குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அவர் ஒரு புகைப்பட கலைஞர். பாரீஸ் நகரத்தில் அந்தப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் புகழ் பெற்ற ஓவியர்களுக்கு நிர்வாணமாக காட்சி கொடுத்து புகழ் பெற்றவர். பல புகழ்ப் பெற்ற ஓவியங்களில் அந்தப் பெண்ணைக் காண முடியும்.
“உங்களைப் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.
“புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அது வெறும் யதார்த்தத்தினைச் சித்தரிக்கிறது. ஓவியங்கள் அப்படியில்லை,” என்று பதில் சொன்னார் அந்தப் பெண்.
“என்னுடைய புகைப்படங்கள் அப்படி இல்லை. ஓர் ஓவியர் எப்படி ஒரு காட்சியைத் தன் கலாபூர்வ நோக்கங்களுக்காக மாற்றுகிறாரோ அப்படி என்னுடைய புகைப்படங்களை நான் ஓவியம் போல தான் எடுக்கிறேன்,” என்றார் அவர்.
இந்த உரையாடல் இன்று மீ-யதார்த்தம் (சர்ரியலிசம்) பற்றிய விவாதங்களில் முக்கியமானது. காரணம் அந்தப் புகைப்பட கலைஞர் தான் சொன்னதைப் பிறகு செய்தும் காட்டினார். அவர் அந்தப் பெண்ணை வைத்து எடுத்த புகைப்படம் ‘Violon d’Ingres.’ அது இன்றும் புகழ் பெற்ற புகைப்படமாகவும் அதே சமயம் சிறந்த கலைப்படைப்பாகவும் போற்றப்படுகிறது.
கலைஞர்களின் தலைநகரம்
மாண்ட்பார்னாஸ் (தமிழ் உச்சரிப்பு தவறாக இருக்கலாம் – Montparnasse) என்பது பாரீஸ் நகரத்தில் சியன் நதிக்கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு பகுதி. கலைக்கும் அறிவியலுக்கும் போற்றப்படுகிற ஒன்பது கிரேக்க தேவதைகள் வசித்த மவுண்ட் பார்ணாஸ் என்கிற கிரேக்க மலைப்பகுதியின் பெயரில் இருந்து இந்தப் பெயர் உருவானதாக சொல்வார்கள்.கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மாண்ட்பார்னாஸ் பகுதி அறிவுஜீவிகளுக்கும் கலைஞர்களுக்கும் தாயகமாக மாறியது. பித்து பிடித்த காலக்கட்டம் என்று அக்காலக்கட்டத்தை இன்றும் சொல்வார்கள். உலகத்தில் மிக முக்கியமாக போற்றப்படும் பல அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இந்தப் பகுதியில் அக்காலக்கட்டத்தில் வசித்து இருக்கிறார்கள். உலகமெங்கும் இருந்து எழுத்தாளர்களும், ஓவியர்களும், கலைஞர்களும், அறிவுஜீவிகளும் இங்கு குழும தொடங்கினார்கள். தடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் என அக்காலக்கட்டதின் அத்தனை கலைப்போக்குகளிலும் இப்பகுதி அதிக தாக்கம் செலுத்தியிருக்கிறது.
ஜப்பானில் பிரபல ஓவியரான போஜிட்டோ இங்கு தனது மூட்டை முடிச்சுகளோடு வந்த போது அவருக்கு இங்கு யாரையுமே தெரியாது. ஆனால் ஒரே இரவில் அவர் மற்ற புகழ் பெற்ற ஓவியர்களுடன் நட்பு கொண்டு விட்டார். இந்த நட்பு பட்டியலில் பிக்காஸோவும் அடக்கம். பெரும்பாலும் வறுமையில் உழன்று கொண்டிருந்த கலைஞர்களுக்கு மிக குறைந்த வாடகையில் இப்பகுதியில் வீடுகள் கிடைத்தன.
