கொலையாளியை கூட்ட நெரிசலில் அவர்கள் அழைத்து போகும் போது
எங்கள் இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்து கொண்டன.
அவனது கண்களுக்குள் அமைதி மட்டுமே இருந்தது.
என் கண்களில் படபடப்பை பார்த்திருப்பான்.
அவனது கண்களில் அமைதியை தவிர
வேறு என்ன இருந்திருக்க வேண்டும்?
என்ன எதிர்பார்த்தேன்?
கூட்டத்தின் வியர்வை வாசத்தில்,
புரியாத பாஷை கூச்சல்களில்
யார் செவிக்கும் கேட்காத வசனங்கள்
காற்றில் மிதந்து செல்வதை பார்த்தேன்.
“கிராமத்திலே அழகான பெண்
தினமும் தனியா அந்த பக்கம் போறதை
கவனிச்சிட்டே இருந்திருக்கிறான்.”
“கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு.”
காற்றில் மிதந்து சென்ற வசனங்களை
நான் முழுமையாய் வாசிக்கும் முன்
அவை கலைந்து போயின.
கலைந்த வேகத்தில் புகையாய்
நேற்று நான் பார்த்த
வேறொரு யுவதியின் முகத்தை வரைந்து காட்டியது.
அழகு.
அதனை கச்சிதமாய் திருத்தமாய் பயன்படுத்தி
பார்ப்போரை வசியம் செய்யும் தோற்றத்துடன்
முகத்தில் புன்முறுவல் பூசியிருந்தாள்
அந்த இளம் பெண்.
புகை ஓவியத்தை என் பயத்தால் கலைத்தேன்.
ஆபத்து கட்டாயம் தேடி வரும் என
உடல் நடுங்கியது.
கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு கூடியது.
போலீஸ் வேன்கள் உறுமும் சத்தம்.
தரையில் வாழைப்பழத்தை மிதித்து பிறகு தள்ளி நின்றேன்.
அவன் கண்களில் நான் அமைதியை தாண்டி
வெறுமையை தான் பார்த்தேன்.
ஆம், அது களைப்பினால் உண்டானதா?
உடற்களைப்பா? அல்லது?
என்னை கசக்கியபடி கூட்டம்.
அந்த கூச்சலில் எழுந்தது ஒரு நினைவு.
வேறொருவனுடன் ஓடி போன மனைவியை
வெட்டுவதற்கு வாள் ஏந்தி வந்த அரசன்
பல காலம் கழித்து அவளை பார்த்த கணத்தில்
அவளது அழகை கண்டு திகைப்புற்று
தன்னையறியாமல் மண்டியிட்ட காட்சி.
யாரோ காலை மிதிக்க முயல்கிறார்கள்.
அவனது கண்களை நினைவுபடுத்தி கொள்கிறேன்.
மறக்க கூடாது. மறக்க கூடாது.
அப்படியே பசுமையாய் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
போலீஸ்காரன் ஒருவன் லத்தியை உயர்த்தி
கூட்டத்தை பயமுறுத்த முயல்கிறான்.
‘அரசர்களை அரசாண்ட இளவரசியின்
முகத்தில் கட்டாயம் கர்வத்தின் சுழிப்பு தோன்றியிருக்கும்.’
எதையும் வெல்லலாம்.
ஆனால் அழகு ஒரு சாபம் தான்.
Leave a Reply