாக அது அதிகரித்தபடி இருக்கிறது.அவன் வந்து சென்ற பிறகு
ஒவ்வொரு முறையும்
என்னுள் பிறீடுகிறது
அளவற்ற குற்றவுணர்ச்சியின் வலி.ஓர் அரக்கன் என்னுள் வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
-
என்னுள் ஒரு குரல்
என்னுள் ஒரு குரல் எப்போதும்! யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்! சில சமயம் இரண்டாவது குரலொன்று! யாரிடமாவது பேசும் போதும் பேசுவதற்கு முன்பும் அந்தக் குரல் பதில் சொல்லியிருக்கும் உள்ளுக்குள்! அதைப் பிரதி எடுத்தாற் போல் பெரும்பாலும் நான் பேசுவதில்லை! பூச்சு பூசி தான் பேச வேண்டும்! ஒரு நாள் வனத்தை அசைத்திடும் பெருமழைப் போல தடதடவென விடாது பெய்து தீர்த்தாற் போல் பேசி தீர்த்தது அக்குரல்! பிறகு அமைதி அமைதி அமைதி! பிறகு அக்குரல் ஒலிக்கவே இல்லை என்னுள்! யார் பேசினாலும் நானாக பேச வேண்டியதிருக்கிறது. இப்போது என்னைப் பைத்தியம் என்கிறார்கள்!
-
கடவுளைச் சந்திப்பதற்கு முந்தைய நாள்
நாளை அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருக்கிறது.
அவரை…
அவரா அதுவா?
இது வரை சொல்லப்பட்ட பிம்பங்களில்
எனக்கு நம்பிக்கையில்லை.
எப்படியிருப்பார்/எப்படியிருக்கும்?
இரவு முழுவதும் ஒரே சிந்தனை.
அங்கே என்ன வாசமிருக்கும்?
பார்ப்பதற்கு அழகா அசிங்கமா?
மனிதனா மிருகமா?
தாவரமா? நீரா?
காற்றா நெருப்பா?
அல்லது
ஒன்றுமில்லாத அரூபமா?
அல்லது
அங்கு அமர்ந்திருக்க போவது
நான் தானா?
-
உழல்
புரவியின் மீது
தூக்க கலக்கத்துடன்
சோர்வுடன்
கண்கள் சொக்கியிருக்கும் வீரன்!
அவனைச் சுமந்தபடி
பழக்கப்பட்ட பாதையில்
தானாய் ஊர் திரும்பும் குதிரை!
அது போல
என் உடல்
தினமும்
தானாய் அதற்கான காரியங்களைச் செய்து கொள்கிறது.
கண் விழித்து குளிப்பது தொடங்கி
சாப்பிடுவது முதல்
பயணப்படுவது
தினசரி சந்திக்கும் மனிதர்கள் வரை!
எதையும் அறியாமல்
என் மனம்
உழல்கிறது
வேறு எதோ எதோ சிந்தனைகளில்!
-
எங்கும் எப்போதும்
யாருமற்ற வனாந்தரத்தில்
மனிதர்கள் புழங்கும் தெருக்களில்
அந்தரங்கத்தில்
பொதுவில்
எங்கும்
எப்போதும்
சன்னமாய்
ஒலித்து கொண்டே இருக்கின்றன
காலத்தின் இரைச்சல்.
-
ஒரு பெண் மறுத்தலிக்கும் போது
உங்களுடைய மென்மையான உணர்வுளை நசுக்கும் போது
தானாய் ஒப்பு கொள்ள வேண்டும்
தானாய் தலை வணங்க வேண்டும்
தானாய் அழ வேண்டும்
இதை நான் எதிர்பார்த்தேன் என
பொய்யாய் சொல்ல வேண்டும்
இறுதியில்
அதை அலட்சியமாய்
எடுத்தறிவது போல்
நடித்து
ஆத்மாவில்
ஒரு பங்கினை காவு கொடுக்க வேண்டும்!
இது தான் அந்த அவமானத்தின் விலை!!!
-
குருடு
சூரியன்
நமக்கு ஒளி தருகிறது
என்கிறோம்.
அது
நம்மைக் குருடாக்கிறது.
பிற நட்சத்திரங்களைப் பார்க்க விடாமல்
குருடாக்கிறது.
நீ
உன் அன்பு பெருவெள்ளத்தால்
என்னை அரவணைக்க விரும்புகிறாய்.
அது என்னைக் குருடாக்கிறது.
-
கூனிக் குறுகு
வெளுத்த இரவு. நான் பதுங்கியிருக்கவில்லை; ஒளிந்திருக்கவில்லை; நின்று கொண்டிருக்கிறேன். இரண்டடி முன் நகர்ந்தால் வெட்ட வெளி வரும். ஆனால் நிழலிலே ஒதுங்கியிருக்கிறேன் பயத்தோடு. அந்தப் பயம் தேவையற்றது. எனினும் சருமத்தில் அலை அலையாய் அச்சவுணர்வு படிந்து தான் இருக்கிறது. அங்கே யாரும் இருக்க போவதில்லை என்றாலும் யாரோ காத்திருப்பது போல பிரமை. வெட்டவெளிக்கு நான் வந்தால் அது குற்றமாகாது. யாரும் அதற்காக என்னைத் தண்டித்து விட முடியாது. எனினும் இந்தக் கணம் சிறு பிழையும் வேண்டாம் இப்படியே போகட்டும் என இதயம் தடதடக்கிறது. கறுப்பு வெள்ளையென இரு புறமும் பேசும் மனம் கூனிக் குறுகுகிறது இந்தப் பயத்தை நினைத்து நினைத்து.
-
ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்
மின்சாரம் இல்லை
வழக்கம் போல.காற்றே இல்லாதது போலிருக்கிறது
இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள்.ஆங்காங்கே பேட்டரி விளக்குகள்
மங்கலாய் எரிந்தபடி.நிழல்கள் நீண்டு
இருளைத் தொட்டு
படர்ந்திருக்கின்றன.வேர்வையில் முழுக்க நனைந்து
நடந்து கொண்டிருக்கிறேன்.
இரு புறமும் கதவுகள் தோன்றி தோன்றி மறைகின்றன.சிவந்த கதவுகள்
பேட்டரி விளக்கு வெளிச்சத்தைச்
சிகப்பாக்குகின்றன.அச்செந்நிற ஒளி
இருளில் கலக்கும் சமயம்
உதிரமாய் வண்ணம் கொள்கிறது.மாடிப் படிகளில் ஏறி ஒவ்வொரு தளமாய் செல்கிறேன்.
பெரும்பாலும் ஓசைகளே இல்லை.நான் பார்த்து இதுவரை
ஒரு கதவு கூட திறந்திருந்ததில்லை.சில கதவுகளுக்குப் பின்னால்
யாரோ விசும்பும் சத்தம் கேட்கும்.
அல்லது அது பூனையின் ஒலியா?ஒரு கதவிற்குப் பின்னால்
காதலர்களின் சண்டை சத்தம்.பிறகு நானே ஒவ்வொரு கதவிற்கும்
ஒரு சத்தமிருப்பதாய் கற்பனைச் செய்து கொண்டேன்.விருப்பம் போல ஒவ்வொரு கதவின் பின்னாலும்
ஒவ்வொரு சத்தத்தினைக் கேட்க தொடங்கினேன்.மற்றப்படி
பெரும்பாலும் ஓசைகளே இல்லை.ஓர் இளம் யுவதி தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்
தனிமையில்
விசும்புகிற ஒலியினைக் கேட்டேன்
ஒரு கதவிற்கு அருகே.… …மேலும் வாசிக்க