இப்பகுதியில் இருந்த கபேக்களும் பார்களும் எப்பொழுதும் அறிவு மற்றும் கலை சார்ந்த விவாதங்களால் நிரம்பி இருக்கும். மிக குறைந்த கட்டணம் செலுத்தி இங்கு கலைஞர்கள் பல மணி நேரங்கள் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்கள் அப்படியே அங்கேயே உறங்கினாலும் சர்வர்கள் அவர்களை எழுப்ப மாட்டார்கள். அங்கே வாய் சண்டைகளும் அதிகம் நடக்கும். சில சமயம் அடித்து கொள்வதும் உண்டு. ஆனால் யாரும் காவல்துறையினருக்குத் தகவல் சொல்ல மாட்டார்கள். சில ஓவியர்கள் பணத்தைக் கொடுக்க முடியாமல் அதற்கு பதிலாக கபேக்களின் சுவர்களில் தங்களது ஓவியங்களை இலவசமாக வரைந்து விட்டு போவார்கள். அன்று இருந்த இந்த கபேக்களிலும் பார்களிலும் பெரும்பான்மையானவை இன்றும் இருக்கின்றன. அக்காலக்கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் இன்றும் அவற்றின் சுவர்களில் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் சிறந்த மியூசியம்கள் கூட இந்தச் சுவர்களைப் பார்த்து பொறாமைப்படும்.
மாண்ட்பார்னாஸின் ராணி
அலைஸ் இர்னஸ்டின் பிர்ன். இது தான் அவளுடைய பெயர். ஆனால் தன்னை அவள் கிக்கி என்று தான் அழைத்து கொண்டாள், மற்றவர்களிடமும் அப்படியே அறிமுகப்படுத்தி கொண்டாள். அவளை எல்லாரும் மாண்ட்பார்னாஸின் ராணி என்று அழைத்தார்கள்.
திருமணமல்லாத உறவில் பிறந்த அவள் தன் பனிரெண்டு வயது வரை ஒரு ஃபிரெஞ்சு கிராமத்தில் தன் பாட்டியுடன் வறுமையோடு போராடியபடி வாழ்ந்தாள். பிறகு பாரீஸ் நகரத்தில் தன் தாயுடன் வாழ தொடங்கினாள். கடைகளிலும் பேக்கரிகளிலும் பணிப்புரிந்தாள். பதினான்கு வயதில் அவள் ஓவியர்களுக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க தொடங்கி விட்டாள். இதன்காரணமாக அவள் தன் தாயிடமிருந்து மனகசப்புடன் பிரிய வேண்டியதாயிற்று. நைட் கிளப் பாடகியாகவும் நடிகையாகவும் மாடலாகவும் இருந்த கிக்கி ஓவியங்களையும் வரைய தொடங்கினாள். விரைவிலே மாண்ட்பார்னாஸில் இருந்த அறிவுஜீவிகளுக்கும் கலைஞர்களுக்கும் மத்தியில் மிக பிரபலமான நபராக மாறி போனாள். பனிரெண்டிற்கும் மேலான பிரபல ஓவியர்களுக்குக்கு கிக்கி போஸ் கொடுத்து இருக்கிறாள். பிறகு அவள் எழுதிய சுயசரிதத்திற்கு முன்னுரை எழுதியவர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் ஹெமிங்வே.
“தன் அழகான முகத்தில் தொடங்கி தன்னையே கலையாக மாற்றி கொண்டவர் கிக்கி. விக்டோரியன் காலக்கட்டத்தை விக்டோரிய மகாராணி எந்தளவு ஆதிக்கம் செலுத்தினாரோ அதை விட அதிகமாக மாண்ட்பார்னாஸின் காலக்கட்டத்தைக் கிக்கி ஆதிக்கம் செலுத்தினார்,” என்று எழுதினார் ஹெமிங்வே. கிக்கியின் சுயசரிதை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
“ஓர் இரவு நைட் கிளப்பில் நாங்கள் நிறைய பேர் கிக்கியுடன் மது அருந்தி கொண்டிருந்தோம். போதை அதிகமானவுடன் கிக்கி அசிங்கமான அர்த்தம் கொண்ட பாடல்களைப் பாடத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் கூட்டத்தினர் பக்கம் திரும்பி தனது ஸ்கர்ட் துணியை மேலே உயர்த்தி போஸ் கொடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தினாள்,” என்று ஒரு எழுத்தாளர் தனது டைரி குறிப்பில் எழுதி இருக்கிறார்.
பல கலாபூர்வமான முக்கிய நிகழ்வுகளையும் மனிதர்களையும் உருவாக்கிய மாண்ட்பார்னாஸின் பித்து பிடித்த காலக்கட்டத்தின் பிரதிபலிப்பாக இன்று கிக்கியை கொண்டாடுகிறார்கள் கலை விமர்சகர்கள். பாரீஸில் திளைத்து எழுந்த சுதந்திர உணர்வின் முக்கிய அடையாளமாக கிக்கியைச் சொல்கிறார்கள்.
