உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்

அகதிகள் முகாம்
அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்கான இடம் இப்படி தானிருக்கும். இதை விட வசதியான ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்து விட முடியாது. தன்னுடைய புகைப்பட கருவிகளுடன் ஸ்டீவ் எதை எவற்றை யாரை புகைப்படம் எடுக்கலாம் என அங்கு நடந்து கொண்டு இருந்தார்.

அது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து கொண்டிருந்த காலம். ஆப்கானிஸ்தான் மக்கள் போரில் இருந்தும் வறுமையில் இருந்தும் தங்களை காப்பாற்றி கொள்ள ஓடிக் கொண்டு இருந்தார்கள். அப்படி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தவர்களுக்கான அகதிகள் முகாம் இது. நசீர் பாக் முகாம் என்று அந்த இடத்திற்கு பெயர். நேஷனல் ஜியோகிராபிக் இதழுக்காக ஸ்டீவ் அங்கு வந்திருக்கிறார்.

அகதிகள் முகாமில் ஒரு டெண்டிற்குள் ஒரு தற்காலிக வகுப்பறையை உருவாக்கி இருந்தார்கள். ஸ்டிவ் அங்கு நுழைந்த போது, ஒரு பெண் மங்கலான ஒரு கறுப்பு போர்டினை கொண்டு குழந்தைகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். ஸ்டிவ்வினுள் புகைப்பட கலைஞர்களுக்கே உரிய ஆர்வம் துளிர்த்தது. குழந்தைகளை படமெடுக்க அனுமதி கேட்டார். இது போல எவ்வளவோ புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். போர் மனிதனை எப்படியெல்லாம் சிதைத்து இருக்கிறது என்பது தான் அவரது பயணமாக இருந்தது. உலகம் முழுக்க பல இடங்களுக்கு சுற்றி இருக்கிறார். இந்தியாவில் இருந்த போது அவர் ஒரு முக்கியமான உண்மையைக் கற்று கொண்டார். அது வாழ்க்கையை கவனித்திரு, காத்திரு என்பது.

“நீங்கள் காத்து இருந்தால், மனிதர்கள் உங்கள் கேமராவை மறந்து விடுவார்கள். அவர்களுடைய ஆத்மாவை அப்போது பார்க்கலாம்,” என்பார் ஸ்டீவ்.

அந்த வகுப்பறையில் உள்ள குழந்தைகளில் ஒரு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கதக்க ஒரு சிறுமி இருந்தாள். பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார்.

நேஷனல் ஜியோகிராப்பிக் இதழின் அட்டையில் அந்த புகைப்படம் விரைவில் பிரசுரிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லையில் நிகழும் போர் பற்றி எழுதபட்ட கட்டுரைக்காக அந்த புகைப்படம் பயன்படுத்தபட்டது.

அந்த சிறுமியின் பெயர் என்ன?
கடலின் பச்சை நிற கண்கள்; அழகும் குரோதமும் நிறைந்த முகம், கிழிசல்களோடு துப்பட்டா முகத்தை மேலோட்டமாக போர்த்திய நிலையில் கேமராவை நேருக்கு நேராய் பார்த்து நின்ற அந்த சிறுமியின் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைப்பதாய் இருந்தது. உலகம் முழுவதும் புகைப்படம் பிரபலமாக தொடங்கியது. வல்லரசுகளாலும் உள்நாடு அரசியல்வாதிகளாலும் வன்முறையும் போரும் நிறைந்த ஆப்கன் நாட்டை விட்டு ஓடி வரும் அகதிகளின் நிலையை பிரதிபலிப்பதாய் இருந்தது அந்தப் புகைப்படம். இன்னும் சொல்லபோனால் உலகத்தின் அத்தனை அகதிகளின் அவலத்தை உணர்த்தும் படமாக அது மாறிப்போனது. நீங்கள் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தால் அது எத்தனையோ விஷயங்களை உணர்த்துவதாய் இருந்தது.

