அனல் ஆறு

மலை உச்சியில் பெருங்கூட்டம்.
எல்லாரும் முண்டியடிக்கிறார்கள்
பள்ளத்தாக்கில்
அனல்கங்குகளைச் சுமந்து ஓடும்
ஆற்றினைக் காண.

பெருத்த முலைகளையும்
முட்டும் தொப்பைகளையும்
தள்ளியபடி
முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில்
அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான்.

கூட்ட நெரிசல்,
வியர்வை வாசம்,
காலை யார் யாரோ மிதிக்கிறார்கள்.
இரை விழுங்கிய பாம்பினைப் போல
பிதுங்கி நெளிந்து
கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

யாரோ ஒருவர் மலை மேலிருந்து
ஆற்றில் விழுகிறார்.
பிறகு மற்றொருவர்.
அடுத்தடுத்து யாராவது விழுந்து கொண்டே இருக்கிறார்கள்.

யாரேனும் விழும் போதெல்லாம்
சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
தொப் என அது முடிவடைவதற்குள்
அலை அலையாய் மக்களிடையே பரவுகிறது
ஆரவாரமும் கேலி பெரும் சிரிப்பும்.

கூட்டத்தில் எனக்கு முன்னால்
ஒரு குண்டான பெண்
மற்றவர்களால்
உயர்த்தப்பட்டு
தலைகளுக்கு மேலாக உருட்டி செல்லப்பட்டாள்.
மீண்டும் எழுந்தது பெரும் ஆரவாரம்.

என் முலையில்
ஓர் அன்னியனின் கையினை உணர்ந்தேன்.
தொடர்ந்து முளைத்தன
பல கைகள்.
காட்டாற்றில் சிக்கியவளைப் போல
கூட்டத்தில் கைமாறியபடி இருந்தேன்.

யாரோ கடித்தார்கள்.
விரல்களாலே பலாத்காரம் செய்ய முயன்றார்கள்.
ஒருத்தி பலங்கொண்ட மட்டும்
என்னை வயிற்றில் குத்தினாள்.

வலியின் தெறிப்பு படர்ந்த கணத்தில்
என்னை எறிந்தார்கள்.
காற்றில் மிதந்தேன்.
தூரத்தில் ஒலித்தது ஆரவார சத்தம்.
அந்தரத்தில் புரண்டு
தீயின் செந்நாக்குகளை நோக்கி கையை நீட்டினேன்.

குறிப்பு: நான்கு வருடங்களுக்கு முன் பதித்த ஒரு கவிதையினைத் திருத்தி மீண்டும் பதித்து இருக்கிறேன்.