மாண்ட்பார்னாஸிற்கு வந்து குவிந்த பல கலைஞர்களில் ஒருவர் மான் ரே. 1921-ம் ஆண்டு ஜுலை மாதம் மான் ரே அமெரிக்காவில் இருந்து இங்கு குடிமாறினார். 20-ம் நூற்றாண்டின் சிறந்த இருபது கலைஞர்களில் ஒருவர் என மான் ரே-யினை ஏ.ஆர்.டி நியூஸ் இதழ் புகழ்கிறது. புகைப்பட கலை மட்டும் அல்லாது ஓவியம், சிற்பம் என பல துறைகளில் தனது புதிய உத்திகளால் புத்துணர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தினார் ரே. அவர் மாண்ட்பார்னாஸில் தங்கிய முதல் பத்து வருடங்கள் அவரும் கிக்கியும் உறவு கொண்டிருந்தனர். மான் ரேயின் பல புகைப்படங்களுக்கு கிக்கி போஸ் கொடுத்து இருக்கிறார். அதோடு ரே பரிசோதனை முயற்சியாக எடுத்த புது வகை வீடியோக்களிலும் கிக்கி நடித்து இருக்கிறார். எனினும் உலகப்புகழ் பெற்ற புகைப்படம் ரே கிக்கியை வைத்து எடுத்த ‘Violon d’Ingres’ என்கிற புகைப்படம் தான்.
இன்கிரிஸின் வயலின்
இன்கிரிஸ் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃபரெஞ்சு ஓவியர். சரியாக சொல்வது என்றால் 1780-ம் ஆண்டில் இருந்து 1867-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவருடைய ஓவியங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை. இன்கிரிஸிற்கு வயலின் மீது தீராத காதல் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் வயலின் வாசிக்க உட்கார்ந்து விடுவார். வயலின் அவருடைய நேரத்தை எல்லாம் தின்று கொண்டிருந்தது. இன்றும் ஃபிரெஞ்சு மொழியில் ஒரு சொல்வடை உண்டு. யாருக்காவது ஒரு பொழுதுபோக்கு விஷயத்தில் அதீத ஆர்வம் இருந்து அதிலே அவர்கள் மூழ்கி கிடந்தால் அதை அவர்கள் ‘இன்கிரிஸின் வயலினை வைத்திருப்பது போல’ என்று சொல்வார்கள். இந்த ஃபிரெஞ்சு சொல்வடை தான் ரே கிக்கியை எடுத்த புகைப்படத்தின் தலைப்பு ‘Violon d’Ingres.’
புகைப்படத்தில் கிக்கி நிர்வாணமாய் தன் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி முற்றிலுமாய் ஒரு தலைப்பாகைக்குள் இருக்கிறது. முகம் லேசாய் திரும்பியிருக்கிறது. கைகளை முன்னால் வைத்திருப்பதினால் அது பார்வையிலே இல்லை. செதுக்கப்பட்ட சிலை போல அவளது உடல்வளைவுகள். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிக்கி கிழக்கத்திய நாட்டு பெண் போல தோற்றம் கொள்கிறாள். பென்சில் மற்றும் இந்தியன் இங்க் பயன்படுத்தி ரே இந்தப் புகைப்படத்தின் மீது இரண்டு f-களைக் கிக்கியின் முதுகில் வரைந்திருக்கிறார். அந்த இரண்டு f-கள் மிகச் சரியாக வயலினில் உள்ள இரண்டு ஓட்டைகளைப் பிரதிபலிக்கிறது. இப்போது புகைப்படத்தில் தெரியும் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் வயலினாகவும் மாறி நிற்கிறது. ‘இன்கிரிஸின் வயிலினை வைத்திருப்பது போல’ எனக்கு எப்போதுமே கிக்கியின் உடல் மீது விளையாடுவது பிடிக்கும் என்று மான் ரே சொல்கிறார் என நிறைய பேர் இப்புகைப்படத்தின் உள் அர்த்தத்தினை விளக்குகிறார்கள். உள் அர்த்தங்களைத் தாண்டி உலகெங்கும் எண்ணற்ற பேர் இந்தப் புகைப்படத்தில் இருந்து அவரவர்களுக்குத் தோன்றிய உணர்வலைகளைப் பெற்றபடி தான் இருக்கிறார்கள். இன்றும் முதுகில் இப்படி