பித்து - சிறுகதை

பித்து – சிறுகதை

தூக்கம் வராத இரவுகள் வேதனையானவை. கல்லூரி நாட்களில் படுத்தவுடனே தூங்கியதெல்லாம் எதோ கனவு மாதிரி இப்ப தோன்றுகிறது. தூக்கம் வந்து விடாதா என்று கண்களை மூடி படுத்திருப்பேன். இர்ர்ம் என்று ஃபேன் சுற்றி கொண்டிருக்கும் சத்தம் பெரிதாகி கொண்டே இருக்கும். அதுவே ஓர் இசைக்கருவி போல ஒரே லயத்துடன் அதன் இசை வளரும். அப்படி வளரும் இசை எதோ ஒரு கணத்தில் என்னுடைய சிந்தனைகளில் மூழ்கி அமிழ்ந்து போகும். சிந்தனைகளில் மூழ்கி போன என்னை எதோ ஒரு சத்தம் திடுக்கிட வைக்கும். தெருவில் நாய்கள் குரைக்கும் சத்தம், யாராவது குடிக்காரன் தள்ளாடி தள்ளாடி நடந்து போகும் ஓசை இப்படியாக பல நிமிடங்கள் கழிந்த பின்னர் இன்னும் தூங்கவில்லையே என்பதே பெரும் அசதியாக இருக்கும். எழுந்து போய் தண்ணீர் குடிப்பேன். ஜன்னலைத் திறந்து பார்ப்பேன்.

இரண்டாவது மாடியில் இருந்து பார்ப்பதற்கு இந்தச் சின்ன சந்து எதோ குழந்தை விளையாடி கலைத்து போட்ட பொம்மை மாதிரி குலைந்து மஞ்சள் நிறத்தில் தெரியும். பகல் நேரங்களில் ஆள் அரவத்துடன் இயங்கும் இந்தச் சந்து கூட இரவில் அசந்து தூங்கி விட்டதோ என்று நினைப்பேன். சின்ன சந்தில் எத்தனை குடித்தனங்கள். சென்னைக்கு வந்து குடியேறியவர்களுக்கு இது ஒரு சாபம் தான். நாளைக்குக் காலை அம்மா வரும் போது இந்தச் சந்தினைக் கண்டு மிரண்டு போனாலும் போவாள். ஊரில் ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் இருக்கும் இடைவெளியளவு இந்தச் சந்து. இங்கே ஒட்டி கொண்டிருக்கின்றன எத்தனையோ குடும்பங்கள்.

மீண்டும் படுக்க போகுமுன் குழந்தை தூங்குவதையே உற்று பார்த்து கொண்டிருப்பேன். சத்தமாக அழ வேண்டும் என்பது போல ஒரு வேதனை திரண்டு எழும். அதற்குச் சக்தி இல்லாமல் மௌனமாய் குழந்தையைப் பார்த்தபடி நின்றிருப்பேன். மீண்டும் படுத்தால் தூக்கம் வரவே வராது. தொலைந்து போன தூக்கம் என்னை அரை மனுசியாக்கி விட்டது. தேகம் மெலிந்து கண்களைச் சுற்றி கருவளையம் போட்டு எப்போதும் எதோ சிந்தனையில் மூழ்கியவாறு இருக்கும் அரை உயிர் ஜடமானேன்.

தூக்கம் வராத இரவுகளில் பெரும்பாலும் கொசு பேட் எடுத்து கொசுகளை அடித்து கொண்டிருப்பேன். டப் டப் என்று கொசுகள் மாட்டும் சத்தம் கேட்டபடி இருக்கும். எவ்வளவு அடித்தாலும் எங்கிருந்து தான் இத்தனை கொசுகள் வருகின்றனவோ. மூலை முடுக்கில் எல்லாம் கொசு பேட்டினை வீசி அந்தப் பொத்தானை அழுத்தியபடி கொசுகளைத் தேடி கொண்டிருப்பேன். மன அழுத்தத்தினைத் தீர்ப்பதற்கு தான் இந்தக் கொசு பேட் கண்டுப்பிடிக்கப்பட்டதோ என்னவோ. இரவு நேரம் எதாவது வீட்டினைக் கடந்து போகும் போது உள்ளே யாராவது ஒரு பெண் கொசு பேட் வைத்து கொசுகளை அடித்து கொண்டிருந்தால் அவளும் என்னைப் போல மனதிற்குள் ஆயிரம் சித்ரவதைகளை அனுபவித்து கொண்டிருக்கிறாள் என தோன்றும். ஒருகட்டத்தில் படுத்தபடி கைகளை உயர்த்த வலுவில்லாமல் கொசு பேட்டினை தரையில் சற்றே உயர்த்தியபடி படுத்து கிடப்பேன். அப்படியும் இரண்டொரு கொசுகள் டப் டப் என வந்து மாட்டும்.

