இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது.
வழியும் சிகரெட் புகை
உடலில் எங்கோ கீதமிசைக்கிறது.
இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன
நரம்புகள்.
சூடாய் இறங்கும் தேனீர் பானம்
உடலிற்குள்
இளம் மழையின் அரவணைப்பு.
ஒரு கணம்
ஒரே ஒரு கணம் மட்டும்
தேனில் வழுக்கி விழுந்தவனாய்
மிகப் பெரிய குத்து முகத்தில் இறங்கிய கணத்தில்
ஸ்தம்பித்தவனாய்
நீருக்கடியில் மூச்சிற்குப் போராடி தோற்றவனாய்
உடலுறவில் உச்சத்தில் நிலைத்தவனாய்
ஆழ் தூக்கத்திற்குள் போகும் தருணத்தில் இருப்பவனாய்
எங்கோ விழுந்து வலியில் பெரும் ஓலத்துடன் கதறுபவனாய்
வெறுமையில் நிலைத்தவனாய்
இருக்கிறேன்.
ஆனால் மறுகணம்
ரோட்டில் ஓடும் வாகனங்கள்,
பேச்சு அரவம்,
வலு பெறும் வெயில்,
குப்பைகளின் நாற்றம்,
கையில் இருக்கும் தேனீர் கோப்பையின் சூடு
என்னுள்.
அதற்கு அடுத்து
நினைவு அடுக்குகளில் இருந்து
எது எதோ நினைவுகள்
கலைத்து போட்ட சீட்டுக் கட்டுகளாய்.
எதற்கோ பயப்படுகிறேன்.
பழையதை நினைத்து முகம் சுளிக்கிறேன்.
குவிந்து கிடப்பவைகளில் நிலையில்லாமல் பார்வையை நகர்த்தி
எதோ ஒரு செங்கலில்
அது தரும் நினைவு அலைகளில் மூழ்கி
எதோ ஓர் உணர்வெழுச்சியில்
பிறிதொரு நினைவிற்குத் தாவி
பின் அதனோடுச் சம்பந்தப்பட்ட ஒரு பழைய நிகழ்வை
ஓட்டி பார்த்து கொண்டிருக்கிறேன்.
ஒரு பெருமூச்சு
மணலில் இருந்த கிறுக்கல்களை அழிக்கும் அலை போல
என்னை மீட்டு எடுக்கிறது.
மீண்டும் வெறுமைக்குள் மூழ்க முயல்கிறேன்.
பாசாங்குச் செய்கிறேன்.
படையெடுத்து வரும் சிந்தனையோட்டங்களைத் தடுத்து நிறுத்த
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.
இதைக் கவிதையாக எழுதுவதா?
நல்ல யோசனை.
முதல் வரி என்னவாக இருக்கும்?
தோற்கிறேன்.
கடல் அலைகளால் பந்தாடப்படுகிறேன்.
வார்த்தைகளில் விளையாடுகிறேன்.
Leave a Reply