Category: கவிதைகள்
-
மனநல காப்பகத்தில் இருந்து – 1
வானம் என்பது கற்பிதம்!என் ஜன்னலில் இருந்து தெரியும் மற்றொரு சாளரம்!சாளரத்தில் காணும் அரைகுறை அண்டம்!அண்ட வாயுகளின் மண்டலம்!நீளம் குறைந்த நீலம்!தொலைவுகள் தொலைந்திட்ட தூரம்!ஓளிகளின் நாட்டியம்!இறந்த காலத்தின் ஓவியம்!வண்ணங்களின் முடிவுறா சித்திரம்!இருண்மையின் கோலம்!நேரத்தினைச் சுட்டும் கடிகாரம்!காலங்களைத் தீட்டும்உருவமில்லாத உருவம்!நீளமும் அகலமும் ஆழமும் உறைந்திட்ட மறை ஆற்றலின் வீரியம்!மாயைகளிலிருந்து விடுவிக்கும் கைவல்யம்!
-
மூட்டை மூட்டையாய் வார்த்தைகள்
மர நிழல் போர்த்திய சாலையில் தினமும் மூட்டை மூட்டையாய் வார்த்தைகளை நிரப்பி தனியாளாய் இழுத்து வருகிறேன். பூட்டப்பட்ட கதவு திறந்ததே இல்லை. உன் வீட்டருகே மலை போல வளர்ந்து விட்டன நான் தினமும் விட்டுச் செல்லும் மூட்டைகள்.
-
மரணத்திற்கு ஆயுத்தம்
பூச்சிகளின் இசைக்கேற்ப காற்றினைக் கிழித்தபடி தாளமிடும் இலைகளின் பாடலில் எப்போதாவது சிறு சிறு துணுக்களாய் மரணத்தின் உறுமல் கேட்பதுண்டு. சில சமயம் தடங்கள் பதியா வனத்தின் பரப்பில் மரணத்தின் கால்தடம் கண்டதுண்டு. பிறகுத் தேய் பிறை வருடக்கணக்கில் நீண்ட ஒரு காலத்தில் காற்றிலே நிரம்பி புயலாய் ஊளையிட்டது அது. காடே ஸ்தம்பித்து பிறகுப் பேரரவமிட்டு அழுதது. நிலம் எல்லாம் அதிர்ந்தது. முதுகிலே பயத்தினைச் சுமந்தபடி ஒளிந்து இருந்தேன் நான் பெருமழையாய் சுழன்றடித்து வரும் அதன் ஈரம் என்னை…
-
நீரை உலர்த்த காத்திருக்கும் வெயில்
பாலைவனத்தின் நடுவே முளைத்து எழுந்து தலைக் குனிந்து நிற்கிறது குடிநீர் குழாய் ஒன்று. குழாயிலிருந்து துளிர்த்து நிற்கும் நீர் சொட்டு ஒன்று பல்கி சூரிய ஒளியில் பிரகாசித்து கீழே விழ காத்திருக்கிறது. மணல்வெளியில் நீர் விழும் தருணத்தில் அதனை உலர்த்த காத்திருக்கிறது வெயில்.
-
குவாண்டம் தற்கொலை
அறைக்குள் தற்கொலைக்கு முயல்கிறேன். நீ கதவு திறக்கும் வரை உயிரோடு இருப்பேன். திறக்காவிடில் நான் சிரஞ்சீவி.
-
புரியாது
என் கவிதை புரியவில்லை என தொலைபேசியிடும் நண்பர்களே உங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இல்லையென என்றாவது நான் புகார் சொன்னது உண்டா?
-
ஓரினமாதல்
என்றோ ஒரு நாள் யாரோ ஒருவர் மரத்தின் மீது எறிந்துச் சென்ற கருநீல நெடிய வயர் ஒன்று மரத்தோடுப் பிணைந்து தண்டோடுச் சுற்றி பட்டைகளோடுக் கலந்து பழுப்பாகி போனது. இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில் அந்த வயரினுள் இருந்து முளைத்தது ஓர் இலை.