இன்றிரவு தூக்கத்துடன் சண்டையிடுவது சற்று ஸ்பெசல். காரணம் பல காலத்திற்குப் பிறகு நாளை என் வீட்டிற்கு விருந்தாளிகள் வருகிறார்கள். என் அம்மா தான். கூட மாமாவும் வருகிறார். திருமணத்திற்கு முன்பு அவர்கள் இருவரையும் பார்த்தது. என்னை அவர்கள் தலைமுழுகியதும் நான் அவர்களை மறந்ததும் பழைய கதை. இப்போது தெருவோரமாய் சிதறி கிடக்கும் சருகுகள் போல என் நிலை. அவர்களும் வந்து மிதித்து விட்டு போகட்டும்.

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்து கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்து இப்போது விழுப்புரத்திற்கு வந்து இருப்பார்கள். திண்டிவனத்திற்கு வந்து இருப்பார்கள். இப்போது செங்கல்பட்டு. இப்போது தாம்பரம். இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம். இப்போது டவுன் பஸ்ஸில் ஏறி இருப்பார்கள். எங்கேயோ எப்படியோ தூக்கத்தில் மூழ்கினேன். கனவில் மாமாவும் அம்மாவும் வீட்டு கதவைத் தட்டினார்கள். நான் கதவைத் திறக்காமலே நின்றிருக்கிறேன். அம்மாவின் குரல் அதே தெளிவோடு இருக்கிறது. எனக்கு அழுகை முட்டுகிறது. ஆனால் அம்மாவிற்கு முன்னால் நான் அழ மாட்டேன். அவளது சாபம் பலித்து விட்டது. என்ன செய்வது? கதவைத் தட்டும் சத்தம் நின்று விட்டது. அவர்கள் திரும்பவும் தட்டுவார்கள் என்று காத்திருக்கிறேன். ஆனால் கதவு தட்டப்படவே இல்லை. சற்றே தவிப்புடன் நான் கதவைத் திறந்து பார்க்கும் போது அங்கே யாருமில்லை. கனவு கலைந்தவுடன் முதல் வேளையாக கதவைத் திறந்து பார்த்தேன். உண்மையில் யாருமில்லை. இன்னும் இருட்டியபடி தான் இருக்கிறது. காலை ஐந்து மணி. உண்மையில் அம்மா வந்து கதவைத் தட்டி பார்த்து விட்டு போய் விட்டாளா? எனது செல்போனை எடுத்து பார்த்தேன். நேற்று மாலை அம்மா கிளம்புவதற்கு முன் அழைத்ததற்குப் பிறகு வேறு எந்த அழைப்பும் இல்லை. பல வாரங்களாய் இந்தச் செல்போனிற்கு அழைப்புகளே கிடையாது. எங்கே போனார்கள் எல்லா மனிதர்களும். இந்த அவநம்பிக்கையைப் போக்குவதற்காக தான் வருகிறாளா அம்மா? இல்லை வயிறு எரிந்து சாபம் விட்டது பலித்து விட்டதா என்று சரி பார்த்து போக வருகிறாளா?

