கசாப்பிற்குத் தூக்கு வேண்டாம்

நான் மத அடிப்படைவாதி அல்ல. காருண்யத்தைப் போதிப்பவனும் இல்லை. இந்தியா ஜனநாயக பாதையில் மேலும் மேம்பட வேண்டும் என நினைப்பவன். எதிரிகளை அடித்து கொல்வதும், குற்றவாளிகளின் முதுகை உரிப்பதும், கழு ஏற்றுவதுமாய் இருந்த சமூகம் இன்று நீதிமன்றம், அரசமைப்பு சட்டம் என மாறி வந்து இருக்கிறது. அடுத்து நாம் பயணிக்க வேண்டிய திசை எது? மக்களின் நல்லாட்சி என்பது சிவில் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மனித உரிமைகளை முன்னிறுத்துகிற ஆட்சியாகவும் இருக்க வேண்டும். உலகமெங்கும் பெரும்பாலான மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனை ஒழிக்கபட வேண்டுமென குரல் எழுப்புபவர்களாகவே இருக்கிறார்கள்.

அஜ்மல் கசாப் கொடூரமான கொலைகளைச் செய்த தீவிரவாதி. ஒரு நாட்டின் மீது பயங்கரவாதத்தையும் அதன் விளைவாய் மக்களிடையே பெரும் பீதியையும் உருவாக்கிய அணியில் முக்கிய நபர். ஒன்பது பயங்கரவாதிகளுடன் சேர்ந்து மும்பையில் 166 பேரை கொன்ற சம்பவத்திற்குக் காரணமான நபர். கசாப் செய்த குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திலே இப்போது தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பில், “இது அரிதினும் அரிதான குற்றம், மரண தண்டனை சரியானதே,” என சொல்லியிருக்கிறார்கள். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாக உறவை இழந்தவர்களில் பலர் கசாப்பை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என கருத்து சொல்லியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.கவும் இந்தத் தூக்கு தண்டனையை ஆதரிக்கிறார்கள். வழக்கமாக மரண தண்டனையை எதிர்த்து பேசுபவர்கள் கூட இந்த வழக்கில் குற்றத்தின் அதீத கொடூர தன்மையைப் பார்த்து மௌனம் சாதிக்கிறார்கள். குற்றம் சாட்டபட்டவர் கொடூரமானவராக இருப்பதினால் தூக்கு தண்டனையை ஆதரிக்க வேண்டுமென்று எதுவுமில்லை. மாறாக குற்றத்தின் தன்மை மிக கொடூரமாக இருக்கிற காரணத்தினாலே மரண தண்டனையை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கொடூரமான பயங்கரவாதி, குழந்தைகளைப் பலாத்காரபடுத்தி கொன்றவன் இப்படிபட்டவர்களுக்கும் கூட மரண தண்டனை தரக்கூடாது என சொல்வதில் தான் தொடங்குகிறது மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம். எத்தனை கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் மரண தண்டனை என்பது கிடையாது என்பதே மனித உரிமைகளை முன்னெடுக்கும் சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.

மென்மையான அணுகுமுறை குற்றங்களை ஊக்குவிக்குமா?

இந்தியா மென்மையாக குற்றங்களை கையாள்கிறது, அதனாலே பல குற்றங்கள் முக்கியமாக பயங்கரவாத செயல்கள் பெருகுகின்றன என பலகாலமாய் சொல்கிற கூட்டம் இங்குண்டு. இந்தக் கருத்து இப்போது அதிகார மட்டத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகிற அளவு வலுத்து இருக்கிறது. அதனாலே பற்பல விஷயங்களில் இனி இந்தக் குற்றத்திற்கு அதிக தண்டனை தரப்படும் என்பது ஒரு தீர்வாக முன் வைக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய தீர்வு பாமர மக்களை ஏமாற்றுவதற்கும் அப்போதைக்கு ஒரு தீர்வு உண்டானதாக பிம்பத்தை உருவாக்குவதற்குமே பயன்படும். என்னைப் பொறுத்த வரை தண்டனையின் அளவினைக் காட்டிலும் தவறிழைத்தால் கட்டாயமாக மாட்டி கொள்வோம் என்கிற பயத்தை உருவாக்குகிற அளவிற்கு வலுவான கண்காணிப்பு முறையே குற்றங்களைக் குறைக்கும். இல்லாவிட்டால் பத்தில் ஒருவர் தான் மாட்டுவார். அவரும் சில சமயம் பலி ஆடாக இருப்பார். பாலியல் பலாத்கார குற்றங்களுக்குத் தூக்கு தண்டனை என்கிற கருத்தாக்கம் சமீப காலமாக வலுத்து வருகிறது. மற்றொரு புறம் இந்தியா எங்கும் இன்றும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கபட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது, அந்த வழக்குகளில் குற்றவாளிகளின் குற்றம் நிரூபிக்கபடுவது என்பது மிக குறைவாகவே இருக்கிறது என சொல்கிறது ஓர் அதிர்ச்சி புள்ளி விவரம். இங்கே தூக்கு தண்டனை முக்கியமா? நமது அமைப்புகளை மேம்படுத்துவது முக்கியமா? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அமைப்புகளை வலுப்படுத்துவது என்பது பெரிய வேலை. தண்டனைகளைக் கடுமையாக மாற்றுவதென்பது எளிய வேலை.

