மனிதர்கள் – வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி

நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல வகையான ஹாரன் ஒலிகள்.

தனது பேரனை பள்ளிக்கு கூட்டி செல்லும் மூதாட்டி வழி தெரியாமல் சாலையில் பரிதவித்து நிற்பது போன்ற காட்சிகள் நமது கண்பார்வையின் எல்லையோரம் நடந்து மறைந்து விடுகிறது.

இது வேறொரு மூதாட்டியின் கதை. ஹெலன் அந்த மூதாட்டியின் பெயர். காலை ஏழுரை மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் பக்கம் கூடும் ஒரு சிறு கூட்டத்தில் அவரைக் காண முடியும். வீடு வீடாக போய் சோப்பு பவுடர் போன்றவற்றை விற்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஹெலன் தான் மிகவும் வயதான பெண். மேலும் சில கிழவிகள் இருக்கிறார்கள். ஆனால் ஹெலனை விட வயது குறைவு தான்.

பதினைந்து வயது தொடங்கி பல வயதுகளில் பெண்கள் இந்த கூட்டத்தில் இருந்தார்கள். ஒரு நாளில் எத்தனை பொருட்களை விற்க வேண்டும் என ஓர் இலக்கு உண்டு. மற்றவர்களை விட ஹெலனுக்கு அந்த இலக்கு அதிகமாக இருந்தது. காரணம் சூப்பர்வைசர் பெண்மணிக்கு ஹெலனை பிடிக்கவே இல்லை.

“வயதானதுங்களை எல்லாம் என் தலையில கட்டி பிரச்சனை பண்றாங்க,” என முணுமுணுத்தபடியே தான் தினமும் காலையில் பொருட்களை சப்ளை செய்ய ஆரம்பிப்பார் சூப்பர்வைசர். மொத்த கூட்டத்திற்கு நிர்ணயிக்கபட்ட இலக்கு விற்பனையை விட மிக குறைவாகவே மாத மாதம் விற்க முடிகிறது. அதற்கு காரணம் வயது அதிகமான பெண்கள் இந்த கூட்டத்தில் இருப்பது தான் என்பது சூப்ரவைசரின் எண்ணம். முக்கியமாக ஹெலனை அவளுக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால் ஹெலனோ மற்றவர்களை விட அதிகமாக விற்று விடுகிறார். இதனாலே ஹெலனை வேலையை விட்டு அனுப்பவும் முடியாமல் இருக்கிறது.

தெருக்குத் தெரு பல சரக்கு கடைகளும், கலர் கலரான பெரிய கடைகள் பலவும் தோன்றி விட்ட காலத்தில் வீடு வீடாக போய் விற்பனை செய்வது என்பது கிட்டதட்ட முடியாத காரியமாக போய் விட்டது. சென்னையில் இவர்களைத் திருடர்கள் போலவும் பிச்சைக்காரர்கள் போலவும் தான் பார்க்கிறார்கள். அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டிகள் இவர்களைக் கண்டாலே தடியைச் சுழற்றியபடி வருகிறார்கள்.

ஹெலனுக்கு வெயில் காலம் தான் மிகவும் கஷ்டமான காலமாக இருந்தது. செருப்பில்லாமல் நடப்பது நெருப்பில் நடப்பது போல் இருந்தது. காலையில் எதாவது மோராவது கரைத்து குடித்து விட வேண்டும் இல்லையென்றால் இந்த வெயிலுக்கு தலை சுற்றி எங்காவது விழுந்து விட நேரிடும். அவருடைய மகள் இவரை விட மோசம். வெயில் காலத்தில் சேல்ஸிற்கு வரவே மாட்டேன் என வீட்டிலே படுத்து விடுவாள். அந்தச் சமயங்களில் முடிந்தால் பேத்தி வருவாள். இல்லை என்றால் இந்த மூதாட்டியின் சம்பளம் மட்டும் தான் வீட்டிற்குக் கிடைக்கும்.

ஹெலனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள், ஒரு மகன். ஆனால் இப்போது உடனிருப்பதோ ஒரே ஒரு மகள் மட்டுமே. ஒரு மகளும் மகனும் சிறு வயதிலே இவர்களை விட்டு பிரிக்கபட்டு விட்டார்கள். இவரது கணவர் எப்போதோ பிரிந்து விட்டார். பக்கத்தில் இருந்த ஓர் அனாதை இல்லத்தில், ‘உங்கள் குழந்தைகளை நாங்கள் இலவசமாக படிக்க வைக்கிறோம்,’ என்கிற உறுதிமொழி கொடுத்து முதல் இரு குழந்தைகளை வாங்கி கொண்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஆட்கள் வந்து அந்தக் குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க போகிறோம், சில வருடங்கள் கழித்து அவர்கள் உங்களிடமே திரும்ப வந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்தச் சில வருடங்கள் வரவே இல்லை.

என் குழந்தைகள் என்னவானார்கள் என்று அந்த இல்லத்தின் நிர்வாகிகளிடம் ஹெலன் கேட்டால் யாரோ வெள்ளைக்கார குடும்பத்தில் தன் இரண்டு குழந்தைகளும் வளர்வதாய் தகவலும் சில சமயம் அந்த குடும்ப புகைப்படமும் கிடைக்கும்.

“உன் கூட கஷ்டபடறதை விட அங்க அவங்க நல்லா சந்தோஷமா இருக்காங்க,” என கமெண்ட்டும் கிடைக்கும்.

கணவனைப் பிரிந்து உறவுகளைப் பிரிந்து குழந்தைகளையும் இழந்து தன்னிடம் மிச்சமிருக்கிற ஒரே ஒரு பெண் பிள்ளையோடு வாழ்ந்தார் ஹெலன். உதவுவதற்கு யாருமில்லை. அன்றைய கூலி அன்றைய உணவிற்கு என்கிற ரீதியில் தினமும் பிழைப்பு ஓடியது. மகள் வயதிற்கு வந்த சில வருடங்களில் ஒருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். சில காலம் கழித்து கையில் இரண்டு குழந்தைகளோடு கணவனைப் பிரிந்து தாயிடமே வந்து விட்டாள்.

காலம் உருண்டோடி விட்டது. மகளுக்கே இப்போது நரை முடி எட்டி பார்க்க தொடங்கி விட்டது. இதெல்லாம் தற்காலிகமான துன்பம் தான், எல்லாம் நல்லபடியாய் மாறும் என ஹெலன் நினைத்து நினைத்து ஏறத்தாழ நாற்பது வருடங்களாகி விட்டன. போக போக நிலை மோசமாகி கொண்டு தான் இருக்கிறது. பேத்தியும் வயதிற்கு வந்து விட்டாள். எப்படி இவர்களை கரையேற்றுவது என்றே புரியவில்லை. இப்படியாய் ஹெலனின் வாழ்க்கை ஒரு துயர காவியமாய் இருந்தது. ஆனால் அவரை நேரில் பார்க்கும் போது அந்த துன்பங்கள் அவரது முகத்தில் குடியிருப்பதைப் பார்க்கவே முடியாது. அவரது வார்த்தைகளில் எப்போதும் கிண்டலும் நக்கலும் கலந்திருக்கும். ஆனால் அவர் நாள்கணக்கில் அழுதது ஒரே முறை தான். அது அவர் தனது தத்து கொடுக்கபட்ட மகளோடு முப்பது வருடங்கள் கழித்து பேசிய போது.

அந்த வெளிநாட்டு போன் நம்பர் கிடைத்த போது அவரால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. எஸ்.டி.டி பூத்திற்கு போன போது அங்கிருந்து வெளிநாட்டிற்கு பேச முடியாது என சொல்லி விட்டார்கள். பிறகு ஒரு வழியாய் வேறு கடையில் இருந்து அந்த வெளிநாட்டு எண்ணைத் தொடர்பு கொண்ட போது போனை எடுத்தது அவரது மகளே தான். ஐந்து வயதில் பார்த்த தனது மகளை முப்பது வருடங்கள் கழித்து குரலை மட்டும் கேட்கும் போது அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. ஆனால் அந்த பெண் ஆங்கிலத்தில் பேசினாள். கடைக்காரர் உதவிக்கு வந்தார். அந்த போனில் பேசி பார்த்து விட்டு அது ஆங்கிலம் கூட இல்லை, வேறு எதோ ஐரோப்பிய பாஷை என சொன்னார். அந்த பெண்ணிற்கு தமிழ் தெரியாது என்று சொல்லி விட்டாளாம். அன்று தான் ஹெலன் என்றுமே இல்லாமல் அழுதபடியே நாள்கணக்கில் இருந்தார்.