துடைப்பத்தினை எடுத்து கொண்டு மீண்டும் தரையினைப் பெருக்க ஆரம்பித்தேன். நேற்றிலிருந்து பத்து முறையாவது வீட்டில் உள்ள இரண்டே இரண்டு அறைகளையும் மீண்டும் மீண்டும் பெருக்கியிருப்பேன். வீட்டில் வசதி இல்லை எனினும் சுத்தமாக வைத்திருக்கிறாள் மகள் என்றாவது அம்மா உணரட்டும் என்பது தான் எண்ணம். அடிக்கடி ஜன்னலைத் திறந்து சந்தினைப் பார்த்து கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் சென்னையில் விலாசத்தை சரியாக கண்டுபிடித்து வந்து விடுவார்களா? வந்து விடுவார்கள். பீரி பெய்டு செல்போனில் பேலன்ஸ் இல்லாமலே பல மாதங்களை ஒட்டி கொண்டிருக்கிறேன். அதனால் அழைப்பு வந்தால் பேச முடியும். திரும்ப யாரையும் அழைக்க முடியாது. கீழே பிரதான சாலைக்கு போய் டீக்கடையில் ஒரு ரூபாய் காய்ன் போன் பண்ணலாம். அத்தனை பேர் நடுவில் போய் நின்று போன் பேச தயக்கமாகவும் இருந்தது. எனது செல்போனில் இருந்து அம்மாவின் எண்ணிற்கு கால் செய்ய முயன்றேன். அழைப்பு போகாது என்று தெரியும். சொல்லி வைத்தாற் போல் அந்தப் பெண் பல நாட்கள் போல இன்றும் அதே குரலில் பேலன்ஸ் இல்லை என்று சொன்னாள். இந்தப் பெண் யாராக இருப்பாள்? என்னைப் போல் திருமணமானவளாக இருப்பாளா? கட்டாயம் சின்ன பெண் போல தெரியவில்லை. இவளுக்கு வாய்த்த புருஷன் இவளை எப்படி வைத்திருப்பான்? கட்டாயம் என்னை போல துரதிர்ஷ்டம் அவளுக்கு வாய்த்திருக்காது? பாவம் வாய்த்திருக்க வேண்டாம் என நினைத்த அதே நேரத்தில் அவளுக்கும் அதே சிக்கல் வாய்க்க வேண்டுமென வக்கிரமாக யோசித்தேன். அவளும் என்னைப் போல குழந்தையைத் தூக்கி கொண்டு நிற்கிறாள் என்பதாய் ஒரு கற்பனை உருவத்தைப் படைத்து பார்த்தேன். பேலன்ஸ் இல்லை என அவள் மைக்கில் சொல்லும் போது அந்தக் குழந்தை அழுதால் என்ன செய்வாள்? ச்சை என்ன யோசனை இது?

அம்மா வீட்டிற்குள் வரும் போது அழுவாளா? என்னைப் பார்த்து புன்சிரிப்பாளா? நான் காதலிக்கிறேன் என்று வீட்டில் முதன்முதலாக தெரிந்தபோது கடுகடுவென இருந்தாளே அது போலவே இன்னும் இருப்பாளா? என் உருவத்தினைப் பார்த்தாவது அவள் அழ தான் வேண்டும். பாதியாய் தேய்ந்து போனேன் என்று அழ தான் வேண்டும். குழந்தையைப் பார்த்தால் என்ன செய்வாள்? குழந்தையைத் தொடுவாளா? கொஞ்சுவாளா? சில வாரங்களுக்கு முன்பு முகமெல்லாம் அறை வாங்கி விரல் தடங்கள் பதிந்து போய் மூஞ்சி வீங்கி போய் இருந்தேனே அப்போது அவள் என்னைப் பார்த்திருக்க வேண்டும்? அது போல எனது முகத்தை நான் இப்போது மாற்றி கொள்ள முடியுமா? நானே என்னை அறைந்து கொள்ளட்டுமா? இன்னும் முதுகில் அவன் அடித்த தடம் இருக்கிறது. பல் ஒன்று பாதி உடைந்து விட்டது. இதையெல்லாம் அவள் பார்த்து அழ வேண்டும் என்றும் தோன்றுகிறது. இதையெல்லாம் அவள் பார்க்க கூடாது என்றும் ஒரு மனம் சொல்கிறது.

அம்மா எப்படி மாறியிருப்பாள் என்றும் ஒரு சிந்தனை ஓடியது. என்னைப் போலவே நிறைய மாறியிருப்பாளா? அப்பா இறந்ததற்குப் பிறகு அவள் வெகு சீக்கிரமே வயதானவளாய் மாறி விட்டதாய் எனக்குத் தோன்றும். இன்னும் வயதானவளாய் தோற்றமளிப்பாளா? இன்னும் நெற்றியில் பொட்டு வைத்திருப்பாளா? உடல் மெலிந்து இருப்பாள் என்று தோன்றியது. அந்தச் சிந்தனை மீண்டும் முட்புதர் போல மனமெங்கும் குற்றவுணர்வினை உருவாக்கி சோகத்தினை உருவாக்கியது. அதிகாலையில் எதற்கு இந்த அழுகை இப்படி முட்டுகிறது. அம்மாவினைப் பார்த்தவுடன் அவள் அழுகிறாளோ இல்லையோ நான் அதற்கு முன்னே பெருங்குரலெடுத்து அழுவேன் போலிருக்கிறது. அவளை விட நான் அதிகமாய் வயதானவளாக மாறி விட்டது போல ஓர் உணர்வு. இல்லை எதிர்பார்ப்புகள் வேண்டாம். அவள் வருவது சமரசம் பேசுவதற்கு அல்ல. என்னை இந்த நரகத்தில் இருந்து மீட்பதற்கு இல்லை. அவளுக்கு ஏற்கெனவே இருக்கும் பெரும்பாரத்தோடு என்னையும் இழுத்து கொண்டு ஓட அவள் தயாராக இருக்க மாட்டாள். அவள் வார்த்தைகளால் என்னைத் திட்டுவது போலவும் மாமா என்னை அறைவது போலவும் யோசித்து அந்தச் சோகத்திலும் குரூரமாய் திருப்திப்பட்டு கொண்டேன்.

