தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.
அவருக்கு இருபது வயதிருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடம குட்டை என்கிற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி கிடையாது. கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் மலை மீது நடந்து தான் அங்குச் சென்றடைய முடியும். மின்சாரமும் கிடையாது. அரசு தண்ணீர் தொட்டி கட்டி தந்தார்கள். என்றாலும் மலைக் கிராமத்து பெண்களின் பகல் நேரத்தின் பெரும்பொழுது தண்ணீரைச் சுமந்து வருவதிலே கழிந்து விடுகிறது. அரிசி எல்லாம் பணக்கார சாப்பாடு அவர்களுக்கு. கூழும் களியும் தான் உணவு.
கடம குட்டை போல முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி அல்லல்படுகின்றன. நாகரீக உலகத்தின் சௌகரியங்கள் அனைத்தும் மறுக்கப் பட்டவர்கள் இவர்கள். யாராவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களைத் தொட்டிலில் கட்டி மற்றவர்கள் மலையில் இருந்து கீழே கொண்டு போய் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை. பலர் இப்படித் தொட்டில் கட்டி கொண்டு செல்லப்படும் போதே மலைப்பாதையிலே உயிர் இழந்திருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பாதி வழியில் பிரசவம் நடந்தது உண்டு. பெரும்பாலும் தொட்டில் கட்டி சுமந்து செல்வது ஆண்கள் தான். பெண்களுக்குப் பிரசவ வலி எடுத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும். பெண்களுக்கேயுரிய அசௌகரியங்களோடு துன்பத்தில் உழல வேண்டிய துர்பாக்கிய நிலை.
மலைப்பாதையில் யானை, கரடி, மலைப்பாம்பு மற்ற விலங்குகளின் தொல்லையும் அதிகம். இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏந்தி தொட்டில் கட்டி நோயாளிகளைச் சுமந்து செல்லும் பயணம் ஆபத்தான ஒன்று. பல முறை யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் கிராமத்தவர்கள்.
தெய்வாணை கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே உடல்நலம் குன்றியே இருந்தார். சத்தான சாப்பாடு எதுவுமின்றி இருப்பதாலோ என்னவோ எப்போதும் சோர்வாகவே இருந்தார்.
ஒரு நாள் மதியம் அவருக்குப் பிரசவ வலி எடுத்த போது ஆண்கள் யாரும் கிராமத்தில் இல்லை. தாங்க முடியாத வலி. ஆண்கள் காட்டில் பிழைப்பிற்காக சுற்றி திரிந்து திரும்பி வர மாலையாகி விடும். அது வரை வலியில் துடித்தபடி இருந்தார் தெய்வாணை. ஆண்கள் வந்த பிறகு அவர்களில் சிலர் அவரைத் தொட்டிலில் கட்டி சுமந்தபடி மலையில் இருந்து இறங்கினார்கள். மழை கொட்டி கொண்டிருந்தது. காற்று பலமாய் வீசி கொண்டிருந்தது. மிகுந்த வலியுடனான அந்தப் பயணம் அவருக்கு மிக நீண்டதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. துணியெல்லாம் நனைந்து போயிற்று.
அவர்கள் மலையை விட்டு இறங்கிய போது இரவு எட்டு மணி. அப்போது ஆட்டோவோ ஷேர் ஆட்டோவோ பஸ்ஸோ எதுவுமில்லை. மலை அடிவாரத்தில் இருந்த ஊர் தலைவரிடம் போய் பேசி இருக்கிறார்கள். அவர் தன்னுடைய பைக்கைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பைக்கில் முன்னால் உட்கார்ந்து ஓட்ட, தெய்வாணை வலியில் துடித்தபடி அடுத்து அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அவரது கணவர். பெருமழையும் புயற்காற்றும் சூழ்ந்த இரவில் பைக்கில் அந்தப் பெண் பிரசவ வேதனையோடு பயணித்து கொண்டிருந்தார். ஒருவழியாய் அவர்கள் ஒரு மருத்துவமனைக்குப் போய் சேர்ந்தார்கள். அது பூட்டப்பட்டிருந்தது. பிறகு செவிலியர்களைக் கெஞ்சி கூட்டி வந்தார்கள்.
தெய்வாணையின் நிலையைக் கண்ட செவிலியர்கள் பயந்து போனார்கள். இந்த நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது என ஒதுங்கினார்கள். அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சி பணிந்து அவர்களைப் பிரசவம் பார்க்க வைத்தார்கள். பெண் குழந்தை பிறந்தது. அடுத்த நாளே படுக்கை வசதி குறைவாக இருப்பதால் மருத்துவமனையில் இருந்து தெய்வாணையைக் காலி செய்ய சொல்லி விட்டார்கள். சொந்தக்காரர்கள் அனைவரும் வந்து மீண்டும் மலைக்கிராமத்திற்கு அவரைக் கூட்டிச் சென்றார்கள்.
முதல் நான்கு நாட்கள் ஒருமாதிரி போனது. அதற்குப் பிறகு தாயும் சேயும் மிகவும் உடல்நலம் குன்றினார்கள். குழந்தையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு நாள் கணவனும் மனைவியும் நடந்தே மலையில் இருந்து இறங்கி அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்து போனார்கள். அங்கு குழந்தையை டவுன் மருத்துவமனை கொண்டு போக சொன்னார்கள். தர்மபுரி மருத்துவமனைக்குக் கூட்டி கொண்டு போன போது அவர்கள் அங்கிருந்து சேலம் மருத்துவமனைக்குப் போக சொன்னார்கள். இதற்குள் தெய்வாணையின் கணவர் மன இறுக்கத்தால் அழுதார்.
“ஒரு பொம்பளையைக் கூட்டிட்டு நான் மட்டும் சேலத்திற்குத் தனியா எப்படி போவேன்? எனக்கு அவ்வளவு பெரிய ஊர்ல வழி எதுவும் தெரியாது,” என குழந்தை போல அழுதார்.
“இனி என் குழந்தை செத்தாலும் பரவாயில்லை. அது நம்ம ஊர்ல சாகட்டும்,” என அவர் தெய்வாணையையும் குழந்தையையும் மீண்டும் ஊருக்கு அழைத்து போய் இருக்கிறார். மலை ஏறுவதற்கு முன் ஊர் தலைவர், மற்றவர்கள் அவர்களைப் பார்த்து ஏன் இப்படி வந்திட்டீங்க என திட்டியிருக்கிறார்கள். பிறகு வேறொரு உபாயமாக அவர்கள் குழந்தை மேல் முனி இருக்கலாம் என அங்கே முனி விரட்டுபவரிடம் காண்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மலைக் கிராமத்திற்கு திரும்புவதற்கு முன்பே குழந்தை இறந்து விட்டது.
இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. அப்பகுதியில் உள்ள முப்பதிற்கும் மேற்மட்ட மலைக்கிராமங்களின் அவல நிலை.
நன்றி: வில்லியம் பிளேக்கின் ஓவியம்
இணைப்பு: தெய்வாணை பற்றியும் மலைக்கிராமங்களையும் பற்றியும் விஜய் டீவி நடந்தது என்ன நிகழ்ச்சியில் ஒளிபரப்பான தொகுப்பு.
Leave a Reply