இப்போது கூட வடபழனியில் வீடு வீடாக சோப்பு விற்று கொண்டிருக்கிறார் ஹெலன். இன்றும் தன் கையில் இருக்கும் சோப்புகளில் பாதியாவது விற்று விட வேண்டுமென வெயிலில் திரிந்து கொண்டிருக்கிறார்.

நன்றி:

முதல் படம்: Mark Witton
இரண்டாம் படம்: Samit Roy

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
6 responses to “மனிதர்கள் – வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி”
  1. tharman Avatar

    her daughter an san in sweden .a chritian father sode this children,i saw her history in tv . tv programer acterist LAKSMY befor sevaral years ago,in sun tv. i am too unhappy. ilike to help her , how can i do it tel me pl…

  2. Sai Ram Avatar

    நன்றி தருமன் உங்களது மறுமொழிக்கு. அது சன் டீவியல்ல, ஜெயா டீவி. அச்சமில்லை அச்சமில்லை என்கிற நிகழ்ச்சியில் நான் தான் அந்த எபிசோட்டை தயார் செய்தேன். அவரோடு வாழ்ந்து வந்த மகள் ஒரு வருடத்திற்கு முன்பு கேன்சரால் இறந்து விட்டார். உங்கள் இமெயில் முகவரியை எனக்கு [sairam2000@gmail.com] தெரியபடுத்தினால் நீங்கள் எப்படி உதவி செய்ய இயலும் என்பதை தெரிவிப்பேன்.

  3. tamilarasu Avatar
    tamilarasu

    please get us her address for helping

  4. மிகவும் உருக்கமாக உள்ளது, ஹெலன் அம்மா வாழ்வு.

    எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் இது போன்ற ஒரு வயதான கிழவன், கிழவி பற்றி சொல்லிஇருந்தார். அவர்கள் சென்னையில் மின்சார ரயிலில் பொருட்கள் விற்பவர்கள்.

    இது போன்ற வயதானவர்கள் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் எப்போதும் போல் அல்லாமல் என் மனது தனக்குள் விம்மி விம்மி அழுகிறது. வழமை போல நாகரீகம், நகர மயம் என்று எல்லாம்……. எல்லோரும் சொல்லிகொண்டிருக்கும் இந்த வாழ்வின் மீதான இருப்பியல் தன்மை மீண்டும் மீண்டும் எனக்குள் கேள்விக்குரியதாகிறது. இது போன்ற பரிதவிப்புகள் எல்லா காலங்களிலும் இருந்துகொண்டு தான் இருக்கிறது, என்றாலும் அது பற்றிய அவதானிப்புகள், அவற்றை மீட்டு எடுப்பது பற்றிய சிந்தனைகள் எல்லாமும் வரத்தான் செய்கிறது. இருந்தும் அதே சென்னை வாசியாக, முயலாமையின் (இயலாமை அல்ல ) கோபம் ஒரு கணம் நெஞ்சை ஊடறுத்து செல்கிறது.

    நானும் வடபழனி வழியாகத்தான் தினமும் பயணிக்கிறேன் இன்று அம்மா பற்றிய தகவல் தாருங்களேன். (yaalinimai@gmail.com)

  5. Sai Ram Avatar

    நன்றி தமிழரசு மற்றும் zara. அவரை பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் இமெயிலில் பகிர்ந்து கொள்கிறேன்.

  6. vasantha lakshmi vijayarangan Avatar
    vasantha lakshmi vijayarangan

    its very sad dat nobody wnts to see r knw abt others hw they r living .its has become scarce-empathy, unconditional love.where we r going?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.