‘வெளிவந்த புகைப்படங்களிலே அதிக மக்கள் இன்னும் நினைவு வைத்திருக்கும் புகைப்படம் இது தான்,’ என நேஷனல் ஜியோகிராபிக் இதழ் அறிவித்தது. டாவின்ஸியின் மோனாலிசா ஓவியத்தோடு இதை ஒப்பிடுபவர்களும் உண்டு. பொதுவாக உலகம் முழுக்க ‘ஆப்கன் சிறுமி’ என்கிற பெயரில் இந்த புகைப்படம் இன்றும் பிரபலமாக இருக்கிறது. ஆமனஸ்டி போன்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த புகைப்படத்தை தங்களுடைய பல பிரச்சார போஸ்டர்களில் பயன்படுத்தின. பல வீட்டு சுவர்களை, அலுவலக சுவர்களை இந்த புகைப்படம் அலங்கரிக்கிறது.

உலகப் புகழ் பெற்ற புகைப்படமாய் ‘ஆப்கன் சிறுமி’ மாறி கொண்டிருந்த போது, புகைப்பட கலைஞர் ஸ்டீவ் அந்த சிறுமியை மீண்டும் சந்திக்க பல பிரயத்தனங்கள் எடுத்தார். அந்த சிறுமி தன் குடும்பத்தாருடன் அகதிகள் முகாமை விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு போய் விட்டார் என்கிற செய்தி தான் கிடைத்தது. விரைவில் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி ஏற்பட்டது. வெளிநாட்டினர் முக்கியமாக செய்தியாளர்கள் ஆப்கானிஸ்தானிற்குள் போவது என்பது முடியாத காரியமாகி போனது.

உலகப் புகழ் பெற்ற புகைப்படத்தில் இருந்த சிறுமியின் பெயர் கூட யாருக்கும் தெரியாது. பதினேழு வருடங்கள் உருண்டோடின. புகைப்படத்தின் புகழ் அதிகரித்து கொண்டு தான் இருந்தது. 2001-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் தாலிபன் ஆட்சி முடிவிற்கு வந்தது. 2002-ம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் இதழ் இந்த சிறுமியை தேடுவதற்காக ஒரு டாக்குமெண்டரி குழுவை உருவாக்கியது. அந்த குழுவில் புகைப்பட கலைஞர் ஸ்டீவ்வும் இருந்தார். பாகிஸ்தானில் இருந்த நசிர் பாக் அகதிகள் முகாம் விரைவில் மூடப்பட போகிறது என்கிற செய்தி அறிந்து ஸ்டீவ் தனது தேடலை முதலில் அங்கு இன்னும் இருந்த அகதிகளிடமிருந்து தொடங்கினார். ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியர் இந்த சிறுமியை தனக்கு தெரியும் என்றார். அருகாமை கிராமம் ஒன்றில் இருந்த அந்த சிறுமி (பதினெழு வருடங்கள் கழித்து அவள் பெண்ணாகி விட்டாள்) ஆலம் பீபி கண்டறியப்பட்டார். ஆனால் ஸ்டீவ் அந்த பெண் தனது புகைப்படத்தில் உள்ள சிறுமியல்ல என்று மறுத்து விட்டார். அகதிகள் முகாம், மற்ற இடங்கள் எங்கும் இந்தப் புகைப்படத்தினை அங்கிருப்பவர்களிடம் காட்டி அலைந்து திரிந்தும் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. புகைப்படம் எடுக்கபட்டு ஏறத்தாழ பதினேழு வருடங்கள் ஆகி விட்ட நிலையில், அகதிகள் முகாமிலிருந்து பெரும்பாலனோர் தாயகம் திரும்பிய சூழலில் அவரது தேடல் முதலில் எந்த உருப்படியான தகவலையும் கண்டறியவில்லை. நிறைய பெண்கள் இந்த படத்தில் இருப்பது தாங்கள் தான் என பொய்யாக முன்வந்தனர். ஒரு சில ஆண்கள் இந்த படத்தில் இருப்பது தன்னுடைய மனைவி எனவும் பொய் தகவல் சொன்னார்கள்.

