மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு

தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.

அவருக்கு இருபது வயதிருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடம குட்டை என்கிற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி கிடையாது. கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் மலை மீது நடந்து தான் அங்குச் சென்றடைய முடியும். மின்சாரமும் கிடையாது. அரசு தண்ணீர் தொட்டி கட்டி தந்தார்கள். என்றாலும் மலைக் கிராமத்து பெண்களின் பகல் நேரத்தின் பெரும்பொழுது தண்ணீரைச் சுமந்து வருவதிலே கழிந்து விடுகிறது. அரிசி எல்லாம் பணக்கார சாப்பாடு அவர்களுக்கு. கூழும் களியும் தான் உணவு.

கடம குட்டை போல முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி அல்லல்படுகின்றன. நாகரீக உலகத்தின் சௌகரியங்கள் அனைத்தும் மறுக்கப் பட்டவர்கள் இவர்கள். யாராவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களைத் தொட்டிலில் கட்டி மற்றவர்கள் மலையில் இருந்து கீழே கொண்டு போய் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை. பலர் இப்படித் தொட்டில் கட்டி கொண்டு செல்லப்படும் போதே மலைப்பாதையிலே உயிர் இழந்திருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பாதி வழியில் பிரசவம் நடந்தது உண்டு. பெரும்பாலும் தொட்டில் கட்டி சுமந்து செல்வது ஆண்கள் தான். பெண்களுக்குப் பிரசவ வலி எடுத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும். பெண்களுக்கேயுரிய அசௌகரியங்களோடு துன்பத்தில் உழல வேண்டிய துர்பாக்கிய நிலை.

மலைப்பாதையில் யானை, கரடி, மலைப்பாம்பு மற்ற விலங்குகளின் தொல்லையும் அதிகம். இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏந்தி தொட்டில் கட்டி நோயாளிகளைச் சுமந்து செல்லும் பயணம் ஆபத்தான ஒன்று. பல முறை யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் கிராமத்தவர்கள்.

தெய்வாணை கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே உடல்நலம் குன்றியே இருந்தார். சத்தான சாப்பாடு எதுவுமின்றி இருப்பதாலோ என்னவோ எப்போதும் சோர்வாகவே இருந்தார்.

ஒரு நாள் மதியம் அவருக்குப் பிரசவ வலி எடுத்த போது ஆண்கள் யாரும் கிராமத்தில் இல்லை. தாங்க முடியாத வலி. ஆண்கள் காட்டில் பிழைப்பிற்காக சுற்றி திரிந்து திரும்பி வர மாலையாகி விடும். அது வரை வலியில் துடித்தபடி இருந்தார் தெய்வாணை. ஆண்கள் வந்த பிறகு அவர்களில் சிலர் அவரைத் தொட்டிலில் கட்டி சுமந்தபடி மலையில் இருந்து இறங்கினார்கள். மழை கொட்டி கொண்டிருந்தது. காற்று பலமாய் வீசி கொண்டிருந்தது. மிகுந்த வலியுடனான அந்தப் பயணம் அவருக்கு மிக நீண்டதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. துணியெல்லாம் நனைந்து போயிற்று.

அவர்கள் மலையை விட்டு இறங்கிய போது இரவு எட்டு மணி. அப்போது ஆட்டோவோ ஷேர் ஆட்டோவோ பஸ்ஸோ எதுவுமில்லை. மலை அடிவாரத்தில் இருந்த ஊர் தலைவரிடம் போய் பேசி இருக்கிறார்கள். அவர் தன்னுடைய பைக்கைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பைக்கில் முன்னால் உட்கார்ந்து ஓட்ட, தெய்வாணை வலியில் துடித்தபடி அடுத்து அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அவரது கணவர். பெருமழையும் புயற்காற்றும் சூழ்ந்த இரவில் பைக்கில் அந்தப் பெண் பிரசவ வேதனையோடு பயணித்து கொண்டிருந்தார். ஒருவழியாய் அவர்கள் ஒரு மருத்துவமனைக்குப் போய் சேர்ந்தார்கள். அது பூட்டப்பட்டிருந்தது. பிறகு செவிலியர்களைக் கெஞ்சி கூட்டி வந்தார்கள்.

தெய்வாணையின் நிலையைக் கண்ட செவிலியர்கள் பயந்து போனார்கள். இந்த நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது என ஒதுங்கினார்கள். அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சி பணிந்து அவர்களைப் பிரசவம் பார்க்க வைத்தார்கள். பெண் குழந்தை பிறந்தது. அடுத்த நாளே படுக்கை வசதி குறைவாக இருப்பதால் மருத்துவமனையில் இருந்து தெய்வாணையைக் காலி செய்ய சொல்லி விட்டார்கள். சொந்தக்காரர்கள் அனைவரும் வந்து மீண்டும் மலைக்கிராமத்திற்கு அவரைக் கூட்டிச் சென்றார்கள்.

முதல் நான்கு நாட்கள் ஒருமாதிரி போனது. அதற்குப் பிறகு தாயும் சேயும் மிகவும் உடல்நலம் குன்றினார்கள். குழந்தையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு நாள் கணவனும் மனைவியும் நடந்தே மலையில் இருந்து இறங்கி அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்து போனார்கள். அங்கு குழந்தையை டவுன் மருத்துவமனை கொண்டு போக சொன்னார்கள். தர்மபுரி மருத்துவமனைக்குக் கூட்டி கொண்டு போன போது அவர்கள் அங்கிருந்து சேலம் மருத்துவமனைக்குப் போக சொன்னார்கள். இதற்குள் தெய்வாணையின் கணவர் மன இறுக்கத்தால் அழுதார்.

“ஒரு பொம்பளையைக் கூட்டிட்டு நான் மட்டும் சேலத்திற்குத் தனியா எப்படி போவேன்? எனக்கு அவ்வளவு பெரிய ஊர்ல வழி எதுவும் தெரியாது,” என குழந்தை போல அழுதார்.

“இனி என் குழந்தை செத்தாலும் பரவாயில்லை. அது நம்ம ஊர்ல சாகட்டும்,” என அவர் தெய்வாணையையும் குழந்தையையும் மீண்டும் ஊருக்கு அழைத்து போய் இருக்கிறார். மலை ஏறுவதற்கு முன் ஊர் தலைவர், மற்றவர்கள் அவர்களைப் பார்த்து ஏன் இப்படி வந்திட்டீங்க என திட்டியிருக்கிறார்கள். பிறகு வேறொரு உபாயமாக அவர்கள் குழந்தை மேல் முனி இருக்கலாம் என அங்கே முனி விரட்டுபவரிடம் காண்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மலைக் கிராமத்திற்கு திரும்புவதற்கு முன்பே குழந்தை இறந்து விட்டது.

இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. அப்பகுதியில் உள்ள முப்பதிற்கும் மேற்மட்ட மலைக்கிராமங்களின் அவல நிலை.

நன்றி: வில்லியம் பிளேக்கின் ஓவியம்

இணைப்பு: தெய்வாணை பற்றியும் மலைக்கிராமங்களையும் பற்றியும் விஜய் டீவி நடந்தது என்ன நிகழ்ச்சியில் ஒளிபரப்பான தொகுப்பு.

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
One response to “மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு”
  1. Green_movement2000 Avatar
    Green_movement2000

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது. மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார். அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
    துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள். ‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
    ‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது. பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை.
    கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது. இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா. தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது.
    இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.