ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பெரும் விவாதத்தினை உண்டு செய்திருக்கிறது. இச்சூழலில் சேனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் இலங்கைக்கு எதிரான வாதத்திற்கு வலு சேர்த்தன. இந்நிலையில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மனித உரிமை அமைப்பான ஆம்னிஸ்டி தற்போது இலங்கையில் இன்னும் அரசு உதவியோடு தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் எதிராக தொடரும் கைது, கடத்தல், துன்புறுத்தல், கொலைகள் பற்றி 63 பக்க ‘locked away’ என்கிற ரிப்போர்ட்டினை வெளியிட்டு இருக்கிறது.
“விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் இன்றும் தீவிரவாத தடுப்பு சட்டம் இலங்கையில் நடைமுறையில் இருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் எந்தவித சாட்சியமும் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும், நீண்ட காலத்திற்கு அவர் மீது வழக்கு பதியாமலே காவலில் வைத்திருக்க முடியும். தீவிரவாத அமைப்பினர் என்று அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் கூட இந்த வகையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அரசின் மனித உரிமை மீறலைக் கண்டித்து பேசும் நபர்களும், பத்திரிக்கையாளர்களும் கூட இந்த வகையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். போலீசார், ராணுவம் மட்டுமல்லாமல் அரசிற்கு ஆதரவான தனி படையினரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கைது செய்யப்படுபவர்கள் சிறையிலோ அல்லது மறுவாழ்வு மையங்களிலோ அல்லது யாருக்கும் தெரியாத இடங்களிலோ வைக்கப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கு எங்கு வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களை அரசு பதிவு செய்வதாக தெரியவில்லை. நூற்றுக்கணக்கானோர் இப்படி கடத்தப்பட்டிருக்கிறார்கள். பலர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சிலர் சட்ட விரோதமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சர்வதேச விசாரணைகள் மட்டுமே இத்தகைய அரசு பயங்கரவாதத்தினை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு மேலும் நடக்காமல் தடுக்கும்,” என்று 63 பக்க ரிப்போர்ட் பல சாட்சியங்களை முன்வைத்து பேசுகிறது.
Leave a Reply