கசாப்பிற்குக் கருணை காட்டினால் அது உணர்வுரீதியான பிரச்சனையாக மாற்றப்படும் என கவர்னரும் ஜனாதிபதியும் பயப்படக்கூடும். கருணை காட்டலாம் என்கிற மாதிரியான அணுகுமுறை மக்களிடையே தங்களுடைய பிம்பத்தைக் குறைத்து விடுமென அரசியல் கட்சிகள் பயப்படலாம். இந்தச் சூழலில் ‘இத்தனை கொடூரமான குற்றவாளிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட கூடாது,’ என அறிவு சூழலில் இயங்குபவர்கள் குரல் எழுப்ப வேண்டும். அதுவே தொலைநோக்கில் மரண தண்டனையை இந்திய தண்டனை சட்டத்தில் இருந்தே அதிகாரப்பூர்வமாக நீக்குவதற்கான முதல் படியாக அமையும்.


Comments
4 responses to “கசாப்பிற்குத் தூக்கு வேண்டாம்”
 1. This is not a simple Crime Sairam. This was a proxy war conducted by an enemy country. Their aim was to disturb the internal security there by disturbing the Indian economy. So he cannot be treated as common criminal who has committed an extraordinary crime. He has to be executed to send a message that India cannot tolerate any kind of war against its people.

  1. இந்தியா உள்நாட்டளவில் என்ன வெங்காய பாதுகாப்போடு இருக்கிறது..என்று அவர்கள் அச்சுறுத்த வந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்…

 2. முஹம்மத் ஆஷிக் Avatar
  முஹம்மத் ஆஷிக்

  ஸலாம் சகோ.சாய்ராம், செய்த குற்றத்துக்கு ஏற்ப… கசாப்புக்கு மரணதண்டனை மட்டுமே சரியான தீர்ப்பு என்பதே எனது கருத்து. கசாப்புக்கு தூக்குத்தண்டனை தரவில்லை என்றால் அது ஏனைய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு குற்றங்கள் புரிய உற்சாகத்தை அளித்துவிடக்கூடும். அது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து. இது ஒருபுறமிருக்க, மரண தண்டனை தவறு என்றால்…………… ‘வேறு என்ன தீர்ப்பு தருவது சரி’ என்று நீங்களே சொல்லுங்களேன்..! ((டிஸ்கி :- தமது வரிப்பணத்தை செலவழித்து அவனுக்கு வேளாவேளைக்கு சோறுபோட்டு வாழ்க்கை அளிக்க யார் தயார்..?))

 3. இந்திய அரசியலமைப்பு கசாப்பிற்கு தூக்கு தண்டனை விதித்துவிட்டதாலேயே மார்தட்டிக் கொள்ளும் அளவுக்கு அத்தனை சிறப்பானதொன்றும் கிடையாது..

  92-93இல் கசாப் தாக்குதல் நடத்திய அதே மும்பையில் கொல்லப்பட்ட எண்ணற்ற அப்பாவிகளுக்கு இன்றுவரை நீதிகிடைக்கவில்லை..

  ஸ்ரீ கிருஷ்ணா கமிசன் அறிக்கை குற்றம் சாட்டிய பால்தாக்கரே, அத்வானி மற்றும் அன்றைய ஆளும்கட்சியின் முதல்வர், காவல்துறை முன்னணி அதிகாரி வரை எவர் மீதும் நீதியின் சுண்டுவிரல் கூட நீளவில்லை..

  கசாப்பின் தூக்கை பொறுத்தவரையில் 92-93 மும்பை கலவரங்களுக்கு காரணமானவர்கள்தான் இன்று கசாப்பை தூக்கை துரிதப்படுத்தச் சொல்கிறார்கள்..

  கசாப்பை உடனே தூக்கிடலாம் அதற்கு முன்…

  மும்பையில் நடத்த தீவிரவாதிகள்(?) தாக்குதலில்

  இந்துத்வ கோரமுகத்தின் திரையை மெல்ல விலக்க தொடங்கியிருந்த கர்கரே ஏன் கொல்லப்பட்டார்…

  கசாப் உள்ளிட்ட கூட்டாளிகளுக்கும், இங்கிருக்கிற உள்ளூர் அரசியல் ப்ரோக்கர்களுக்கும் உள்ள தொடர்பு…போன்றவைகளை விசாரித்துவிட்டு பின்னர் அவர்களுக்கும், மேற்குறிப்பிட்ட இந்துத்வ அதிகார வர்க்க ப்ரோக்கர்களுக்கும் சேர்த்து தூக்கு வழங்கும் தீர்ப்பு ஒன்று வெளிவருமானால்….அதை வரவேற்கலாம்..

  அதுவரை தூக்கு என்பதை வரவேற்க முடியாது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.