the-dream01

எனது கணவன் என்னை அடித்த நாட்கள் நினைவிற்கு வந்தன. ஒரு கட்டத்தில் அடி வாங்கி அடி வாங்கி உடம்பு மறத்து போய் விடுமென சொல்கிறார்களே, அதுவெல்லாம் பொய் தான். எப்போது அவன் அடித்தாலும் புதிதாய் ரண வலி தான். குடிபோதையில் அவனுடைய வேகம் அசாத்திய பலத்துடன் இருக்கும். எதிலாவது தலை முட்டி கொண்டு ஒரு கணம் உலகமே கிர்ரென சுற்றும். அவனை எதைக் கொண்டு தாக்கினாலும் அவனுக்கு அது எல்லாம் உறைக்கவே செய்யாது. அவனுடைய அடிகளை வாங்க வேண்டுமானால் நானும் அவனைப் போல குடித்தால் தான் உண்டு போல.

இப்போது சில வாரங்களாய் அவனில்லாமல், இந்த அடிகள் இல்லாமல், வார்த்தைகளால் குரூரமான சித்ரவதை உண்டாகாமல் வாழ்க்கை திடீரென வெறிச்சென ஆகி விட்டது. அவன் திரும்ப வர வேண்டுமென கூட தோன்றுகிறது. அர்த்தங்கள் இல்லாது போன வாழ்க்கையில் குழந்தையுடன் தனியே எதோ ஆழ்கிணற்றில் எதற்கோ காத்திருப்பவள் போல் இருக்கிறேன். எதற்கு காத்திருக்கிறேன்? சில சமயம் மனம் தன் நிலை இழந்து எனக்குப் பித்து பிடித்து விட்டதா என்று கூட சந்தேகம் தோன்றும். கடைசியாய் நான் வேறொரு மனிதருடன் பேசி எவ்வளவு நாட்களாகின்றன என்று யோசித்து பார்ப்பேன். உண்மையில் இவையெல்லாம் கனவா? வாய்ப்பே இல்லை. என்ன ஆசைடி உனக்கு!

கதவு தட்டபடும் சத்தம் கேட்டது. ஒரு கணம் இதுவும் கற்பனையா என்று திகைத்து ஸ்தம்பித்து நின்றேன். இல்லை, கதவு தட்டப்படும் சத்தம் தான். வேகமாய் எழுந்து போய் கதவு அருகே நின்றேன். கைகள் என்னையறியாமல் நடுங்கின. கதவைத் திறக்காமலே நின்றபடி இருந்தேன். அம்மாவின் குரல். என் பெயரைச் சொல்லி அழைக்கிறாள். என் உடலெங்கும் நடுக்கம். கண்களில் கண்ணீர். அம்மாவின் குரலும் கதவு தட்டப்படும் சத்தமும் தொடர்ந்தன. நான் பித்து பிடித்தாற் போல் நின்றிருந்தேன். சற்று நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் நின்று விட்டது. மறுபடியும் தட்டுவார்கள் என எதிர்பார்த்தேன். இல்லை, கதவு தட்டப்படும் சத்தமில்லை. போய் விட்டார்களா? பதட்டத்துடன் கதவைத் திறந்தேன். மாமாவும் அம்மாவும் பதட்டத்துடன் நின்றிருந்தார்கள். அம்மாவின் முகத்திலோ தோற்றத்திலோ பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. என்னை பார்த்தவள் ஒருகணம் திடுக்கிட்டு இது நான் தானா என்பது போல பார்த்தாள். நான் கண்ணீர் வடித்தபடி அவளையே பார்த்தேன்.

அவளுக்குள் பெரும் வெடிப்பு நிகழ்ந்தாற் போல அவள் கரைந்தாள். அழுதபடி என்னை ஓடி வந்து அணைத்தாள். அந்த அணைப்பிற்காக தான் இத்தனை காலம் காத்திருந்தது போல நான் அதனுள் தஞ்சம் புகுந்தேன்.

*****

நன்றி
ஓவியம்: பிகாசோவின் ‘கனவு’