ரத்தத் துளிகள்

தடதடவென ரயில் அதிர்ந்து ஓட
பாலத்தின் கீழே சாலையில்
வாகனங்கள்
அதிர்வலையில் மிதந்து செல்லும்.

ரயிலோ இல்லையோ
பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து
ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன
சாலையில்
வருவோர் போவோர் வெகு சிலர் மீது.

அதை உணராமலோ
மழைதுளியென எண்ணியோ
போய் விடுவார்கள் பலர்.

ரத்தத்தைக் கண்டு திகைத்தவர்கள்
வேறு பாதைக்கு
மாறி விட்டார்கள்.

எங்கிருந்து ரத்தம் சொட்டுகிறது என
அறிய முற்பட்டவர்கள்
பலியானார்கள்
ரயிலின்
தடதடக்கும் சக்கரங்களுக்கு.