ஜனாதிபதி பதவி தேவையா?

நேற்று பதிக்கப்பட்ட இந்த பதிவு ஓர் எதிர்பாரா தொழில்நுட்ப சிக்கலினால் அழிந்து போயிற்று. ஆகவே இதை மீண்டும் பதித்து இருக்கிறேன். RSS (ஓடை சந்தா) மற்றும் மின்னஞ்சல் மூலம் இப்பதிவினைப் படிப்பவர்களுக்கு இது இரண்டாம் முறையாக வந்து சேரும். பொருட்படுத்த வேண்டாமென கேட்டு கொள்கிறேன்.

குடியரசு தலைவர் தேர்தலும் இப்ப நம்ம ஊரு இடை தேர்தல் மாதிரி ஆகிடுச்சு. பொது தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்துல எந்த அரசியல் கட்சி வோட்டு பலத்தோட இருக்குன்னு காட்டுகிற சடங்கா இடை தேர்தலும் அது மாதிரியே குடியரசு தலைவர் தேர்தலும் மாறிடுச்சு. இந்த அபத்தம் இன்னிக்கு இருக்கிற பல பெரிய அபத்தங்களோட ஒரு வெளிப்பாடு.

குடியரசு தலைவர் அப்படிங்கிறதே ஒரு அலங்கார பதவி தான். ஆனா எழுத்தளவுல இந்தப் பதவிக்குக் கொடுக்கப்படற முக்கியத்துவம் கண்ணைக் கட்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக சொல்லப்படுகிற மக்கள் பிரதிநிதிகள் மன்றம், செயலாக்கம், நீதி பரிபாலனம் ஆகிய மூன்றிற்கும் ஜனாதிபதி தான் தலைவர். அதோட தரைப்படை, கடற்படை, விமான படை என முப்படைகளின் தலையும் அவரே. அவரே இந்திய நாட்டின் முதல் குடிமகன். உலகத்திலே மிக பெரிய மாளிகையை அவர் குடியிருப்பதற்காக வழங்குகிறார்கள். ஆடம்பரமான கார், பிரத்யேக விமானங்கள், எந்த நாட்டிற்குப் போனாலும் கிடைக்கும் ராஜ மரியாதை என குடியரசு தலைவருக்குக் கிடைக்கும் உபசரணைகள் அளவில்லாதது. அவருடைய தனி செலவுகளுக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்படுகிறது.

எழுத்தளவில் அரசமைப்புச் சட்டம், குடியரசு தலைவர் தன்னுடைய அதிகாரத்தை நேரடியாக செலுத்தலாம் என்று சொல்கிறது. ஆனால் உண்மையில் குடியரசு தலைவருக்கான அதிகாரங்கள் அனைத்தும் கேபினெட் அமைச்சரவையிடம் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் அந்தக் கேபினெட் அமைச்சரவையைத் தன் பிடியில் வைத்து இருக்கும் விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சிலரிடம் தான் இந்த நாட்டை ஆள்கிற அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து இருக்கிறது.

வெளிப்படை தன்மை வேண்டும்
அதிகாரம் வேறு இடத்தில் இருக்க ஒரு பொம்மை எதற்கு அரியணையில் இருக்க வேண்டும்? திரை மறைவில் இயங்குகிற அதிகார மையங்கள் வெளிச்சத்திற்கு வருவதும் அவர்களுடைய ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படுவதும் அவசியமாகிறது. நாட்டின் தலைவிதியை நிர்ணியிக்கிற சக்தியைக் கொண்டவர்கள் தாங்கள் எடுக்கிற ஒவ்வொரு முடிவிற்கும் காரண காரியங்களை மக்களிடம் நேரடியாக விளக்க வேண்டும். வெளிப்படை தன்மையே ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும்.

இன்று தகவல் அறியும் சட்டம் மட்டுமே வெளிப்படை தன்மையை உருவாக்கி விடாது. ஜனநாயக செயல்முறை இன்னும் பல கட்டங்களில் வெளிப்படையாக ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கு காட்சியளிக்க வேண்டும். அதிகார உச்சத்தில் இருப்பவர்களிடம் தொடங்கி உள்ளாட்சி அமைப்பு கவுன்சிலர் வரை தங்களுடைய அலுவல்களை வெளிப்படையாக செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இச்சூழலில் அலங்கார அரியணை இந்த வெளிப்படை தன்மையை மறைக்க தான் பயன்படும். அதை அகற்றினால் தான் அரசு மக்களுக்கு பதில் கூற கடமைப்பட்ட ஊழியனாய் மாறும்.

அதிகார பரவலாக்கத்தின் தேவை
ஒரு நாட்டிற்கு ஒரு தலைவன் என்கிற கருத்தாக்கம் உதிர தொடங்கி விட்டது. நாட்டின் பல முகங்களைப் பிரதிபலிக்கிறவர்கள் ஒன்று கூடி சாதக பாதகங்களை ஆராயந்து நாட்டை ஆள வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்காணிக்க வேண்டிய வலுவான அமைப்பும் அதிகார உச்சத்தில் இருப்பவர்கள் தவறுகள் செய்தால் உடனே தண்டிக்கப்படுவார்கள் என்கிற உறுதிமொழியும் வேண்டும். (நான் அன்னா ஹாசரே ஆதரவாளன் அல்ல!)

அதிகார பரவலாக்கமே ஜனநாயக நடைமுறையை அதிகார துஷ்பிரயோகத்தில் இருந்து காப்பாற்றும். அதிகாரங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்த அடையாளமான குடியரசு தலைவர் பதவி அது அலங்காரமாய் இருந்தால் கூட தேவையா?

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுனர்கள் வேண்டாம்
ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம்.


Comments
One response to “ஜனாதிபதி பதவி தேவையா?”
  1. சுரேகா Avatar
    சுரேகா

    மிகச்சரியான வாதம்.. !! முனிவர் – பூனையைக்கட்டி தவமிருந்ததைப்போல…ஜனாதிபதி என்ற பதவியின் நோக்கம் என்னவென்றே தெரியாமல்…அந்தப்பதவியை வைத்துக்கொண்டு..இன்று நம் ஜனநாயகம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற பதவிகளை விடுத்து, மக்கள் பிரநிதித்துவத்துக்கு இன்னும் ஆழமான முக்கியத்துவம் கொடுத்தால்தான் அடுத்த சந்ததி கொஞ்சமாவது நிம்மதியாய் வாழும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.