அந்த சிறுமியை இனி கண்டுபிடிக்க முடியாது என்கிற மனநிலைக்கு ஸ்டீவ் தள்ளப்பட்ட போது, முகாமில் இருந்த ஒருவர் இந்த சிறுமியின் சகோதரனை தனக்கு தெரியும் என்று சொன்னார். ஆப்கானிஸ்தானில் உள்ள தோரோ போரோ என்கிற மலைப்பகுதியில் அவர்கள் குடியிருப்பதாக அந்த மனிதர் சொன்னார். ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து ஆறு மணி நேர கார் பயணம், பிறகு மூன்று மணி நேர நடைப்பயணம் என வெளியுலகோடு தொடர்பு அதிகம் இல்லாத மலைபகுதியில் அந்த மனிதர் சொன்ன பெண் வசித்து வந்தாள். குழுவினரின் பல முயற்சிகளுக்கு பிறகு அந்த பெண்ணை அவளது குடும்பத்தாருடன் வேறொரு இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பெண்ணை முதலில் சந்தித்தவுடனே ஸ்டீவ்வின் முகம் மலர்ந்தது.

“நான் புகைப்படமெடுத்த சிறுமி இவர் தான்,” என்றார். இதை மேலும் உறுதி செய்வதற்கு அந்தக் குழு அந்த பெண்ணின் கண்களை பயோமெட்ரிக் ஆராய்ச்சி செய்து புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தான் இந்த பெண் என உறுதி செய்து கொண்டனர்.

அந்த புகைப்படத்தில் இருந்த சிறுமியின் பெயர் ஃபர்பத் குலா. 17 வருடங்களுக்கு பிறகு உலகம் இந்த பெயரை அறிந்து கொண்டது.

ஃபர்பத் குலா

குழுவினர் அவளை சந்திப்பதற்கு முன்பு வரை தனது புகைப்படம் உலகப் புகழ் பெற்ற புகைப்படமாக மாறியிருக்கும் செய்தி குலாவிற்கு தெரியவே தெரியாது. அந்த புகைப்படம் தான் அவள் முதன்முதலாக புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வு. அதன்பிறகு மீண்டும் ஸ்டீவ் வரும்வரை அவளை வேறு யாரும் புகைப்படம் எடுத்திருக்கவே இல்லை.

ஆப்கானிஸ்தானில் உள்ள பாஸ்துன் என்கிற பழங்குடியினத்தை சேர்ந்தவர் குலா. இங்கு முஸ்லீம் பெண்களுக்கு கடுமையான விதிமுறைகள் உண்டு. அவள் சிறுமியாக இருந்த போது ரஷ்ய விமானங்களின் தாக்குதலில் இருந்து தப்பி அவளது குடும்பம் பாகிஸ்தான் எல்லையை கடந்து நசீர் பாக் அகதிகள் முகாமிற்கு வந்தது. பாஸ்துன் பழங்குடியின பெண்கள் எப்போதும் பர்தா அணிந்திருக்க வேண்டும். தனது கணவனை தவிர வேறு ஓர் ஆணை பார்த்து சிரிக்க கூடாது. புகைப்படத்தில் உள்ள சிறுமியின் முகத்தில் உள்ள இறுக்கத்திற்கான காரணம் இதுவாக கூட இருக்கலாம். புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வை குலா இன்னும் நினைவில் வைத்து இருக்கிறார். வாழ்க்கையில் முதன்முதலாக புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வல்லவா?

குலா சிறுமியாய் இருந்த போது, புகைப்படம் எடுக்கப்பட்ட சில காலத்திற்கு பிறகு குலாவின் குடும்பம் பாகிஸ்தான் அகதிகள் முகாமிலிருந்து தாயகம் திரும்பியது. முகாமில் உள்ள இருக்கடியான வாழ்க்கை, மலையிலும் காட்டிலும் வாழ்ந்த குலாவின் குடும்பத்திற்கு பொருந்தாத ஒன்று. தங்களுடைய சொந்த இடத்திற்கு திரும்பிய சில வருடங்களில் குலாவிற்கு திருமணம் நடந்தது. அருகில் உள்ள நகரத்தில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து கொண்டிருந்தார் அவருடைய கணவர். கடினமான வேலை தான். பேக்கரி அடுப்பில் அடிக்கடி விரல்களை தீய்த்து கொள்ள வேண்டியது வரும். அவர்களுக்கு மூன்று பெண்கள் பிறந்தனர். மூன்றாவது பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து போயிற்று.

