உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்

உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்

அந்த விபத்து நடந்து இப்போது ஒரு நாளிற்கு மேலாகி விட்டது. இன்னும் ஒரு உடலைக் கூட கண்டு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். 135 மனிதர்களைக் காணவில்லை. 124 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பதினொரு பேர். இடம் உலகத்திலே உயரமான போர்க்களம், சியாச்சின் பனிப்பிரதேசம். இந்திய பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் பதட்டம் நிறைந்த சியாச்சின் மனித உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமே அல்ல. இரு நாடுகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்போதும் இருபுறமும் அங்கு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 6700 மீட்டர் உயரமுள்ள சியாச்சினில் உறைய வைக்கும் கடுமையான குளிர், உயரத்தில் இருப்பதினால் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான அலர்ஜி, அதைத் தொடர்ந்து உருவாகும் நோய்கள், வேகமான காற்று, தனிமை என இங்குப் பணியில் இருக்கும் இரு நாட்டு வீரர்களும் நிறையவே இன்னல்களுக்கு ஆளாக வேண்டியது இருக்கிறது. பனி பிரதேச தனிமை தற்கொலை எண்ணங்களை உருவாக்க வல்லது. இத்தனை இன்னல்களைத் தாண்டி பனிப்புயல் மற்றொரு ஆபத்து. இப்போது அந்தப் பனிப்புயல் காரணமாக தான் பாகிஸ்தான் பக்கம் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. இது வரை இங்கு ராணுவ சண்டைகளில் இறந்த வீரர்களை விட பனி காரணமாக இறந்த வீரர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்கிறார்கள் இரு நாட்டு தரப்பிலும்.

ஆளற்ற பனிப் பிரதேச தனிமை ஆபத்தானது

ஒரு முறை டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். அது தொலைதூரத்தில் இருந்து வரும் ரயில். டெல்லிக்கு வரும்போதே உள்ளே நிறைய ராணுவ வீரர்கள் ஏற்கெனவே நிறைய பயணித்து விட்ட களைப்பில் தூங்கி கொண்டிருந்தார்கள். பயணத்தின் போது ஒரு தமிழ் ராணுவ வீரர் அறிமுகமானார். காஷ்மீரின் வடக்கு பகுதியில் மலைகளில் அவருக்கு வேலை.

“இப்போ அங்க பனி அதிகமா விழற நேரம். நான் நாலு வருஷமா அங்க தான் போஸ்டிங்ல இருக்கேன். வருஷ வருஷம் பனி விழுறதுக்கு முன்னாடி எதாவது சொல்லி இரண்டு மாசம் லீவு போட்டுவேன். இந்த வருஷம் லீவு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எங்க அவுட் போஸ்ட் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா பாலைவனம் மாதிரி கண்ணுக்கெட்டுன தூரம் ஐஸா இருக்கும். ஒரு ஆள், ஆடு, மாடு, ஒரு மரம், செடி கொடி எதுவுமே கிடையாது. நீங்க நடுங்கிடுவீங்க. என்னோட இருந்த ஆள் இப்போ தான் புதுசா இந்த ஏரியாவிற்கு வந்தவரு. மலையாளி. இன்னும் கல்யாணமாகலை. ஆனா வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் இருக்கிறாப்ல என்கிட்ட வருத்தப்பட்ட ஆள் கிடையாது. அவருக்கு அவுட் போஸ்ட்ல எட்டு மணி நேர டூட்டி. நான் எட்டு மணி நேரம் கழிச்சு அவுட் போஸ்ட்டிற்கு போனேன். பனி கொஞ்சம் கொஞ்சமாய் பொழிய ஆரம்பிச்ச நேரமது. அங்க அவரு துப்பாக்கியால சுட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு பிணமாக இருக்கிறதைத் தான் பார்த்தேன். ஆள் பனியைப் பார்த்து பிளாங்க் ஆகிட்டாரு போல.”

மேலும் வாசிக்க: “இரு நாட்டு அரசுகளும் இங்கு ராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்த வேண்டிய அவசியமில்லை. நவீன தொழில்நுட்பம் கொண்டு கண்காணிக்கலாம்.”  – நேஷனல் ஜியோகிராபியில் ஒரு வேண்டுகோள்.