f பச்சை குத்தி கொள்தல் பேஷனாக கூட இருக்கிறது. இன்று இந்தப் புகைப்படம் கலை பற்றிய விவாதங்களில் முக்கியமாக மீ-யதார்த்தவாதம் (சர்ரியலிசம்) பற்றிய விவாதங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஓவியர் இன்கிரிஸ் வரைந்த ஓவியங்களில் ஒன்று பாதர் (The Valpincon Bather.) இதிலே அவர் வரைந்திருந்த அழகிய நிர்வாண பெண் உடல் மிக பிரபலம். இன்கிரிஸ் பிறகு ஒரு முறை வரைந்த துருக்கி குளியல் என்கிற ஓவியத்தில் இடது பக்கம் அமர்ந்திருக்கிற முதல் பெண்மணி மீண்டும் அதே (the valpincon bather ஓவியத்தில் இருக்கிற) பெண்மணியாக இருக்கிறாள். இந்த ஓவியங்களின் தாக்கம் தான் ரேயின் புகைப்படத்திற்குக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு. காரணம் புகைப்படத்திலும் ஓவியத்திலும் உள்ள பெண்ணுடல்களில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
வாழ்வும் மரணமும்
வறுமையில் உழன்று புகழின் உச்சிக்குப் போன கிக்கி மீண்டும் அதே வறுமையில் உழன்று இறந்து போனார். பத்தாண்டுகளுக்கும் மேலாக கிக்கியுடன் உறவு கொண்டிருந்த மான் ரே ஒரு கட்டத்தில் விலக வேண்டியதாக இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு பாரில் மது அருந்தி விட்டு திரும்பிய போது கிக்கி ஒரு போலீஸ்காரரை அடித்து விட்டாள். கிக்கி மதுவிற்கும் போதை மருந்திற்கும் அடிமையாகி காப்ரே நடன பெண்ணாகி பல காதலர்களுடன் சுற்றி திரிந்தாள். இரண்டாம் உலகப்போரில் நாஜி படை பாரீஸை ஆக்ரமித்த போது மாண்ட்பார்னாஸின் பித்து பிடித்த காலக்கட்டம் முடிவிற்கு வந்தது. நாஜி படையினர் சுதந்திர கலை முயற்சிகளை வெறுப்பவர்கள் என்பதால் மாண்ட்பார்னாஸில் இருந்த அத்தனை பேரும் ஊரைக் காலி செய்தார்கள். கிக்கி வறுமையில் உழன்று கிராமத்தில் தன் 51-வது வயதில் இறந்தாள்.
கிக்கியின் இறுதி காலக்கட்டத்தில் மான் ரே அவளுக்கு உதவ முன் வந்ததாகவும் அதற்கு கிக்கி, “எனக்கு வெங்காயமும், பிரெட்டும், சிகப்பு வைனும் போதும்,” என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். ரே வலுக்கட்டாயமாக அவளது கைகளில் பணத்தைத் திணித்த போது அவள் அந்தப் பணம் அத்தனையையும் அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து விட்டாளாம்.
“கிக்கி, மாண்ட்பார்டனாஸின் ராணி, இந்த ஆணாதிக்க உலகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணல்ல, அதே சமயம் பெண்ணுரிமை எழுச்சியின் அடையாளமும் அல்ல. பாலியல் சுதந்திரம் கொண்ட பெண்ணாக விளங்கிய கிக்கி தன்னை வதைத்த காதலர்களை மன்னிக்கும் பெண்ணாகவும் இருந்தாள். ஓவியம், இசை, நடனம், உணவு என வாழ்வின் ஆனந்தத்தினை அனுபவிக்க முற்பட்டவளாக ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் மதுபழக்கத்திலும் போதை மருந்து பழக்கத்திலும் உழன்று மீளா முடியாத நிலையிலும் வாழ்ந்தாள். இருபெரு துருவங்களிலும் உழன்று திரிந்த ஒரு பெண்ணாகவே கிக்கியின் வாழ்க்கை அவளை மாற்றி போட்டது,” என சொல்கிறது சமீபத்தில் வெளியான கிக்கியைப் பற்றிய ஒரு வாழ்க்கைச் சரிதம்.
படங்கள்: விக்கிபீடியா
Leave a Reply