ஸ்டீவ் மீண்டும் ஆப்கன் சிறுமியைச் சந்தித்த போது குலாவிற்கு முப்பது வயதாகி இருக்கலாம். குலாவிற்கே தன்னுடைய வயது சரியாக தெரியவில்லை. மற்ற ஆண்களின் பார்வைக்கு உட்படாமல் பர்தாவில் வாழ்ந்து கொண்டிருந்தார் குலா. சிறிது நேர பேச்சுக்கு பிறகு அவர் மீண்டும் தன்னை புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்தார். இந்த முறை புகைப்படம் எடுக்கும் போதும் அவருடைய பார்வையின் தீவிரம் அப்படியே இருந்தது.

“அந்தக் கண்களின் சக்தி இன்னும் குறையவில்லை,” என்றார் ஸ்டீவ்.

ஆப்கன் சிறுமி

இது வேறொரு சிறுமியின் கதை. ஆப்கானிஸ்தான் உள்நாட்டு சண்டையாலும் அந்நிய நாட்டு தலையீடுகளாலும் பல காலமாய் சிதைந்து போய் விட்டது. எனினும் மீண்டும் மீண்டும் அங்கு வாழ்க்கை துளிர்த்தபடி தான் இருக்கிறது. பெண்களின் நிலையோ மிகவும் அவலத்திற்கு உரியது. 2009-ம் ஆண்டு ஆயிஷா என்கிற பெண் தன் கணவன் தன்னை மிருகத்தனமாய் அடிப்பதை சகித்து கொள்ள முடியாமல் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தஞ்சமடைந்தார். தாலிபன் படையில் முன்பு வீரனாக இருந்த அவளது கணவன், தன் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய மனைவிக்கு தண்டனை கொடுக்க மலைப்பகுதியில் உள்ள ஓரிடத்திற்கு அவளை அழைத்து சென்றான். அங்கு மற்ற ஆண்கள் அவளைப் பிடித்து கொள்ள, அவளது கணவன் அவளுடைய தலைமுடியை, காதுகளை, மூக்கினை கத்தியால் வெட்டி எடுத்தான்.

ஆப்கானிஸ்தானில் ஒரு புகைப்படத்தால் பிரபலமான பெண் என்கிற பெயரோடு வாழ்வது ஆபத்தான விஷயம். ‘ஆப்கன் சிறுமி’-யான குலா தற்போது வேறொரு தொலைதூர கிராமத்திற்கு மாறி விட்டார். அவருடைய தேவைகளுக்கு நாங்கள் வழிவகை செய்து இருக்கிறோம். ஆனால் குலா தன் சொந்த நலன் கருதி இனி வெளியுலகிற்கு மீடியா மூலம் வெளி வர மாட்டார் என நேஷனல் ஜியோகிராபிக் இதழ் அறிவித்து இருக்கிறது. நேஷனல் ஜியோகிராபி சொசைட்டி, ஆப்கான் சிறுமி என்கிற பெயரில் அந்நாட்டில் உள்ள இளம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு தன்னார்வ கொடை திரட்டு உருவாக்கி இருக்கிறது. உலகம் முழுக்க வரும் நன்கொடைகள் இங்கு சிறுமிகளுக்கான நலத்திட்டங்களுக்காக உள்நாட்டில் உள்ள சில நிறுவனங்கள் மூலம் செலவழிக்கபடுகிறது.

எத்தனையோ பேருக்கு தன் புகைப்படம் மூலம் தாக்கமேற்படுத்திய ஆப்கன் சிறுமி இன்று ஒரு மலைப்பகுதியில் மிக சராசரி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

உலகப் புகழ் பெற்ற புகைப்படங்களின் பின்னணியில் உள்ள உணர்ச்சிமிகு உண்மை கதைகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
2 responses to “உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்”
  1. really impressive post. I like this post. thanks for sharing the info’s 🙂

  2. வலைச்சரத்தில் தங்களது பதிவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.